கணவன் மனைவி உறவு

17/12/2020 14:40

கணவர் மேல் மரியாதையில்லை

கேள்வி-பதில் பகுதி

கேள்வி

அன்பு சகோதரிக்கு

என் பெயர் ஜெபமேரி.  என் நெருங்கிய கல்லூரி தோழியிடம் பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக , வாரம் ஒரு தடவையாவது போனில் பேசிக்கொள்வோம். எங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்ளுவோம். போன வாரம் என் தோழி வீட்டிற்கு குடும்பத்தினருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாப்பிடும் போதும், எல்லாரும் உட்கார்ந்து பேசும் போதும் , ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருந்தது.  என் தோழியும் சரி, அவளின் 14 வயது பையனும் சரி அவளின்  கணவரை குறைசொல்லுவதையோ அல்லது அவரின் நடத்தையை கிண்டல் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார்கள். எப்படி இதை சொல்லி, என் தோழியை திருத்துவது எனக்கு ஒரே குழப்பம். உங்கள் ஆலோசனைய எதிர்பார்க்கும் சகோதரி.

பதில்

அன்பு சகோதரி ஜெபமேரிக்கு,  வாழ்த்துக்கள்.  அநேகர் தங்களுடைய பிரச்சனையை பெரிய பிரச்சனையாக நினைத்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் தோழியின் பிரச்சனையை கண்டறிந்து அவர்களுக்கு உதவ விரும்புவதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் கடிதத்திலிருந்து உங்கள் தோழிக்கும் , அவள் மகனுக்கும்  கணவர் மேல் மரியாதையில்லை என்பது தெரிகிறது. அவர்களுக்கு அவர் மேல் ஏன் மரியாதையில்லை என்று யோசிக்க வேண்டும். அவர் ஒழுங்காக வேலைக்கு செல்கிறாரா? குடும்ப பொறுப்பு இல்லாமல் இருக்கிறாரா? கெட்ட பழக்கங்கள் ஏதாவது உள்ளதா? தெய்வபக்தியில்லாமல் இருக்கிறாரா? உங்கள் தோழியிடமும், அவள் மகனிடமும் போதிய நேரம் செலவழிக்காமல் இருக்கிறாரா? அன்பு கூறாமல் இருக்கிறாரா? இதைக் கண்டுபிடித்து ஜெபத்துடன் அவருக்கு லோசனை வழங்கலாம்.

உங்கள் தோழியிடம் ஏன் அவர்கள் அப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்ற காரணத்தைக் கண்டறியுங்கள். 

அவர்களுக்கு எபேசியர் 5:33 வசனத்தை சொல்லவும். அதில் மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாய் இருக்கக்கடவள் என்று உள்ளது.  1 கொரிந்தியர்  11: 3 ஸ்திரீக்கு புருஷன் தலையாய் இருக்கிறான் என்றுள்ளது. புருஷன் குடும்பத்தலைவன்.

ஆகவே கணவன் எப்படிப்பட்டவன் என்பதின் அடிப்படையில் மரியாதை செலுத்துவது அல்ல. அவரின் கடவுள் கொடுத்த தலைமைத்துவதிற்காக அவரை மதிக்க வேண்டும். அதை நம் சுய முயற்சியினால் செய்ய முடியாது. தேவனிடம் உதவியையும், கிருபையையும்  நாட வேண்டும்.

மகனின் முன்னால் அவர்கள் அவரை குறைசொல்வதினால் அவனும் அவரை குறைசொல்லுகிறான். அது அவர்களோடு மாத்திரம் நிற்காமல் வந்திருக்கும் விருந்தினர் முன்பும் குறைசொல்வது கட்டாயம் கணவனை புண்படுத்தும். அது குடும்ப உறவை கட்டாயம் பாதிக்கும். கணவன் மனைவி இருவருக்குமே ஆலோசனை தேவை. நீங்கள் ஜெபத்துடன் முதலில் மனைவியிடம்  அவரின் கணவர் அவரிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை கண்டறியுங்கள். பிறகு கணவனிடம் பேசலாம். தேவன் உங்களுக்கு ஞானத்தை தருவார். வாழ்த்துக்கள்.

( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)

திருமதி ஹெலன் ஜேக்கப், தன் கணவருடன் இணைந்து குடும்பங்கள் மத்தியில் பல வருடங்களாக ஊழியம் செய்து வருபவர்.

