சிலுவையில் ஆண்டவர் இயேசு அருளிய முதலாம் வசனம்

08/04/2026 14:35

சிலுவையில் ஆண்டவர் இயேசு அருளிய முதலாம் வசனம்

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ,    உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே,   அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே –

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை, கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால், நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

அன்பின் பரிசுத்தஆவியானவரே, இந்த முதலாம் வசனம் எனக்கு என்ன போதிக்கிறது என்று பார்க்கும்படியாக எங்கள் ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய கண்களை திறக்க வேண்டுமாய் ஆண்டவர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே.

 

லூக்கா 23 :   34 அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

 

ஒரு மனிதனின் உடலில் இருந்து சில மணிநேரங்களில் உயிர் பிரியப் போகிறது என்பதை உணரும் அந்த இறுதி நிமிடங்களில், அவனுடைய சிந்தனை, பேச்சு மற்றும் செயல் எப்படி இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது?                               

 

இன்று பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றன. உறவினர்களைவிடவும், நோயாளிகளுடன் அருகிருந்து கவனிக்கும் செவிலியர்களே (Nurses) அந்த இறுதி நிமிடங்களின் சாட்சிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பகிர்ந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மரணத் தருவாயில் இருப்பவர்களின் மனநிலை குறித்து இதோ சில தகவல்கள்:

அவர்கள் வேண்டுவது எல்லாம் உறவுகளின் அரவணைப்பு :

1) “என் கையை ஆதரவாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.”,

2) “என் பக்கத்திலேயே இருங்கள், என்னை விட்டு விலகிப் போகாதீர்கள்.”

3) “எனக்கு பயமாக இருக்கிறது.”(தனிமை)

தீராத ஏக்கங்களும் வருத்தங்களும் : வாழ்நாளில் எதையோ தேடி ஓடியவர்கள், கடைசியில் அன்பைத் தொலைத்ததை எண்ணி வருந்துகிறார்கள்.

4) “நான் அன்பைக் காட்டுவதற்கு நேரமே ஒதுக்கவில்லை” (குடும்பத்தினரிடம்/மனைவியிடம்/கணவனிடம்)

5) “நான் நேசித்தவர்கள் என்னை விரும்பவில்லை; என்னை விரும்பியவர்களை நான் நேசிக்கவில்லை.” போன்ற ஆதங்கங்களே அவர்கள் மனதில் மிஞ்சியிருக்கிறது.

ஆக, மரணத்தின் விளிம்பில் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பே பிரதானம் என்பது வெளிப்படுகின்றது. யாராவது அன்புடன் பேசி, பாசத்துடன் கையைப் பிடிப்பார்களா என்று பார்த்தபடிதான் பல உயிர்கள் பிரிகின்றன.

 

உலகத்தில் இருந்த முக்கிய நபர்களில் சிலர் மரிக்கும் தருவாயில் பேசிய கடைசி வார்த்தைகள்: -

மாவீரன் நெப்போலியன்:–(பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தவர்).   தன் மனைவியின் பெயரை ‘ஜோஸபைன்! ஜோஸபைன்!!என அழைக்க உயிர் பிரிந்தது.

பாப்டிஸ்டு பிரசங்கி சார்லஸ் ஸ்பர்ஜன்: இயேசு எனக்காக மரித்தார்.

அன்னை தெரேசா ,  “இயேசுவே உன்னை நேசிக்கிறேன், இயேசுவே உன்னை நேசிக்கிறேன்” என்று கடைசியாக கூறினார். 

 

மரணத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திப்பார்கள்.  ஆனால் நமது அருமை ஆண்டவர் இயேசு மற்றவர்களின் நலனில்/மீட்பில் அக்கறை கொண்டு இந்த வசனத்தில் ஜெபிக்கிறதை நாம் காணலாம்.

