ஊழியம் - 5 நிமிடக் குறிப்பு
ஊழியம் :
31-08-2024 – Saturday –சனிக்கிழமை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் இந்த 2024 வருட ஆகஸ்ட் மாத கடைசி நாளில் என்னுடைய வாழ்த்துதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த 2024ம் ஆண்டின் 244வது நாளில், அதாவது இன்னும் 122 நாளில்(2/3 rd) இந்த வருடம் முடிவடைகிற நிலையில் தேவனுடைய பெரிதான கிருபையினால் உங்களோடு ஆண்டவருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளுவதற்காக ஆண்டவரை துதிக்கிறேன்,
சரி இன்றைய நாளில் வேத பகுதிக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்வோம் : ரோமர் 12:11-13
இங்கே சொல்லப்பட்டிருக்கிறது, அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்..... மேலும் பவுல் அநேக காரியங்களோடு முக்கியமாக இந்தக் காரியங்களை சொல்லுகிறார். ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் நம்மை இரட்சித்து, நமக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தி, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த ஆண்டவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது ஆண்டவரின் விருப்பம். அதைத்தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம். இந்த வசனத்தை ஏதோ ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களுக்கு மட்டும் பவுல் எழுதவில்லை. கிருஸ்தவ விசுவாசிகள் அத்தனை பேரும் எப்படி இருக்கவேண்டும் என்று கூறுகிறார். பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஆசாரியர்கள், லேவியர்கள், ராஜாக்கள், தீர்க்கதரிசிகள் மட்டுமே ஆண்டவருடைய வேலையைப், பணிவிடையை, ஊழியத்தை செய்தார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டில் சிலரை அப்போஸ்தலர்களாக, மேய்ப்பர்களாக, தீர்க்கதரிசிகளாக, போதகர்களாக, சுவிசேஷகர்களாக ஆக அனைவரையுமே ஆண்டவர் அவருடைய ஊழியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். நம்மையும் அப்படியாக அவருடைய ஜீவனுள்ள வார்த்தைகளை எடுத்துச் செல்லும் பிள்ளைகளாக / ஸ்தானாதிபதிகளாக மாற்றி இருப்பதே நமக்கு கிடைத்த பெரிய பாக்கியம். ஆக இந்த உலகில் நாம் எப்படி ஆண்டவரின் பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்றால் “அசதியாயிராமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஆவியிலே அனலாயிருக்கவேண்டும், ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்க வேண்டும். உபத்திரவத்திலே பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்து ஆண்டவரின் ஊழியத்தை செய்வதே கர்த்தர் விரும்புகிறார்.
சரி கர்த்தருக்கு ஊழியம் செய்தால் என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம். இன்று மூன்று ஆசிர்வாதங்களை மட்டும் பார்க்கலாம்:
முதலாவதாக, நாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்போது யோவான் 12:26-ன் பிற்பகுதியில் ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார். நாம் கர்த்தருக்கு மனப்பூர்வமாய் ஊழியஞ்செய்யும் போது மனிதர்கள் நம்மைக் கனம்பண்ணுகிறார்களோ இல்லையோ ஆண்டவர் நம்மைக் கனம்பண்ணுவார். ஆமென் . இங்கே பிரச்சனை என்னவென்றால் நாம் ஆண்டவரின் கனத்தை விட மனிதர்களால் வரும் கனத்தையே அநேகமாக அதிகம் விரும்புகிறோம். அது இல்லாத பட்சத்தில் சோர்ந்து போகிறோம்.
இரண்டாவதாக, எரே 33:22-ல் நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும், எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்கிறார். நாம் ஆண்டவருக்கு ஊழியஞ்செய்தால் நம்மை வர்த்திக்கச் செய்வார். ஆமென். நாம் தேவனுக்கென்று ஊழியம் செய்யாதபடி உலகத்துக்கும், மாமிசத்துக்கும், பணத்துக்கும், புகழுக்கும் வேலை செய்தால் ஆண்டவர் அதை விரும்ப மாட்டார். எனவே நம்மைத் தாழ்த்தி, நம் வாழ்வை, நம் நோக்கத்தை சீர்ப்படுத்தி கர்த்தருக்கே ஊழியஞ்செய்ய அர்ப்பணிப்போம்.
மூன்றாவதாக, லூக்கா 1:71-ல் உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று ஆண்டவர் சொல்கிறார். நாம் செய்யும் ஊழியங்களில் ஆண்டவர் நம்மோடு இருந்து அதைச் செய்தால் பயம் நீங்கும், ஊழியத்தில் பரிசுத்தமும் நீதியும் விளங்கும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
நாம் செய்யும் அனைத்து ஊழியத்திலும் நம் அன்றாட உலகப் பணிகளிலும் மனுஷருக்கென்று செய்யாமல், தேவனுக்கென்றே சகலத்தையும் செய்ய, ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக.
ஒரு சபையில் ஒரு நடுத்தர வயது விசுவாசி ஒருவர் சாட்சி ஓன்று சொன்னாராம். ஆண்டவரின் பார்வையில் நான் ஒரு தூசி, குப்பை, புழு, பூச்சி, நான் ஒன்றுமில்லை, ஆகவேதான் ஆண்டவர் என்னை உயர்த்தினார் என்றாராம். எல்லோரும் ஆமென், அல்லோலுயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று அவரோடு கூறினார்களாம். அன்று சபை முடிந்ததும் அவர் வெளியில் வருகையில் செருப்பு எடுக்கும் இடத்தில் ஒரு வாலிபன் அவரின் காலில் மிதித்து விட்டான். வந்ததே பாருங்கள் அவருக்கு கோபம் “ஏண்டா அறிவு இருக்கிறதா? இந்தப் பயலுகளே இப்படித்தான், என்று சீறினாராம். அந்த வாலிப பையன் அமைதியாக அய்யா sorry தெரியாம பட்டுருச்சி என்றதுடன், வாலிப மிடுக்குடன், இப்பதான் என்னமோ புழு, பூச்சி என்றீர்கள், இப்பொழுது பாம்பு மாதிரி சீருகிறீர்கள் என்றானாம். அவர் அப்படியே வாயடைத்துப் சென்று விட்டாராம். “உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்;” என்று வேதம் கற்பிக்கிறது. அதுமட்டுமல்ல வேதம் சொல்லுகிறது போல “அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்” கலா. 5:13
ஆம் பிரியமானவர்களே, ஆண்டவர் அவருடைய ஊழியத்தை செய்பவர்களை கனம்பண்ணுகிறார், வர்திக்கச் செய்கிறார் அதுமட்டுமல்ல நம் சத்துருக்களின் கைகளில் இருந்து நம்மை விடுதலை ஆக்குகிறார். ஆமென்.