உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்

24/01/2019 09:46

யோவான் 16:20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது    புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும்  உங்கள்  துக்கம்  சந்தோஷமாக மாறும்.    அன்பானவர்களே நாம் இந்த உலகத்தில் எந்தக் காலத்திலும், எந்த பூகோள இடத்தில் இருந்தாலும் அல்லது  எந்த வருடத்திலோ, எந்த நாட்டிலோ வாழ்ந்தாலும், அதாவது உலகில் எந்த மூலையில் எந்த காலங்களில் வாழ்ந்தாலும், வாழும்போது எப்படி வாழவேண்டும், எதற்காக வாழவேண்டும், எதைநோக்கி வாழவேண்டும் என்ற வாழ்வியல் காரணிகளை (FACTORS) நமக்கு எந்த ஒரு புராணமும், இதிகாசமும் அல்லது எந்த மனிதர்களோ தெளிவாக அல்லது புரியும்படி கூறவில்லை.  காலங்கள் மாறலாம், மனிதனும் மாறலாம், ஆனால் வேதமோ, அதின் மூலப்பொருளாகிய ஆண்டவராகிய இயேசுவோ என்றுமே மாறுவதில்லை. இதை வேதம் தெளிவாக அந்தந்த காலத்திற்கு ஏற்ப மனிதனுக்கு எடுத்துக் கூறுகின்றது.  ஒரு குறிப்பிட்ட காரணத்திற்கு விடை தெரியவில்லையே என்று பதட்டம் அடைய தேவையில்லை.  நமது அனுதின எல்லா வாழ்வியல் முறையும் கிறிஸ்துவின் கிருஸ்தவ முறையில் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது கேள்வி!.

நான் 14.10.2018 அன்று அதிகாலையில் ஜெபித்துகொண்டிருந்த வேளையில் கண்ட ஒரு காட்சிதான் இந்த “2023யை  நோக்கி”.  நான் சரியாக பார்க்க முடிந்தது, “2023யை நோக்கி” என்ற சொல்.  வேதத்திலே புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்காவில் மட்டும் 526 தடவை “நோக்கி” என்ற சொல்  வருகிறது. கிருஸ்தவர்கள் எதை நோக்கி இருக்கவேண்டும்? எதை நோக்கி செல்ல வேண்டும்.

கிறிஸ்தவன் ஒவ்வொருவனுடைய விருப்பம் என்னவாய் இருக்கும் என்றால், நாம் இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கை நம்மை அடுத்த வாழ்வாகிய  பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க வைப்பதே ஆகும்.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் ! கர்த்தாவே! கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

நரகம்தான் வாழ்வு என்றால் இந்த உலகத்தோடு ஒத்தவாழ்வு வாழ்ந்தாலே போதும். ஆக ஒருவன் எப்படி அல்லது எப்பொழுது இந்த பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்?. அதாவது கடவுளின்/பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே.  அப்படியென்றால் அவரின் சித்தம் என்ன? பாவத்திற்கு விலகி நீதிக்கு பங்காளியாகி பரலோக நித்திய வீட்டிற்கு ஆயத்தம் செய்வதே இந்த சித்தம். பிறரினின்றும் விலக்கி வைக்கப்பட்ட வாழ்க்கை (secluded) பிரிக்கப்பட்ட வாழ்க்கை (Separated) என்ற இரண்டில், நாம் இந்த உலகத்தில் வாழும்போது முதலில் உள்ள பிறரினின்றும் விலக்கி வைக்கப்பட்ட வாழ்க்கை (secluded) வாழவேண்டுமே ஒழிய பிரிக்கப்பட்ட (Separated) வாழ்க்கையோ அல்லது உலகத்தோடு ஒத்த வாழ்க்கையோ வாழக் கூடாது.  