 

ஆண்டவர் இயேசு மரிக்கும் தருவாயில் சொன்ன முதல் வார்த்தையை தியானிக்கும் முன்பதாக அமெரிக்காவில் ஒரு நடந்த நிகழ்வை பாப்போம்:-

ஒரு மூன்று வயது சிறுவன் தன்னுடைய அப்பாவுடன் அவர்களது காரை சுத்தம் செய்து கொண்டிருந்தபொழுது அந்த பையன் காரின் பின்பக்க கண்ணாடியில் ஒரு சின்ன ஆணியை எடுத்து என்னமோ எழுதிக்கொண்டிருந்தான், அதை திடீரென்று பார்த்த அவன் அப்பா, என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டதுடன் கோபத்தில் கையில் இருந்த ஒரு ஸ்பானோர் (Spanner) ரை வைத்து அந்த சிறுவனின் கையில் அடித்து விட்டார்.  அவன் கத்தி அழுததுடன் ரத்தமும் கையில் இருந்து வந்தது.  உடனே மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் ஒரு சின்ன கிராக் கை எலும்பில் இருந்தது தெரிந்து மாவு கட்டுப் போட்டு திரும்பி மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பியதும் அந்த ஆணியால் எழுதிய இடத்தைப் பார்த்ததும் அப்படியே இன்னும் அதிகமாக ஏங்கி ஏங்கி அப்பா அழுது விட்டார்.  அப்படி என்ன அதில் எழுதி இருந்தான் தெரியுமா "I Love you Dad”. அன்பு சகோதர, சகோதரிகளே , உலக தந்தையின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும், ஆனால் நமது பரம தகப்பன் நமது எண்ணங்களை அறிந்தவர், நமக்கு பாவ மன்னிப்பை கொடுப்பதுடன் தண்டனையில் இருந்தும் நம்மை தப்ப வைப்பவர். ஆமென்

 

பிரியமானவார்களே, மரணத்தருவாயில் யாரும் உதவிக்கு இல்லாத தனிமையில், வேதனையில், ரத்த வெள்ளத்தில்,  துக்கம், பாடுகள் நிறைந்த சூழலில் பண்ணின ஜெபம் இது, Father, forgive them, for they do not know what they are doing.”  ஒருவேளை கிறிஸ்தவர்களாகிய நமக்கு அதிக நெருக்கங்கள், வியாதிகள், பிரச்சனைகள், கடன் தொல்லைகள், தோல்விகள் வரும்போது ஆண்டவரை அநேக நேரங்களில் மறந்து விடுகிறோம் அல்லவா, ஆனால் மரணவிளிம்பில் இருக்கும்போதுகூட கிருஸ்து மற்றவர்களுக்காக ஜெபிப்பது நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறதாக இருக்கிறது.

முதலாவதாக,

  1. இது ஒரு ஜெபம் என்பது நாம் அனைவரும் அறிந்தது, அதாவது இயேசு சக மனிதர்களின் பாவங்களை மன்னிக்க பிதாவிடம் பரிந்துறைக்கும் ஜெபம்::-

 

அப்பொழுது இயேசு…… எப்பொழுது …..அவரோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு குற்றவாளிகள், போர்சேவகர்கள், நூற்றுக்கு அதிபதி, அதிகாரிகள், பரிசேயர், சதுசேயர், பொது ஜனங்கள், ஆக பலர் அந்த இடத்தில் இருக்கும் பொழுது என்று வேதம் கூறுகிறது.           இயேசு ஏன் இவ்வாறு ஜெபிக்கிறார்:     மனுக்குலம், பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெறவேண்டும் என்றும், வேத வாக்கியம் நிறைவேறவேண்டும் என்பதற்காகவும் இயேசு இவ்வாறு ஜெபிக்கிறார்அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம், அநேகரை அவருக்கு பங்காகக் கொடுப்பேன்; …..(ஏசா.53: 12).

