கனிகொடுக்க மூன்று வாழ்வியல் நெறிமுறைகள்-Three ethics for fruitful life
கனிகொடுக்க மூன்று வாழ்வியல் நெறிமுறைகள் - Three ethics for fruitful life :
எபேசியர் 5:16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள்.
அருமையான பிள்ளைகளே, பெற்றோர்களே, நாம் ஒரு கடினமான, பொல்லாத காலத்திற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். மற்ற உலக மனிதர்களோடு நாம் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேறிச் செல்லவதே இன்றைய வாலிபர்களின் ஒரு பெரிய வேலையாக, சவாலாக இருக்கிறது. ஆகவே இந்த இக்கட்டான காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக, நமது வாழ்வை கனிகொடுக்கும் அருமையான வாழ்வாக மாற்றி வாழ அதை அறிந்து, புரிந்து வாழப் பழகிக்கொள்ளுங்கள், பெற்றோரே பிள்ளைகளை அதற்கு ஊக்கப்படுத்துங்கள்.
நாம் வழி விலகிச் செல்ல அனேக காரியங்கள், கருவிகள் (tools) வந்துவிட்டன, வந்துகொண்டும் இருக்கிறது. (Our children are facing so many distractions nowadays). நாம் எந்த பாதையில் செல்வது அல்லது எந்தப் பாதையை தெரிந்தெடுப்பது என்பதே ஒரு சவால் நிறைந்த சூழல் ஆகும்.
நடக்கும் பாதைகள் ஆண்டவருக்கு பிரியமான பாதையா என்று முதலில் ஆராய்ந்து, பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து அந்த வழியில் நடக்க வேண்டும். நமது பெரியோர்கள் இதில் குறைஉள்ளவர்கள் என்று கருதினால் ஆண்டவரின் ஊழியர்கள், குருவானவர்கள், தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்பவர்களை கண்டு கலந்து ஆலோசிக்க வேண்டும். முக்கியமாக ஒரு ஜெப ஐக்கியம் இருக்கவேண்டும் (Prayer Cell). அதிலும் முக்கியமாக ஆண்டவரோடு தனிமையில் உறவாட(ஜெபம் செய்ய) பழகிக்கொள்ளவேண்டும். ஆக, ஆண்டவரே இறுதி முடிவு செய்பவராக உங்கள் வாழ்வில் இருக்க வேண்டும். யாருமேயில்லை என்று ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. உங்களைப் படைத்த ஆண்டவர் உங்களுக்கு துணை நின்று காரியங்களை வாய்க்கப்பண்ணுவார். ஆமென்.
இன்று அனேக பிள்ளைகளுக்கு என்ன படிக்கலாம், என்ன செலவு ஆகும், எங்கு படிக்கலாம், என்ன வேலை கிடைக்கும், சம்பளம் எவ்வளவு கிடைக்கும், திருமணம் செய்ய நல்ல பெண் அல்லது நல்ல பையன் கிடைப்பானா, என்று பலவாறு சிந்தனை செய்கின்றோமே ஒழிய நமது எதிர்கால வாழ்வை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு ஜெபித்துவிட்டு காரியங்களை செய்தால் அவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார் என்றோ, எனது வாழ்வு ஒரு கனிகொடுக்கும் வாழ்வாக மாறும் என்றோ நினைப்பதை விட்டுவிட்டு தேவையில்லாத ஆட்களை நம்பியோ, குறுக்குவழியில் சென்றோ வாழ்வில் சுவீட்சம் அடையலாம் என்று தப்பு கணக்கு போடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதற்குப் பதிலாக நாம் விசுவாசத்தோடு இந்த கீழ்க்கண்ட காரியங்களை முடித்த அளவு கடைப்பிடித்தோம் என்றால் நமது காத்திருத்தல் ஆண்டவரின் பாதத்தில் எட்டும், ஆண்டவரும் ஜெயத்தைக் கட்டளையிடுவார். ஆமென்...முதலாவதாக....