எல்லோரும் லஞ்சம் வாங்குவதால் நானும் வாங்குகிறேன் என்று சப்ப கட்டு கட்டக் கூடாது. கணவன் வாங்கிய லஞ்சத்திற்கு மனைவி, பிள்ளைகளும், பெற்றோரும் பொறுப்பு. அதேபோல மனைவி கனவு உலகில் வாழ்வதுபோல மிதமிஞ்சிய அலங்காரம் செய்து அடுத்த நபரின் கவனத்தை ஈர்ப்பதும் கணவனும், பெற்றோரும், பிள்ளைகளும் பொறுப்பு. எனது நண்பர்கள் என்னை இந்த பாவம் செய்ய தூண்டினார்கள் என்பதும் தப்பு. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிறு வயதில் சரியாக வளர்க்கவில்லை என்றால் இந்தமாதிரி பாவங்கள் எல்லாம் தொடரும்.    மாய்மாலமான வாழ்க்கை வாழ கிருஸ்தவர்கள் பழகக் கூடாது.

ஒருவன் இந்த உலகம் முழுவதும் ஆதாயம் பண்ணினாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

மத்தேயு 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?   மாற்கு 8:36 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்அவனுக்கு லாபம் என்ன? லூக்கா 9:25 மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

இந்த உலகத்தில் பிறந்த ஓவ்வொருவரும் நாம் இங்கு கஷ்டப்படாமல் இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றனர். இது தவறா? சரியா? என்றால்  இரண்டுமே சரியில்லை. இன்பமும் துன்பமும், கஷ்டமும், நஷ்டமும், சந்தோசமும், சோர்பும் கலந்த கலவை தான் நமது வாழ்க்கை. ஆனால் ஒரு கிறிஸ்தவர் எல்லா சூழ்நிலையிலும் தமது ஆவி, ஆத்மா, மற்றும் சரிரத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்பதுதான் கிருஸ்தவ ஆன்மிகம்.  ஆதி மனிதனும் மனுசியும் ஒரு பழத்தின் மூலம் பாவம் செய்தார்கள் அல்லது தனது ஆன்மாவை கெடுத்துவிட்டார்கள். பலர் பணம் வந்ததும் அல்லது ஏழ்மை வந்ததும் இந்த ஆத்மாவை கெடுத்துவிடுகின்றனர். சிலர் துன்பம், கஷ்டம், சந்தோசம் அல்லது வியாதி வந்தால் ஆத்துமாவை கெடுத்துவிடுகின்றனர். முக்கியமாக மனிதன் ஒவ்வொருவரும் இந்த “திருப்தி” என்ற சொல்லிற்கு தரும் விளக்கம் சரியாக இருக்காது. ஏனெனில் அநேகமாக எவரும் எதிலும் பொதுவாக திருப்தி அடைவதில்லை. இதை, “போதும்” என்று சொல்லுவதில்லை என பொருள் கொள்ளலாம். ஆனால் அநேக கிருஸ்தவர்கள், தங்கள் ஊழியத்தில் அல்லது கிறிஸ்தவத்தில் திருப்தி அடைகின்றனர், நான் ஒழுங்காக ஆலயத்திற்கு செல்கிறேன், காணிக்கை நிறைய செலுத்துகிறேன், ஆலய நிர்வாக குழுவில் அநேக ஆண்டுகள் நிர்வாகியாக இருக்கிறேன், போதகரிடம் அன்பாக இருக்கிறேன், நான் போதகராகவே இருக்கிறேன், அல்லது போதகரின் பிள்ளை/மனைவியாக இருக்கிறேன் என்றெல்லாம் நினைக்கிறோம். இது போதாது என்று வேதம் சொல்லுகிறது. தினம் தினம் ஆன்மீகத்தில் முன்னேறுவதே கிருஸ்தவ வாழ்க்கை. உன்னைப் பார்ப்பவர்கள் இயேசுவை தினமும் பார்க்கவேண்டும். வாரத்தில் ஒருநாள் மட்டுமல்ல.