மேலும் இயேசு கூறினார், மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார் (மத்.6:14). மத்தேயு 6 -15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

 

ஒருவேளை, அநியாயம் செய்த நமது பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டையிட்டுவிட்டு, “ஆண்டவரே, எனக்கு அநியாயம் செய்த எனது பக்கத்து வீட்டுக்காரனை நீர்தாமே தண்டியும்” என்று ஜெபிப்பது சரியா? இது தேவனுக்குகந்த ஒரு ஜெபமாக இருக்குமா? நமது ஜெபங்கள் அர்த்தமுள்ளதாய் இருக்கவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். எப்படி ஜெபிக்க வேண்டும் என்று இயேசு இங்கே காண்பிக்கிறார்.   நமது ஜெபம் பழிவாங்கும் ஜெபங்களாகவும், மற்றவர்களை குறைசொல்லும் ஜெபங்களாகவும் இருக்கிறதா. அல்லது ஆண்டவர் சொல்லிக் கொடுத்தபடி துரோகிகளுக்காக ஜெபிக்கும் ஜெபமாக இருக்கிறதா. சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது மற்றவர்களுக்காக ஜெபம் பண்ணினார்.     (லூக் 23:34)   அதன்விளைவு:   சிலுவையில் அறையப்பட்ட ஒரு குற்றவாளி மனந்திரும்பினான்.(லூக்கா 23:40,42,43) இன்றும் அநேகர் மனம்மாற அந்த ஜெபம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.  ஆமென் இதுவும் திரித்துவ தேவனின் செயல்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது,

இரண்டாவதாக,

  1. தன்னலமற்ற, நிபந்தனையற்ற, தியாகமான, தூய்மையான இந்த தெய்வீக அன்பை இயேசு கிறிஸ்து செயல் வடிவில் இங்கு செய்து காட்டுகிறார்:-

 

அதுதான் அகப்பே அன்பு,  There are four distinct types of love found in the Greek mythology.  They are : ErosStorgePhilia, and Agape. அதில் அகப்பே,  அன்பின் உச்சமாகும். மனிதகுலத்திற்கு கடவுளுடைய அளவற்ற அன்பு (Love without limit), போலித்தனம் இல்லாத அன்பு (Love without hypocrisy). இது கடவுளிடமிருந்து வரும் தெய்வீக அன்பாகும்.(Love Divine).

அப்போஸ்தலர் பவுலின் தெய்வீக அன்பு (அகாபே) பற்றிய ஆழமான வார்த்தைகளை  சிந்தனைமிக்க  விளக்கத்துடன்           பார்க்கலாம்,கொரிந்தியர் 13:4(தெய்வீகஅன்பு)அன்புநீடிய சாந்தமும் தயவுமுள்ளது;  அன்புக்குப் பொறாமையில்லை;     அன்பு தன்னைப்  புகழாது,  இறுமாப்பாயிராது.  ஆண்டவர் அவருடைய பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் தெய்வீக அன்பு. சக மனிதர்களிடம் நாம் காண்பிக்க வேண்டிய அன்பு. ஆமென்  

 

இயேசு சொல்கிறார், மத்தேயு 5 - 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்  45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும், நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.  (தவறு செய்பவர்கள் நன்றாக இருக்கிறாரே என்பதற்கு இது ஒரு பதில்)

46 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?  47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?   48 ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.  அவர் என்ன சொன்னாரோ அதை செயல் வடிவில் இங்கு செய்து காட்டுகிறார். ஆமென்…..தெய்வீக அன்பு .

1 சாமுவேல் 16:7   கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

 

யாக்கோபு 1:17  நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.  யோவான் 1:5: "தேவன் ஒளியாயிருக்கிறார்அவரில் எவ்வளவேனும் இருளில்லை."

 

ஒருவர் நமக்கு விரோதமாக இருக்கும்போதுஉலகம் கூறுகிறது, "நம்ம அடி முதலில் இருக்கணும் அல்லது அவனை சும்மா விடாதே என்று.   பழிவாங்கும் எண்ணம்.

 

பரிசுத்தவான் என்று சொல்லிக்கொள்ளுகிற யூத மத குருக்களாகிய பரிசேயர்கள், "நீங்கள் பழிவாங்க முடியும், ஆனால் உங்களை எந்த அளவுக்குத் துன்பப்படுத்தினார்களோ அந்த அளவுக்கே பழிவாங்க முடியும்” என்று கூறினர்… பல்லுக்கு பல், கண்ணுக்கு கண்….