1.நாம் ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும்(We must live an exemplary life)
நம்மைப் பார்ப்பவர்கள் இயேசுவைப் பார்க்கவேண்டும். நமது செயல்கள் அவர்களை வித்தியாசமாக (நல்நடக்கைகள் மூலம்) தோன்றும் கோணங்களில் சிந்திக்கத் தூண்டவேண்டும்.
ஒரு நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வருகிறது .....சில வருடங்களுக்கு முன்பதாக நடந்தது. ஒரு பெரிய கார்பரேட் நிறுவன பிராந்திய மேலாளர், மாற்று மதத்தைச் சேர்ந்தவர், வந்தபோது அவரின் முகத்தில் அதின் அறிகுறிகள் நன்றாகத் தெரியும் மூன்று விதமான பொட்டுகள் வைத்திருப்பார். நல்ல ஆஜானுபாகமான உடல் அமைப்பு. எப்பொழுதும் மூன்று நான்கு நபர்கள் படைசூழ வரூவார். அவர் பல மாதம் கழித்து மறுபடியும் வந்தபோது அந்த மூன்று விதமான பொட்டுகள் அவரின் நெற்றியில் இல்லை. அவர் நேராக எனது இருப்பிடம் வந்து அமர்த்தவர் (பொதுவாக அவர் என்னிடம் விற்பனை சம்பந்தமாக பேசும்போது மட்டுமே வருவார்- அல்லது எனது proprietor அருகில் தான் சென்று அமருவார்) கூறியது என்ன தெரியுமா “Praise the Lord-brother”. நான் ஒரு நிமிடம் திகைத்து இருக்கும்போது கைகுலுக்கி திரும்பவும் சொன்னார். அவர் சொன்னது என்னவென்றால், கிருஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இப்படியாக கூறினால் நன்றாக இருக்கும் என்றார். அவர் சில மாதங்களுக்கு முன்பதாக தனது மனைவிமூலம் ஆண்டவரை அறிந்துகொண்டது அப்பொழுதுதான் சொன்னார். அன்பு தங்கையே, தம்பியே உன்னைப் படைத்த ஆண்டவர் எவ்வளவு பெரியவர், மகத்துவமானவர், உயிரோடு இருக்கும் ஆண்டவர், எப்பொழுதும் 24/7 நம்மைப் பார்க்கும் அந்த ஆண்டவரை வணங்கும்நாம் நமது சக கிருஸ்தவ நண்பர்களை காணும்போது “Praise the Lord” or “Peace be to you” என்றோ, பெரியவர்களைப் பார்த்தால் “ஸ்தோத்திரம்” என்று கூறுவதற்கு இன்னும் பழக வில்லையே. வேதம் சொல்லுகிறபடி நமது நடை, உடை, சொல், செயல், பழக்கவழக்கங்கள் ஆண்டவர் பிரியப்படும்படி இருக்க வேண்டும். ..இரண்டாவதாக ...
2.நாம் பாலியல் காரியங்களில் ஞானமாக செயல்படவேண்டும். (We should act wisely in sexual matters).
பசி, தூக்கம், தாகம் போன்ற ஒரு உணர்வுதான் இதுவும் என்று பிள்ளைகளுக்கு பெற்றோர் புரியவைக்க
வேண்டும். அது பெற்றோரின் ஒரு முக்கிய கடமையும் ஆகும். அதுவே வாழ்க்கை என்று ஆகக்கூடாது.
ரூத் 3 இங்கே நாம் போவாசுடைய தூய்மையான நடத்தையையும், அவனது ஞானமான ஆலோசனையையும் பார்க்கலாம். ஆதியாகமம் 39 .....இதை நாம் யோசேப்பின் வாழ்விலும் பார்க்கலாம், எகிப்தின் அதிபதி போத்திபாரின் மனைவி அவனிடம் ஆசை வார்த்தைகள் கூறி தவறாக நடக்க முற்படும்போது, அவன் இணங்கவில்லை. ஆம் பிள்ளைகளே! அவனுடைய தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் அவன் பாலியல் இச்சைக்கு நீங்கி, அனேகருக்கு நீதி செய்கிறவனாக காணப்பட்டான். ஆகவேதான் அவன் எகிப்தின் அதிபதியாக உயர்த்தப்பட்டான். தானியேலின் வாழ்விலும் நாம் இதைப் பார்க்கலாம். இதை நாம் ஈசாக்குக் மனைவியாக நியமிக்கப்பட்ட “ரெபெக்காளிடமும்” காணலாம். ஆதியாகமம் 24-16 அந்தப்பெண் (ரெபெக்காள்) மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்”.....ஆண்டவர் நமக்கு நியமிக்கும் உறவுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
பிரசங்கி 11:9 வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.......இத வசனம் உன்னுடன் பேசட்டும்....
இந்த வயதில் பாலியல் காரியங்களில் சிக்கி சின்னாபின்னமாகி வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு வாழ்வதைக் காட்டிலும் தைரியமாக எந்த சூழ்நிலையிலும் மனரம்மியமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும். புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் கட்டுகிறாள். அதற்கு எதிர் என்ன “புத்தி இல்லாத ஸ்திரி தன் வீட்டை இடிக்கிறாள்”. எத்தனை கிறிஸ்தவக் குடும்பங்கள் இதில் சிக்கி, சின்னாபின்னமாகி நல்ல வேலை, நல்ல பணம், நல்ல குடும்பம் ஆனால் நல்ல வாழ்க்கை இல்லை. சிலர் இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப் படுகின்றனர், சிலர் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று அங்கலாத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெரியோர்களும், நமது பிள்ளைகளுக்கு பாலியல் குறித்து அறிவுரைகளைக் கூறுவதோடு நாமும் ஒரு முன் உதாரணமாக நடக்க வேண்டும். இந்த காரியம், ஒரு ரோஜாப் பூவைப் பறிக்க ஆசைப்பட்டு சேலை முள்ளில் சிக்கிக் கொண்டால் அதை எடுக்கும்போது கவனமாக எடுக்கவேண்டும். இல்லையென்றால் முள் குத்தி இரத்தம் வரும் வலியும், வேதனையும் கூடவே வரும். பெற்றோர்கள்தான் இதை சரியாக கையாளவேண்டும். ஒரு தகப்பன் சிகரெட் குடிப்பது தப்பு என்று சொல்லிவிட்டு, அவர் தெருவின் முனையில் நின்று நண்பர்களுடன் சிகரெட் பிடிப்பது தவறு. You should be a role model for your children. மொபைல் போனின் பயன்பாடும், இணையத்தின் பயன்பாடும் பெருகிவிட்டன. குழந்தைகளுக்கு என்று அனேக Appகள், ஆப்பு வைக்கின்றன, ஆம் பெருகிவிட்டன. ஆக குழந்தை வளர்ப்பிலும் ஒரு வித்தியாசமான மாற்றங்களை கையாளவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிறு பிள்ளைகள் என்ன mobile App என்றுகூட தெரியாமல் வேண்டாத காரியங்களை பார்க்க நேரிடுகிறது.
ஆம் பிரியமான பிள்ளைகளே,... I பேதுரு 3:12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
ஆண்டவர் உன்னுடைய வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்யவேண்டுமானால் நீங்கள் நீதிமானாக இருக்கவேண்டும், நீதிமானாக இருக்க வேண்டுமானால் சிற்றின்பங்களுக்கு விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும், இதுவரை இல்லையென்றால் பரவாயில்லை, இன்றிலிருந்து நீதிமானாக, பரிசுத்தமாக முயற்சி செய்வோம். அப்பொழுது உன்னுடைய வாழ்வு ஒரு கனிகொடுக்கும் வாழ்வாக மாறும், அதுதான் ஆண்டவருக்கு பிரியம், ஆண்டவரின் சித்தம்.......கடைசியாக
3.நமது வாழ்வின் குறிக்கோள் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கவேண்டும். (Our goal in life should be success)
லூக்கா 16:8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
இன்றைய நாட்களில் நாம் உலகத்தோடு போட்டிபோட வேண்டும். அதற்கு முதலில் நம்மை தயார் படுத்த வேண்டும்.
நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
அனேக கிருஸ்தவ பிள்ளைகள் இந்த வசனத்தை சரியாக புரியாமல், நான் சரியாக படிக்காமல் பாஸ் செய்வேன் என்றோ, சரியாக வேலை செய்யாமல் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றோ நினைப்பது தவறு. தற்பொழுது நீங்கள் பாஸ் செய்வது முக்கியமல்ல, நல்ல மார்க், Grade எடுத்து போட்டிக்கு முழு தகுதி பெறுகிறவர்களாக இருக்கவேண்டும்.
Usain Bolt என்ற ஜமைக்கா நாட்டு வீரன் 9.58 sec. 100 mtrs World record வைத்ததை ஆராய்ச்சியாளர்களே வியந்து பார்த்தனர். His father was a petty shop owner, he is also a Cricket player. அவனது வாழ்க்கையின் நோக்கமே நாம் இந்த உலகத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரானாக வரவேண்டும் என்பதே. அதற்கு அவனது வாழ்க்கை ஒரு “U” turn அடிக்கவேண்டும், மாற்று பாதையில் மாறவேண்டும் என்பதை அவனது பள்ளி ஆசிரியர் மூலம் தெரிந்துகொண்டு, பல இன்னல்களை கடந்து, கற்றுக்கொண்டு கிரிக்கெட் வீரன் என்பதை விட ஒரு “உலகின் அதிவேக வீரன்(Fastest man on earth)” என்ற பட்டம் பெற்று அதிக சம்பாத்தியம் பெற்று இன்று அனேக சிறுவர்களை ஊக்குவிக்கும் ஒரு பெரிய காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்.
எனது அனுபவத்தில் நான் சொல்லுவது என்னவென்றால், வேதத்தின் சில பகுதிகளை பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப சிறுவர்களாக இருக்கும்போது மனனம் செய்து எழுதும் போது அது அவர்களை உயர்த்தும், பிள்ளைகளே வசனம் தான் உன்னை உயர்த்தும், ஜெபம் தான் உன்னை வழிடத்தும், பரிசுத்த ஆவியானவர் உன்னை பரிசுத்தத்தில் நடத்துவார், தீமை உன்னைத் தீண்டாது. ஆவியானவர் உன்னோடு இருந்து பெரிய காரியங்களை செய்வார், இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். வசனம் உன் உள்ளத்திலே இருக்கும்போது நீ இந்த உலகத்தில் முன்மாதிரியான வாழ்க்கை வாழமுடியும், பாலியல் இச்சை போன்ற மற்ற ஆசா பாசங்களுக்கு இடங்கொடாமல் இருக்க முடியும், வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ முடியும்..
எத்தனை கிருஸ்தவ பிள்ளைகள் IAS, IPS, IFS, IIT, IIM, SCIENTISTS, AUDITORS ஆக முயற்சி செய்தீர்கள். ஆண்டவரின் பிள்ளைகளுக்கு பயம் இருக்கவே இருக்காது. பயம் இருந்தால் ஆண்டவர் உன்னுடன் இல்லை என்று அர்த்தம். தோல்வி அடைவது இயற்கை, ஆனால் அதைக் கண்டு துவண்டு பயந்து போவது சாத்தானுக்கு பிடித்தம். ஆனால் ஆண்டவர் விரும்புவது என்னுடைய பிள்ளை போராடி வெற்றி பெற வேண்டும், சிலருக்கு உடனே வெற்றி வரும், சிலருக்கு சற்று காலம் செல்லும். ஆண்டவரின் பாதத்தில் பொறுத்திருந்து வெற்றியை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். உன்னால் முடியும் தங்கையே, தம்பியே. ஆண்டவரின் துணையோடு முயற்சி செய் ஆண்டவர் வெற்றியைத் தருவார். சோர்ந்து போகவே கூடாது. சோர்வு சாத்தானின் ஆயுதம். ஜெபமே ஜெயம், ஆண்டவரின் வார்த்தையே நமது வெற்றியின் இரகசியம்.
பெற்றோரே, எனது பிள்ளைகள் சுதந்திரமாக அனைத்துக் காரியங்களிலும் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள், முதலில் ஆண்டவரிடம் அவர்களை ஒப்புக்கொடுங்கள், அவர்களுக்கு வேதம் வாசிப்பது, ஆண்டவரோடு ஜெபத்தில் இருப்பது, வேத வசனத்தின் படி நடப்பது போன்ற காரியங்களை சொல்லிக் கொடுத்தாலே போதும் நீங்கள் வெற்றி பெற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளை ஒரு பெட்டியில் வைத்து அடைகாப்பது போல அடைத்து வைத்திருப்பதும் நல்லதல்ல. அவர்களை சுதந்திரமாக ஆண்டவரின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள். ஆண்டவர் பார்த்துக்கொள்வார். அவர்களை தூரத்தில் இருந்து கண்காணித்துக்கொண்டே இருங்கள் அது போதும். அவர்களுக்காக அனுதினமும் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்க்க முடியாது, ஆனால் வாழ்ந்து காட்ட முடியும்.
ஆகவே நமது வாழ்வு ஒரு கனிதரும் வாழ்வாக மாற விரும்பினால் மேற்சொன்ன மூன்று காரியங்கள் நமது வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்.
1. நாம் ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும், அதற்கு நம்முடைய தேவனை மறக்கக்கூடாது - ஏசாயா 51 : 12. அதுதான் ஆண்டவராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு வாழும் இரட்சிப்பின் அனுபவம், சாட்சியின் அனுபவம்.
2. நாம் பாலியல் காரியங்களில் ஞானமாக செயல்படவேண்டும் - அதற்கு பரிசுத்த வேதாகமத்தை மறக்ககூடாது -சங்கீதம் 119 -109. வேதாகமத்தை தியானிக்கவேண்டும் (படிக்க மட்டும் கூடாது)
3. நமது வாழ்வின் குறிக்கோள் வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கவேண்டும். அதற்கு தேவன் நமக்கு செய்த நன்மைகளை மறக்ககூடாது - உபாகமம் 8-2. அனுதினமும் ஜெபத்தில், வேத வாசிப்பில் அனைத்து காரியங்களையும் வைத்து பிற்பாடு செய்யவேண்டும்.
இதில் நமக்கு நன்மை செய்தவர்களையும், புறஜாதியரையும் கூட நாம் மறக்ககூடாது. முக்கியமாக இந்த உலகத்தில் நீ வருவதற்கு காரணமான பெற்றோரை மறக்ககூடாது.
வருங்காலங்கள் மிகவும் கடினமானதாக, பொல்லாததாக இருக்கும், ஆக ஆண்டவரைப் பற்றிக் கொண்டு வாழவில்லை என்றால் நமது கதி மிகவும் பரிதாபமாக மாறிவிடும். ஒருவேளை எனது பெற்றோரிடம் பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, சமுதாயத்தில் பெரிய இடத்தில் இருக்கிறார் ஆகவே நான் எதைக்குறித்தும் கவலைப்பட தேவையில்லை என்போம் என்றால் நம்மை நாமே வஞ்சிக்கிரவர்களாக இருப்போம்.
ஒருவேளை என்னிடம் எதுவும் இல்லை, உதவி செய்ய யாரும் இல்லை என்றும் நினைக்கலாம். யாரும் தேவையில்லை. ஆண்டவர் மட்டும் போதும், உன் நிலை மாறும், வெற்றி வரும்.
எபேசியர் 5:16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள் பிள்ளைகளே, ஆண்டவர்தாமே தங்களின் வருங்கால வாழ்வை ஆசிர்வதிப்பாராக. நீங்கள் வருங்காலத்தில் ஒரு பெரிய தொழிலதிபராகவோ, அரசு / தனியார்துறை அதிகாரிகளாகவோ, உண்மையான ஊழியராகவோ மாறி ஆண்டவரின் இராச்சியத்திற்கு அநேகரை ஆதாயப்படுத்த வேண்டும்.
லூக்கா 2 52 – இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தி அடைந்தார்....ஆமென்
இப்படிக்கு S பால் சுரேஷ்குமார், MBA(HR&IR), பசுமலை- 9842971959
https://paulshumanmanagement-in.webnode.in
https://paulshumanmanagement-in.webnode.in