கீழே உள்ள ஒரு உண்மைச்சம்பவம் இதை தெளிவாக நமக்கு விளக்குகிறது. அப்போஸ்தலர் 3 ம் அதிகாரத்தில் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அங்கே பிறவிச் சப்பாணியான ஒரு மனிதன் அவர்களிடமும் கண்டு பிச்சை கேட்டான். பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

இதன் சம்பவம் நமக்கு தெளிவாக கூறுவது என்ன?

 

முதலில் பிறவிச் சப்பாணி இருக்கும் நேரம் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்கு போனார்கள். அது ஆண்டவரின் சித்தம். இந்த மனிதன் பிறவியிலேயே சப்பாணியாக இருந்ததால் ஆலயத்தில் தினமும் அவரது வீட்டார் ஆலயத்தில் பிச்சை எடுக்க விடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அந்நேரம் அவன் இவர்களைக் கண்டு என்று வேதம் கூறுகிறது. ஆக “கண்டு” என்பதற்கும் “நோக்கி” என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அநேகரில் ஒருவராக காண்பது “கண்டு”. தனியாக ஒரு நோக்கத்தோடு அதாவது நம்பிக்கையோடு பார்ப்பது “நோக்கி”.  அவன் சரியாக பேதுருவையும் யோவானையும் அங்கே நோக்கி பார்க்கிறான்.  ஆண்டவரை முழுவதுமாக நம்பி அவரிடம் நோக்கும் போது அவரும் நம்மை திரும்பி நோக்கிப் பார்க்கிறார். என் பிள்ளை என்னை எப்பொழுது நோக்கிப் பார்ப்பான் அல்லது பார்ப்பாள் என்று எதிர் பார்த்து இருக்கிறார். நமது கடமை அவரை முழுவதுமாக நம்பி அவரை நோக்கிப் பார்க்கவேண்டும்.

 

இரண்டாவதாக, அந்த மனிதன் அவர்களைப் பார்த்து பிச்சை கேட்டான். வசனம் சொல்லுகிறது “அங்கே பிறவிச் சப்பாணியான ஒரு மனிதன் அவர்களைக் கண்டு பிச்சை கேட்டான்”. பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அநேகர் வந்து போகும் ஆலயத்தில் இப்பொழுது இவர்களிடமும் பிச்சை கேட்கிறான். ஆண்டவர் அனுப்பும் நபரிடம் அல்லது வேளையில் கேட்பதுமட்டும்தான் நமது கடமை. கேட்பவர்கள் அதற்குத் தகுதியானவர்களா என்பதுத்தான் நாம் சரியாக கணிக்க முடிவதில்லை. ஆண்டவர் அனுப்புபவர்கள் எங்களை நோக்கிப்பார் என்பார்கள். அதாவது ஆண்டவரின் நாமத்தில் பதில் சொல்லுவார்கள்.

இங்கே பேதுருவும் யோவானும் அவனை “உற்றுப்பார்த்து” என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. அவனும் எதாவது கிடைக்கும் என்று சொல்லி அவர்களை நோக்கிப்பார்த்தான். நாம் உதவி கேட்கிறவர்கள் நமது கேள்வியை அல்லது நமது பிரச்சனையை உள் வாங்குபவர்களாக இருக்கிறார்களா என்பதை முதலில் புரிந்துகொண்டு உதவி கேட்கவேண்டும். இன்று அநேகர் உயிருள்ள ஆண்டவரை அறிந்தும், தெரிந்தும் கல்லிடமோ, கட்டையிடமோ, மனிதர்களிடமோ, சாமியார்களிடமோ, ஊழியர்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ, அதிகாரிகளிடமோ இதை எதிர் பார்க்கின்றனர். ஜோதிடம், ராசி, செய்வினை, பில்லிசூன்யம் வைப்பவர்களையும் நாடுகின்றனர். பலர் பாதயாத்திரை, பால் காவடி போன்றவற்றைக் கூட எடுத்து நம்மை இந்த கடவுள் நினைக்கமாட்டாரா என ஏங்குகின்றனர். கிருஸ்தவர்களும் இதில் விதி விலக்கல்ல, வேளாங்கண்ணி, எருசலேம் போன்ற இடத்திற்கு சென்றால் புனிதம் என்று நினைத்து தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர்.  ஆனால் இங்கே இவன் ஆண்டவரின் பிள்ளைகளிடம் தெரிந்தோ தெரியாமலோ நோக்கிப் பார்த்து கேட்கிறான்.  ஆண்டவரின் அற்புதம் அல்லது பதில் தேவை எனில் காசி, பழனி, திருப்பதி, ராமேஸ்வரம், எருசலேம், மெக்கா, வேளாங்கண்ணி போன்ற இடத்திற்கு செல்லவேண்டுவதில்லை.   நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது அவர் பதில் அளிக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார். ஆமென்..அல்லேலுயா...

இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ?

1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே 
ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே 
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே... --- இயேசுவை

2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே 
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ.. --- இயேசுவை

3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்...

மூன்றாவதாக, இவனுடைய நோக்கத்தை கண்ட பேதுரு அதற்கு மாறாக வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை;  என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்;” என்றார்.  ஆனால் இன்று அனேகர், ஆண்டவரிடம் கார், வீடு, நகை, போன்றவற்றை கேட்கிறோம் அல்லது நமது உடல் சுகம் கிடைக்க அவரை நோக்கிப் பார்க்கிறோம். நமது பிள்ளைகளுக்கு படிப்போ, வேலையோ, திருமணமோ, பிள்ளைபேரோ கிடைப்பதற்காக ஆண்டவரை நோக்கிப் பார்க்கிறோம். இதை தவறு என்று சொல்லவில்லை, ஆனால் நாம் கேட்பது ஆண்டவருக்கு பிரியமாக இருக்க வேண்டும் என எண்ணுவதில்லை. நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பவர்கள், தங்கள் பிள்ளைகளை நல்லவர்களாக முதலில் வளர்க்கவேண்டும், அப்பொழுது நல்ல துணை கிடைக்கும். அனேகர் தனது மகன் அல்லது மகள் திருமணம் செய்தால் சரியாகிவிடுவதாக சொல்லுவார்கள். ஆனால் ஆண்டவரிடம் தனது பிள்ளைகளை சிறுவயது தொடங்கி ஜெபம் செய்ய, வேதம் வாசிக்க, ஆலயம் செல்ல, காணிக்கை கொடுக்க, நல்ல காரியங்களை செய்ய, தவறும் காரியங்களை தட்டிச் சொல்ல அனேக பெற்றோர் தவறிவிட்டு, பிள்ளைகளை அவர்கள் மனம்போல வாழவிட்டுவிட்டு ஆண்டவரே எனது மகனுக்கு அல்லது மகளுக்கு நல்ல துணை/வரன் வேண்டும் என்று ஆண்டவரிடம் மன்றாடுகிறோம். பெற்றோர் செய்யும் தவறு பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.      

 

நான்காவதாக, பேதுரு சொல்கிறான் “நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்,”... நமது விண்ணப்பம் இயேசு கிறிஸ்துவின் நாம மகிமைக்காக இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும். அப்பொழுது நாம் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் மேலாக நமக்கு ஆண்டவர் கொடுப்பார். நீ செய்யவேண்டியது என்னவென்றால் பழைய பாவ வாழ்க்கையை விட்டு விட்டு ஆண்டவரின் நாமத்தினால் எழுந்து நடக்க வேண்டும். ஆண்டவர் நமக்கு வழியை காண்பிக்கிறார், அதாவது நமது வலது கையைப் பிடித்து தூக்கி விடுகிறார். நாம் அதற்கு நமது கையைக் கொடுக்க வேண்டும். சப்பாணியாக இருந்தவன் அவனது கையை நீட்டுகிறான்.  ஆண்டவருக்கு உன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்பொழுது அவர் உன்னை தூக்கி விடுவார்.

சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து 
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே 
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை 
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் 

 

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் 
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் 
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும் 
நாதன் இயேசு என்னோடிருப்பார் 

 

 

ஐந்தாவதாக, “உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து,”.....ஆண்டவரிடம் உன் கையை கொடுத்து என்னை முழுவதுமாக தூக்கிவிடும் என்று கேட்கும்போது, நமது பழைய பாவ வடுக்கள், பாவத்தினால் வந்த சாபங்கள் நீங்கி புதிய பெலன் கிடைக்கும். அப்போதுதான் நீங்கள் நடந்து, குதித்து, எழுந்து ஓட முடியும்.  சப்பானியின் கால்கள் புதியதாக இரத்த ஓட்டம் பெற்று புதிய அனுபவத்திற்குள் வர முடிந்தது. பாவத்தில் இருந்த நம்மை அந்த நிலையிலிருந்து மாற்றி புதிய அனுபவத்திக்குள் கொண்டு செல்ல ஆண்டவரால் மட்டுமே முடியும். பாவமாகிய சேற்றில் இருந்த நம்மை தூக்கி எடுத்து நற்கந்தமுள்ள வாழ்க்கை வாழ ஆண்டவர் அழைக்கிறார். சப்பாணி பிச்சை கேட்டான், ஆனால் ஆண்டவர் அவனை அவனது சொந்தக் கால்கள், கைகளில் வேலை செய்து பிழைக்கும்படி செய்தார். நாம் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்ளுவதற்கும் மிகவும் அதிகமாக நமக்கு தருபவர் நம் ஆண்டவர்”.

 

ஆறாவதாக,   அவன் சுகம் பெற்றவுடன் “தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்”.  ஆம் பிரியமானவர்களே, நாம் ஆண்டவரிடம் அனேக நன்மைகளை அனுதினம் பெற்றுக்கொள்ளுகிறோம். ஆனால் அவற்றிக்காக ஆண்டவரை துதிக்கிரோமா, அல்லது மறந்து விடுகிறோமா? அது வேண்டும், இது வேண்டும் என கேட்க தெரிந்த நமக்கு, அவருக்கு துதி செலுத்துவதுடன், ஆண்டவரின் பிள்ளைகளிடம் அந்த சப்பாணி ஆலயத்திக்குள் சென்று தேவனை துதித்துக் கொண்டு செல்வது போல, நாம் அவரின் பாதத்தில் நன்றி பலிகளை செலுத்துகிறோமா? மேலும் சாட்சியாக நாம் மற்றவர்களிடமும் ஆண்டவரின் அற்புதத்தை சொல்லவேண்டும். ஆம் அருமையானவர்களே நாம் ஆண்டவரை அறிந்து கொண்டால் நமது சுபாவங்களிலும் நடத்தைகளிலும் மாற்றம் வேண்டும் (change in our character and nature)

 

தாவீது சொல்லுகிறான் சங்கீதம் 9:1 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். முழு இருதயத்துடன் நமது ஆண்டவரை துதிப்பதுதான் சரி.  எபிரெயர் 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
அப்போஸ்தலர் 16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

 

நாமாக இருந்தால் மருத்துவரிடமோ, நமது பெற்றோரிடமே, நண்பர்களிடமோ சென்றிருப்போம். ஆனால் அவன் ஆண்டவரின் சமுகத்தில் வந்தான் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

 

ஒருவேளை நாம் வியாதியிலோ, கடனிலோ, வறுமையிலோ, துன்பத்திலோ, திருப்தியின்மையாலோ, நிம்மதியின்மையாலோ, தனிமையாலோ, வாழ்க்கையில் விரக்தியோ, தற்கொலைதான் தீர்வு என்று எண்ணி வாடியிருக்கிரீர்களோ! முதலில் ஆண்டவரை விசுவாசத்தோடு நோக்கிப் பார்க்கவேண்டும். 