 

ஆண்டவராகிய இயேசு நமக்கு போதித்தது மட்டுமல்ல செய்தும் காட்டியது,  உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று செய்தும் காட்டுகிறார். ஆமென்.                    இதைத்தான் பவுல் அப்போஸ்தலர் கூறினார்கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலி.2:5).

 

இயேசு கிறிஸ்து, இரண்டு முக்கியமான கட்டளைகளை நமக்குச் சொன்னார்: “முதலாம் கட்டளை உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக’ ன்பதே. இரண்டாம் கட்டளை, ‘உன்னிடத்தில் அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,’ என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை.” (மாற்கு 12:29-31) “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.” (1 கொரிந்தியர் 13:13). தெய்வீகஅன்பு திரித்துவ தேவனின் செயல்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது,

மூன்றாவதாக,

  1. இந்த பிதாவாகிய தேவன் நம்முடன் இருந்தால் மட்டுமே இந்த தூய்மையான அன்பை  சக மனிதர்களிடம் காண்பிக்க முடியும்.   ஆமென்

ஆம் பிரியமானவர்களே, நம்முடனும் இந்த திரித்துவ கர்த்தர் வாசம் பண்ணுவதையே விரும்புகிறார்.  நாம் அவருக்கு இடம் கொடுத்தால் மட்டும் போதும்.

 

யோவான் 1 - 1ஆதியிலே வார்த்தை[இயேசு] இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர்[இயேசு] ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர்[இயேசு] மூலமாய் உண்டாயிற்று;        இதில் உதாரணத்திற்கு, 1-ம் அதிகாரம், 18-ம் வசனத்தில் யோவான் மேலும் அழுத்தமாக எழுதுகிறார்: “[சர்வவல்லமையுள்ள] தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.” ஆனால், குமாரனான இயேசுவை மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள், யோவான் இவ்வாறு சொல்கிறார்: “அந்த வார்த்தை [இயேசு] மாம்சமாகி, . . . நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்.” (யோவான் 1:14). இவ்விதமாக அவருடைய விசுவாச பிள்ளைகளோடு திருத்துவ தேவன் வாசம் பண்ணுகிறார். ஆமென்.       மேலும் , மத்தேயு 6 ம் அதிகாரத்தில் ஜெபம்பண்ணவேண்டிய விதத்தை இயேசுவானவர் தெளிவாக கூறியிருக்கிறார். The Lord’s Prayer :  Our Father thou art in heaven (பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே), hallowed be thy name.  Thy kingdom comes.   Thy will be done on earth as it is in heaven.  Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us, and lead us not into temptation, but deliver us from evil.  For thine is the kingdom and the power, and the glory, forever and ever.  எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை  நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்..    பிதாவுடன் ஜெபிக்கும் முறையை நமக்கு இவ்விதமாக கற்றுக்கொடுக்கிறார்.

யோவான் 14:6to9 அதற்கு இயேசு, “வழியும்சத்தியமும்ஜீவனும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும்   பிதாவினிடத்தில் வரமுடியாது. நீங்கள் உண்மையாக என்னை அறிந்திருந்தால்என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்.   ஆக இயேசு கிருஸ்து மூலம் நாம் பிதாவை அடையலாம்.

நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார்அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார் (2 நாளாகமம் 15:2). பலவித சூழ்நிலைகளிலும், “கர்த்தர் நம்மைக் கைவிட்டுவிட்டார்; எந்தவிதமான பதிலும் உத்தரவும் அவர் தரவில்லை” என்று நாம் புலம்புவதுண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. நாமேதான் பொறுமையிழந்து கர்த்தரைத் தேடாமல் வேறு வழிகளை நாடுகிறோம். தேவைக்கு மாத்திரமா கர்த்தர்? எல்லா நிலையிலும் அவரையே சார்ந்து வாழவேண்டாமா?

கடைசியாக,(4)

  1. பரிசுத்தஆவியானவர் அவருடன் இருந்து செயல்பட்டதன் வெளிப்பாடு இந்த பரிந்து பேசும் ஜெபம்:  

ரோமர் 8- 26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.  27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார்.  நமது பெலவீனங்களில் நமக்காக வேண்டுதல் செய்கிற பரிசுத்த ஆவியானவர். ஆமென்
 

சரி, சிலுவையில் ஆண்டவர் பேசிய இந்த முதலாம் வசனத்தில் ஒரு முக்கியமான உளவியல் கோட்பாடு (Psychological theory) அடங்கியிருப்பதை பார்க்கலாம், அறியாமல் தவறு செய்வோர், அதாவது,  தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்பவர்கள் யார் என்று பாப்போம் என்றால்?  ……“குழந்தைகள்..... ஆண்டவருக்கு நாம் அனைவருமே அவரின் குழந்தைகள்தான், ஒரே குடும்ப மக்கள், ஒன்றே குலம் ஒருவரே தேவன், ஜாதி, மதம், இனம், பணக்காரர், ஏழை, படித்தவன், படிக்காதவன், தீயோர், நல்லோர், அதிகம் காணிக்கை கொடுப்பவர், குறைய காணிக்கை கொடுப்பவர் என்ற வேறுபாடு அவரிடம் கிடையாது.  குழந்தைகளிடம் இந்த வேறுபாடு கிடையாது.     லூக்கா 18-16 இயேசுவோ அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது;    17 எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 

பொதுவாக ஆண்டவராகிய இயேசு, பரிசுத்தஆவியானவரின் பார்வையில் சக மனிதர்களை மன்னிக்கும் தன்மையை எப்படி பார்க்கிறார் என்றால், மனிதனுக்குள் இருக்கும் ஆவியின் தன்மையை மதிப்பீடு செய்பவராக இருக்கிறார். அப்படி என்றால் என்ன? வெளியே தெரியும் மனிதர்கள் அனைவருமே அவரின் படைப்பாகிய குழந்தைகள், ஆக அவனுக்குள் இருக்கும் ஆத்துமா பெற்றிருக்கும் ஆவி எப்பேர்ப்பட்ட ஆவி என்பதை பரிசுத்த ஆவியானவர் அவருக்கு தெரியப்படுத்துகிறார்.

 

அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும் இதை சொல்லிக்கொடுக்கிறார். வேதம் சொல்லுகிறது, யாக். 4:7பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று.  .ஆக,நாம் சாத்தானோடு எதிர்த்து நிற்கவேண்டும் என்றால், சக மனித உறவுகளை சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால் நமக்குள் முதலில் பரிசுத்தாவியானவரைப் பெற்றால்தான் அது நடக்கும்.  பரிசுத்த ஆவியை பெறுவதென்றால் நாம் பரிசுத்தமாக வாழப் பழகவேண்டும்.  மனிதனின் சொந்த முயற்சியால் அது ஆகாது.  ஆகவேதான் இங்கே இயேசு பிதாவிடம் மனிதர்களுக்காக பரிந்து ஜெபிக்கிறார், …….. “தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே”. சாத்தானாகிய அசுத்தஆவி முதல் மனிதனாகிய ஆதாமின் மூலம் இந்த உலகிற்குள் அனுப்பிய குற்றப்படுத்துகிற, கொலைவெறி கொண்டிருக்கிற, கேலியும் கிண்டலும் செய்கின்ற, வீண்பழி சுமத்துகின்ற, பரியாசம் பண்ணுகிற பல பாவ காரியங்களை அவரின் குழந்தைகள் தானாக செய்யவில்லை என்பதை புரிந்தவராக இயேசு இங்கே செயல்படுகிறார். எப்படி?  அவர்களை மன்னிப்பதுடன் அவர்களுக்காக பிதாவிடம் ஜெபிக்கவும் செய்கிறார். நாமும்கூட ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்போம் என்றால் மன்னிக்கிறவர் நமது ஆண்டவர் இயேசு. ஆமென்

 

நாமும்கூட அதுபோலவே தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமலோ, தெரிந்தோ செய்யும் பாவ காரியங்களுக்காக சக மனிதர்களை மன்னியாமல், அவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்போம் என்றால் நாம் கிருஸ்தவ விசுவாசிகள் கிடையாது அல்லவா.  ஆமென். 

 

இதைத் தான் ஆண்டவர் இங்கே சிலுவையில் முதல் வார்த்தையாக மூன்றரை வருடம் அருளுரை வழங்கியதின் சுருக்கத்தை செய்தும் காட்டினார். 

 

ஆம் பிரியமானவார்களே, ஆண்டவர் இயேசு இந்த வசனத்தின் மூலம் நம்முடன் பேசியிருப்பார் என்று நம்புகிறேன்.

  1. பிதாவாகிய கடவுள் எதிர்பார்க்கிற கிருஸ்தவ அன்பாகிய அகப்பே அன்பு நம்மிடம் இருக்கிறதா.
  2. அந்த தெய்வீக அன்பு நம்மிடம் வேண்டும் என்றால் பிதாவாகிய தேவன்,  பரிசுத்தஆவியானவர்  நம்முடன் வாசம் செய்ய வேண்டும்.
  3. பரிசுத்த ஆவியானவர் நம்முடன் வாசம் செய்தால் நல்லது எது கெட்டது எது என்று சொல்லிக்கொடுப்பதோடு, நாம் மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுவோம், நம்முடைய சத்துருக்களுக்காகவும் ஜெபிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொள்ளுவோம்.
  4. பரிசுத்த ஆவி நம்முடன் இருந்தால் நாம் இயேசு கூறியது போல பரிசுத்த வாழ்வை வாழ்ந்து காட்டுவதுடன், ஒரு உண்மை கிறிஸ்தவராக நாம் வாழலாம்,  நித்திய ராஜ்ஜியத்தில் திரித்துவ தேவனோடு  வாழும் பாக்கியத்தையும் பெறுவோம்.  இரண்டாம் வருகைக்கு எப்பொழுதும்  ஆவலுடன் கார்த்திருப்போம்.  ஆமென்

 

ஒரு நிமிடம் ஜெபிப்போமா:      அன்பானவர்களே, யாரையாவது நாம் வெறுக்கிறோமா அல்லது நம்மை யாராவது விரோதிக்கிறார்களா?, அவர்களுக்காக இந்த ஒரு வினாடி நமது மனதிற்குள்ளே ஆண்டவரே அவர்களை மன்னியும், அவர்களை ஆசீர்வதியும் என்று ஜெபிக்கலாமா. அவர் அற்புதங்களை அதிசயங்களை செய்கிறவர். அவர் நம்முடைய ஜெபத்தை கேட்டு அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் விடுதலை கொடுப்பார்.   

வேதம் சொல்லுகிறது,  கொலோசேயர் 3:13    ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்று,      ஆம்  சங்கீதம் 145:18 உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.  ஆண்டவர் இயேசு சொன்னார்“நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்

எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே , உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்,   தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

அன்பின் கர்த்தாவே, நாங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, கிறிஸ்து இயேசுவிலிருந்த மன்னிப்பின் சிந்தையை எங்களில் உருவாக்கிக்கொள்ள பரிசுத்த ஆவியானவர்தாமே எங்களுக்கு துணைபுரிய வேண்டுகிறோம்.  மன்னிப்பின் மேன்மையை நாங்கள் சரியாக புரிந்து கொண்டு எங்களது குடும்பங்களிலும் சந்தோசம் சமாதானம் நிலவ ஆண்டவர் கிருபை பாராட்டும்படியாகவும்.  முக்கியமாக எங்களுக்கு துரோகம் பண்ணியவர்களுக்கும், நாங்கள் துரோகம் பண்ணியவர்களுக்கும் ஆண்டவர்தாமே இரக்கம் பாராட்ட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே. ஆமென்.