 

விளக்கம் :

 

இன்றும் அநேக கிருஸ்தவ குடும்பத்தில் ஆண்களும், பெண்களும் மணவாழ்வு ஆரம்பித்தவுடன் பல சூழலில் முடிவு எடுக்கமுடியாமல் தடுமாறுவது வேதனை அளிக்கிறது.   அதில் கணவன் Vs மனைவி, கணவன் Vs பிள்ளைகள், மனைவி Vs பிள்ளைகள், மனைவி Vs கணவன் வீட்டார், கணவன் Vs மனைவி வீட்டார்  இடையே வரும் பிரச்சனைகள் முக்கியமானது.  அதை எவ்விதம் கையாளுவது என்பதை அவர்கள் வேதத்தின் மூலம் தெளிவு பெறவேண்டுமே ஒழிய அவர்தம் பெற்றோர் கையாண்ட விதத்தின் மூலம் கையாள முயலுகின்றனர் அல்லது பெற்றோரின் அறிவுரையைக் கேட்கின்றனர். ஆகவே ஆலோசனை திருமணத்திற்கு முன்பாக நன்கு வாழ்ந்த பெரியோர் மூலமே வேதத்தின் அறிவுரைகளை  தெரிந்து கொள்ளவேண்டும். 

பெற்றோர்கள் முதலில் இதை தெரிந்து பிற்பாடு அதை பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக சொல்லித்தரவேண்டும். அதாவது வாழ்ந்து காட்டவேண்டும்.  நீங்கள்தான் உங்கள் பிள்ளைகளின் முதல் முன்மாதிரி.   

 

1) சில பெண்கள் அடிக்கடி தங்கள் பெற்றோரிடம் இருந்து வந்த பணம் மற்றும் நகைகளை தனது புகுந்த வீட்டிற்கு முக்கிய நிகழ்வுகளுக்காக செலவழித்த காரியங்களை தன்னுடைய கணவன், பிள்ளைகளிடமோ, தம்முடைய உறவினர்களிடமோ திரும்ப திரும்ப கூறுவது தவறு, பெறும் தவறு.   தயவுசெய்து திருமணத்திற்கு பின் கணவன் மற்றும் பிள்ளைகள் தான் முதல் குடும்பம், கணவர் தலைவர், மனைவி தலைவி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பெண்கள் தங்கள் பிறந்த குடும்பத்தை மதிக்கவேண்டும், தேவைப்படுவோர்க்கு உதவி செய்யவேண்டும், ஆனால் அதற்காக பிறந்த வீட்டின் பெருமையை நாள்தோறும் புலம்புவது தவறு மற்றும் தனது கணவர் & பிள்ளைகளை தானே இழிவுபடுத்துவது அதைவிட பெறும் தவறு.

 

அதாவது தனது தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்வது. இப்படித்தான் அநேக பெண்கள் தங்கள் கணவர் & பிள்ளைகளை மட்டுமல்ல தங்களையே அழித்துக்கொள்ளுகிறார்கள்.  பிற்காலத்தில் நல்ல நிலைக்கு பிள்ளைகள் வரும்போது அந்த பிள்ளைகளும் இந்த தவறை செய்ய முற்படுவார்கள். அது குடும்பத்திற்கு ஒரு சாபமாக அமையலாம். ஆக அடுத்த தலைமுறையைக் கெடுப்பதாகவும் இந்த பண ஆசை அல்லது புகழ்ச்சி இருக்கிறது.

முக்கியமாக பெண்களிடம் புரிந்துகொள்ளுதல், ஞானமாக பேசுதல் மற்றும் சகிப்புத்தன்மை அவர்தம் குடும்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

I தீமோத்தேயு 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.


2) முக்கியமாக நாம் மேலே படித்த நிகழ்வைப்போல மனைவி தன் கணவனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும், மரியாதையையும் கொடுக்காத பட்சத்தில் பிள்ளைகள் கணவனை அசட்டை செய்வது மட்டுமல்ல தக்க நேரத்தில் அவர்கள் இருவரின் சொல்லையும் கேளாத பிள்ளைகளாகுவது இயற்கை.  மட்டுமல்ல சமுதாயத்தில் இருக்கும் மற்ற ஆண் பெரியவர்களையும் மதிக்காதவர்களாக மாறிவிடுவார்கள்.

புருஷன் குடும்பத்தலைவன் : எபேசியர் 5:33 … மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாய் இருக்கக்கடவள்.  1 கொரிந்தியர்  11: 3 ஸ்திரீக்கு புருஷன் தலையாய் இருக்கிறான் என்றுள்ளது.

 

3) கணவன் Vs மனைவி இடையே வாக்குவாதம் நேரிடுமாயின் அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும். கணவரிடமும் மனைவியிடமும் இருக்கும் தனித்தன்மை குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  அநேக குடும்பங்களில், பிள்ளைகள்  சண்டையின் உக்கிரத்தை மட்டுமே அறிந்தவர்களாக கணவனை மதிப்பதில்லை. கணவன் மனைவி இருவரும் இணைந்து எடுக்கும் முடிவே சிறந்ததாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அப்பாவை அடி என்று பிள்ளைகளிடம் கூறுவது, அப்பா என்ன செய்கிறார் என்று பிள்ளைகளை வைத்து கேட்பது முற்றிலும் தவிர்க்கவேண்டியது. 

இவ்விதம் மனைவி அதிகாரம் செலுத்தும் கணவன்மார்கள் மனச்சோர்வு ஏற்பட்டு குறிகிய வட்டத்துக்குள் வந்துவிடுவார்கள், அவர்தம் திறமை வெளியே தெரியாமலே அநேக குடும்பங்களில் மங்கிவிடுகிறது. அவர்கள் சமுதாயத்திற்குள் செல்லும்போதும் அதே தாழ்வு மனப்பான்மை கோணத்தில்தான் இருப்பார்கள். ஆக குடும்பத்தில் மனைவி தனது கணவனை மதிக்காத காரணத்தால் பிள்ளைகளும், கணவரும் பாதிக்கப்படுவர். இது அவர்களின் குடும்ப எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிவிடும். அநேக கணவன்மார்கள் குடிகாரர்களாகியும், போதைக்கு அடிமையாகியும் விடுவதோடு வேறு வழி பார்த்து சென்று விடுவதும் உண்டு.

 

இவ்விதம் நடப்பது பெரும்பாலும் படித்த மற்றும் பணக்கார வீட்டில் இருந்து வரும் பிள்ளைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  குழந்தைகளுக்கு நாம் நல்ல காரியங்களுக்கு மட்டுமே முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

 

பேதுரு 3- 1. அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,  2. போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.  3. மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,  4. அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.  5. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.

 

4) மனைவியின் உடன் பிறந்தவர்கள், கணவனின் உடன் பிறந்தவர்கள் ஒரு வீடோ அல்லது வாகனமோ வாங்கினால் தானும் வாங்க வேண்டும் என்று பல குடும்ப தலைவிகள் நினைப்பதுதான் முதல் கோணல். “விரலுக்கு தக்கதான் வீக்கம் வேண்டும்”. தனது குடும்ப சூழல் அறிந்து செலவு செய்யவேண்டுமே தவிற அடுத்தவரிடம் சமன் செய்து பார்ப்பதே நல்லதல்ல. 

இதைத்தான் பவுல் சொல்லுகிறார் பிலிப்பியர் 4 -  11. …..நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.  12. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.  13. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

 

ஒருவேளை கணவனுக்கு சரியான சம்பளம் வரவில்லை, ஏன் வேலையே இல்லை என்ற நிலை வருமாயின் மனைவி வேலை செய்பவளாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலாலான பெண்கள் கணவனை மதிப்பதில்லை.  
 
"எனது அலுவலகத்தில் வேலை செய்த ஒருவர் தனது பணிக்கொடை வாங்குவதற்கு வரும்போது இவ்வாறாக கூறி அழுதார். சார் நான் எனது அக்கா மகளை விரும்பி மணந்து கொண்டேன் அவளும் சிலகாலம் சந்தோசமாக இருந்தாள். இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.  என்னுடைய சிறிய தவறினால் வேலை பறிபோனது.  அன்றிலிருந்து எனது மனைவி சிறிது, சிறிதாக விலகிப்போக ஆரம்பித்தாள். இப்பொழுது அரசு பள்ளியில் ஆசிரியராக இங்கே இருந்தவர் மாற்றலாகி குழந்தைகளுடன் காரைக்குடி சென்றுவிட்டாள்.  நான் மட்டும் எனது வீட்டில் தனிமையில் இருக்கிறேன்.  இப்பொழுது என்னால் சின்ன சின்ன வேலை கூட செய்யமுடியவில்லை, ஏனெனில் நான் மது போதைக்கு அடிமையாகிவிட்டேன்.  எனக்கு ஒரு சுகவீனம் வந்தாலும் பார்ப்பதற்கு ஒரு ஆள் கூட கவனிப்பதற்கு இல்லை, அனாதை ஆகி விட்டேன் என்றார்."

“கணவனும் தன் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.  இருவரும் பரஸ்பரம் காரியங்களை பேசி தீர்வு காணவேண்டும்”.    

 

அருமையானவர்களே இதை மனைவிதான்(பெண்கள்)  முழுமையாக செய்கிறார்கள் என்று சொல்லிவிடவும் முடியாது, ஆக கணவன்மார்களும்(ஆண்கள்)  தங்கள் மனைவியை தங்கள் சொந்த சரீரங்களாக கருதி அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளவேண்டும்.

 


மாற்கு 10:7, மத்தேயு 19:5:  இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
சங்கீதம் 128:3 உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
நீதிமொழிகள் 19:13 மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
நீதிமொழிகள் 19:14 வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.

I கொரிந்தியர் 11-3. ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.  7. ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

 

 

I பேதுரு 3-7. அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.

 

ஆம் பிரியமானவர்களே நம் சுய முயற்சியால் ஒன்றும் செய்யமுடியாது, தேவனிடம் கிருபையையும்,உதவியையும் நாட வேண்டும்   

 

Please refer my article : https://paulshumanmanagement-in.webnode.in/ குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை...!!