இதை வேறு விதமாகவும் பார்க்கலாம், அவன் தனக்கு என்ன கிடைக்கும் என எதிர் பார்த்தது ஒன்று, ஆனால் நடந்தது என்ன? தனக்கு வரும் ஆசிர்வாதங்களை சரியாக புரிந்து கொள்ளாமல், உலகப்பிரகாரமாக அல்லது சரீரப்பிரகாரமாக, பிச்சை அல்லது பணம் வேண்டும் என்று மட்டும் விரும்பினான்.  அவனைப் பொருத்தமட்டில் பணம் வேண்டும், ஆனால் ஆண்டவர் அவனை மற்ற மனிதர்களைப் போல எழுந்து நடந்து தன் காரியங்களை அல்லது வருமானத்தை அவனே ஈட்ட முடியும் என்ற நிலையை அவன் ஒருபோதும் நினைக்கவில்லை.    நன்றி மறப்பது நன்றன்று என்று கூறுவதுபோல ஆண்டவருக்கு நன்றி செலுத்த முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

மேலும் நாம் இந்த உலகத்தில் மாற்றுத் திறனாளியாக (ஊனமாக) பிறந்தாலும் கூட, ஆன்மீக ஊனம் (மாற்றுத்திரனாளி) மட்டும் கூடாது. 

 

கடைசியாக.........ஆனால் இங்கே அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து,  அவனுக்குச் சம்பவித்ததைக் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

ஒருவேளை நாமும் இந்த மனிதனைப்போல அநேக நேரங்களில் நமக்கு ஆண்டவர் கொடுக்கும் ஆசிர்வாதங்களை கண்டு அவருக்கு துதியை செலுத்துகிறோமா? அல்லது துதிப்பதை விட்டு விட்டு மனிதர்களைப் பின்பற்றுகிறோமா. பலர் உலகப் பிரகாரமான காரியங்களை தமது ஜெபத்தில் பிச்சையாக கேட்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். மனித பிரகாரமாக அப்படித்தான் செய்யமுடியும், ஆனால் இப்பொழுது ஆண்டவரை நன்கு அறிந்து நாம் அப்படி செய்வது நல்லதல்ல. ஆண்டவரின் சித்தம் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும்; அதற்கு முயற்சிக்க வேண்டும். நமது சக மனிதர்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பது நமது முதல் கடமை. நமது குடும்பம், தெரு, ஊர், உடன் வேலை செய்பவர், திருச்சபை, திருமண்டலம், மாவட்டம், மாநிலம், நாடு, உலகம், இப்படியாக செல்வது முக்கியம். இதை சிறுவர், வாலிப ஆண்/பெண், திருமண வயதானவர், குழந்தை பேறு வேண்டுபவர், நடு வயதிபர், பெரியவர் ஆண்/பெண், போன்றும், தலைவர்களுக்காகவும், வேலை செய்யும் அதிகாரிகள்/முதலாளிகளுக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும். எத்தனை பேர் ஊழியர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் ஜெபம் செய்கிறீர்கள்.  யோனா 4:11  வலதுகைக்கும்  இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார். இது ஆண்டவர் யோனாவைப் பார்த்து கூறியது.

 

ஆண்டவர் அந்த பிறவிச் சப்பாணியான மனிதனை நேசித்தார் என்பதை வசனம் (நீதி 3 : 12) கூறுகிறது,

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனை சிட்சிக்கிறது போல,கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை சிட்சிக்கிறார்  ஆக சிட்சையை அற்பமாக எண்ணக் கூடாது. சிட்சையில் அவரின் சித்தம் என்ன என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்.      இந்த சிட்சை எந்த உருவத்திலும் நமக்கு தேவன் அனுமதிக்கலாம், அது ஒருவேளை வியாதியாக இருக்கிலாம், பணத்தேவையாக இருக்கலாம், மனிதன் மூலமாக இருக்கலாம். ஆனால் நாம் சோர்ந்து போகக்கூடாது, ...எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய் காணாமல் துக்கமாய் காணும்” (எபி 12:11)

 

மேலும் கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு கிடைக்கும் அற்புதங்களையும், அதிசயங்களையும்,  அனுதின மற்ற காரியங்களையும் ஆண்டவருக்கு பிரியமாக செய்யும்போது மற்ற ஜனங்கள் மிகவும் ஆச்சரியப் பட்டு ஆண்டவரை நோக்கி வருவார்கள். எனக்குக் கிடைத்தது என்னோடு போகட்டும் என்று இருக்கக் கூடாது.  இதுதான் இன்றைய அநேக கிருஸ்தவர்கள் செய்யும் தவறாகும். ஏதாவது கிருஸ்தவர்களிடம் அரிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கும் இந்த உலகத்திற்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும். முதலில் நமக்கு கடவுள் கொடுத்த பல ஆயிரம் காரியங்களை நினைத்து கடவுளை மகிமைப் படுத்தவேண்டும். மற்ற மக்களுக்கு கிடைக்காக ஓன்று “ஆத்தும இரட்சிப்பு”, அதாவது பாவத்திலிருந்து விடுதலை. இந்த உலகத்தில் நாம் அனுதினமும் வாழ்வது அவரின் சுத்த கிருபை என்பதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். இதைப் புரிந்துகொண்டால் நமக்கு தேவன் தரும் சமாதானம் நம்மிடம் தங்கும். மற்றவர்கள் போல நாமும் துக்கித்து புலம்பத் தேவையில்லை.  அதினதின் காலங்களில் நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்” (யோபு 37:5).

      நம்முடைய தேவன் மிகப் பெரியவர், மகத்துவமுள்ளவர், உன்னதமானவர். ஆகவே அவர் நம் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். “இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது” (யோபு 36:26) என்று வேதம் சொல்லுகிறது. இவ்வளவு பெரிய மகத்துவமான தேவன், அற்பமான மனிதர்களாகிய நம்மிடத்திலும் வல்லமையான காரியங்களைச் செய்பவராக இருக்கிறார்.

      நாம் கடவுளைப் பற்றியும் அவருடைய ஞானத்தைப் பற்றியும், வழியைப் பற்றியும்,  குணாதிசயத்தைப் பற்றியும் ஒருபோதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. தேவன் நம்முடைய வாழ்க்கையில் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்” (பிரசங்கி 3:11). ஆகவே நாம் மகத்துவமுள்ள தேவனை  முழுமையாக நம்பி, அவரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுக்கும் பொழுது நம் வாழ்க்கையிலும் பெரிய காரியங்களைச் செய்ய வல்லவராக இருக்கிறார்.

      “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” (ஏசாயா 40:28) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய சுயவிருப்பம் நிறைவேறவில்லையென்றால் சோர்ந்துவிடுகிறோம். ஆனால் நம்மை நேசிக்கிற கர்த்தர் நம்முடைய நோக்கங்களுக்கு மேலாக உன்னதமான காரியங்களைச் செய்ய விருப்பமுள்ளவராக இருக்கிறார். ஆகவே நாம் அவருடைய அன்பை சார்ந்து வாழுவதில் ஒருக்காலும் தவறிவிடக்கூடாது. கர்த்தருக்கு காத்திருப்போம். கர்த்தர் அதினதின் காலங்களில் நேர்த்தியாக காரியங்களைச் செய்வார்.  சுருங்க கூறினால் பிறவிச் சப்பாணி இப்பொழுது அவனது  துக்கம் நீங்கி  சந்தோஷமடைந்தவனாக மாறுகிறான்.

 

இர‌த்த‌க் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்த‌ தீங்கும் தீண்டாது

1. நேச‌ரின் இர‌த்த‌ம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் ப‌லியானார்
பாவ‌த்தை வென்று விட்டார் – இர‌த்த‌க்

2. இம்ம‌ட்டும் உத‌வின‌ எபினேச‌ரே
இனியும் காத்திடுவார்
உல‌கிலே இருக்கும் அவ‌னைவிட‌
என் தேவ‌ன் பெரிய‌வ‌ரே – இர‌த்த‌க்

3. தேவ‌னே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவ‌ரே என் வாழ்வின் பெல‌னானார்
யாருக்கு ப‌ய‌ப்ப‌டுவேன் – இர‌த்த‌க்

4. தாய் தன் பிள்ளையை ம‌ற‌ந்தாலும்
ம‌ற‌வாத‌ என் நேச‌ரே
ஆய‌னைப் போல‌ ந‌ட‌த்துகிறீர்
அபிஷேக‌ம் செய்கின்றீர் என்னை – இர‌த்த‌க்

5. ம‌லைக‌ள் குன்றுக‌ள் வில‌கினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சினேக‌த்தால் இழுத்துக் கொண்டீர்
அண‌த்து சேர்த்துக் கொண்டீர் – இர‌த்த‌க்

 

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 
உங்கள் கவலைகள் கண்ணீர் 
எல்லாம் மறைந்து விடும் 

கலங்காதே மகனே, கலங்காதே மகளே 
என் இயேசு கைவிட மாட்டார் 

1. கடந்ததை நினைத்து கலங்காதே 
நடந்ததை மறந்துவிடு 
கர்த்தர் புதியன செய்திடுவார் 
இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம் 

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் 
உடைந்த உள்ளம் தாங்குகிறார் 
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் 
கண்ணீர் துடைகின்றார் - (உன்) 

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட 
ஒருநாளும் விட மாட்டார் 
தாங்கிடும் பெலன் தருவார் 
தப்பி செல்ல வழி செய்வார் - (நீ) 


5. மாலையில் மகனே அழுகின்றாயா 
காலையில் அக மகிழ்வாய் 
நித்திய பேரானந்தம் 
நேசரின் சமூகத்திலே 

6. அக்கினியின் மேல் நடந்தாலும் 
எரிந்து போக மாட்டாய் 
ஆறுகளை நீ கடந்தாலும் 
மூழ்கி போக மாட்டாய் 

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு 
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு 
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு 
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று 
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 

எங்கள் கவலைகள் கண்ணீர் 
எல்லாம் மறைந்துவிடும் 
கலங்கிடவே மாட்டோம் 
நாங்கள் கலங்கிடவே மாட்டோம்

--

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்திரிப்போமாக.

அனுபல்லவி

நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்.

சரணங்கள்

1. காலம் சொல் போல் கழியும், தண்ணீரைப் போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்ளூ
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாதுளூ
கோலப் பதுமைக்கும், நீர்க் குமிழிக்கும், புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன். 

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்ளூ
பரம பாதையைத் தொடர்ந்தோம்ளூ
வலிய தீமையை வென்றோம், நலியும் ஆசையைக் கொன்றோம்,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்ளூ
கலி என்ற தெல்லாம் விண்டோம். கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்ளூ
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்.

3. சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து, நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண் ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து, தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வியோதமாய்.

--

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் 
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் 
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும் 
நாதன் இயேசு என்னோடிருப்பார் 

1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து 
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே 
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை 
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் 

2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் 
வாஞ்சையுடன் என்னைத்தேடி வந்தார் 
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார் 
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்? 

3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம் 
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன் 
இயேசு அல்லால் ஆசை இப்ப+வில் வேறே இல்லை 
என்றும் எனக்கவர் ஆதரவே 

4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து 
உம் பாதம் சேர்த்திட வாஞ்சிக்கிறேன் 
தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம் கிருபை 
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை 

5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை 
ஆற்றிடுதே உந்தன் சமூகமே 
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன் 
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன