சிலுவையில் இயேசுவானவர் பேசிய ஆறாம் வார்த்தை - சிறிய வார்த்தை -"முடிந்தது"
“முடிந்தது.” - (யோவான் 19:30) இயேசு கிறிஸ்து முடித்த வேலைகள் -
நம் இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட நாளையும் அதோடு சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் நாட்களில் நினைவு கூர்ந்து வருகிறோம். அதோடுகூட அவரின் பாடு மரணம் அடைந்த நாளை புனிதவெள்ளியாகவும், சாவை வென்று உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர்/உயிர்த்தெழுந்த தினமாகவும் அனுசரித்து வருகிறோம். நல்லது. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் தற்செயலாய் நடந்ததல்ல; நாம் வேதாகமத்தை உற்றுநோக்கும்போது பழைய ஏற்பாட்டில் அவருடைய பிறப்பைக் குறித்தும், அவருடைய வாழ்க்கையைப்பற்றியும், இறப்பைக் குறித்தும், உயிர்த்தெழுதல் குறித்தும் தீர்க்கதரிசனங்களாக தேவஆவியானவரால் எழுதப்பட்டிருக்கிறதை நாம் அறியலாம். அவரது இந்த மூன்று சம்பவங்களின் மகத்துவங்களை மேலெழுந்தவாரியாகக் கடமைக்காகத் தியானித்துவிட்டு உலகப்பிரகாரமான கொண்டாட்டங்களில்மட்டும் நாம் ஆர்வம் காட்டுவோமானால் அது வீணான ஆசரிப்பாயிருக்கும். நமக்கு இரட்சிப்பு இயேசுவின் சிலுவை மரணத்தினால் மட்டுமே கிடைத்தது. ஆமென்.. நமக்காகக் கல்வாரி சிலுவையில் அனைத்தையும் நிறைவேற்றி முடித்து விட்டார்…. சரி, நாம் அவருக்கு என்ன செய்யவேண்டும்……… அவருக்காக, அவரைப்போல வாழ நம்மை ஒப்புக் கொடுக்கவேண்டும்.
சரி, இந்த “முடிந்தது” என்ற பரிபூரணமான வார்த்தை பிதாவைப் பார்த்துக் கூறிய வார்த்தை.
இயேசு பழுதற்ற பலியாகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கூறிய வார்த்தை.
பிதா கொடுத்த மீட்பின் திட்டத்தைச் செய்து முடித்துக் கூறிய வார்த்தை.
இயேசு சீஷர்களிடம் கூறியுள்ளார், பிதாவின் சித்தத்தைச் செய்து அவருடைய கிரியையை முடிப்பதே தன்னுடைய போஜனமாயிருக்கிறது என்று-யோவான் 4 : 34 ல். ஆக, பிதா கொடுத்த பணியை முழுமையாக நிறைவேற்றினார். தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறின. ஆமென். அல்லேலூயா
“வீட்டில் ஒரு அறையில் லைட் எரியவில்லை என்றதும் ஒரு எலெக்ட்ரிசியனை வைத்து, இதை சரி செய்யுங்கள் என்றதும் அவரும் வேலை நிறைவடைந்தவுடன், ஐயா இதோ சரியாக எரிகிறது பாருங்கள் என்று கூறுவது போல, இங்கே இயேசுவானவர், பிதாவிடம் அவர் அனுப்பிய வேலையை முடித்து, "முடிந்தது" என்று கூறுவது போன்ற ஒரு வார்த்தை, பணியை முடித்துவிட்டேன்-ASSIGNMENT ACCOMPLISHED / பணி முடிந்தது -MISSION ACCOMPLISHED. "It Is Finished" என்று தன்னை இவ்வுலகிற்கு அனுப்பிய பிதாவிடம், சுருக்கமான அறிக்கை சமர்ப்பிக்கிறார்.
“இயேசுவால் நமக்கு நியமித்த பணியை செய்து முடிக்க வேண்டும்” என்பதை நமக்கு கற்றுக் கொடுக்கிறது இந்த வார்த்தை. அந்த பணி என்ன? இயேசு கடைசியாக கூறின வார்த்தையின்படி நமது கடமை “நாம் உலகமெங்கும் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி ஜீவனுள்ள தேவனைப் பற்றிச் சொல்லி அவர்களின் ஆவிக்குரிய கண்களை திறக்க வேண்டும். (மத்தேயு 28 : 19, 20). ஆமென்.
முடிந்தது என்ற இந்த வார்த்தை நான்கு சுவிசேஷங்களிலும் தொனிக்கிறது, ஆனால் இந்த வார்த்தையை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டுமானால் யோவான் 19-28 -30ல் .28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். “When he had received the drink, Jesus said, “It is finished.” (John 19:30).
ஒருவர் கடினமான வேலைகளை செய்து முடித்தவுடன்தான் அவருக்கு பசி, தாகம் உண்டாகுமல்லவா, அப்படியே இங்கே பிதா அவரின் சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பி அவர் விரும்பிய வேலைகளை இடைவிடாமல் மூன்றரை ஆண்டுகள், “மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடம் இல்லை” என்பது போல, கடுமையான இரட்சிப்பின்/மீட்பின் வேலைகளை செய்து அந்த வேலைகளை முடித்த திருப்தியுடன் கூறிய வார்த்தை இந்த “முடிந்தது”. ஆமென். இது ஒரு வெற்றியின் முழக்கம், சரி, எவைகள் முடிந்தது? எதையெல்லாம் இயேசு முடித்தார்?
- “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3). நமக்கு ஜீவனைக் கொடுக்க வந்தார், திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோ 10:10:
B. பலிகள் முடிந்தது (அவரே தன்னை பலியாக ஒப்புக் கொடுத்தார்) – எபிரேயர் 7:27
C. பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து நம்மை பிதாவோடு ஒப்புரவாக்கினார்- எபேசி 2:14-16
D. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் சிலுவையில் அறைந்து சாத்தானை வெற்றி சிறந்தார்–கொலோ 2:13-15
E. தம்மைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி முடித்தார்- யோவான் 19:28
F. பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடித்தார்-யோவான் 4:24 பூமியிலே பிதா நியமித்த கிரியையைச் செய்துமுடித்தார் – யோ 17:4
G. சிலுவையில் யாவையும் செய்து முடித்தார் (கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்: சங் 138:8)
ஆம், இயேசு நமக்காக யாவையும் செய்து முடித்தார்” என்ற நிச்சயம் தருகிறது” இந்த வார்த்தை
பிரசங்கி 7 : 8ல் “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது;” என்று சாலமோன் கூறியதைப் போல, இயேசு தனக்குப் பிதா கொடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடித்ததைப்போல, நாமும் கர்த்தர் நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பியதன் சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றி முடிக்க வேண்டும். அதை ஆவியானவரின் துணையோடு செய்து முடிப்போம். பாவ இரட்சிப்பைப் பெறாதவர்களை இயேசுவண்டை அழைத்து வந்து வெளிச்சத்துக்குள் அமர்த்துவோம். அதற்கு நாம் முதலில் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்திருக்கிறோமா? இரட்சிக்கப்படுதலின் படிகள் என்ன? 1. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுதல் : அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.-யோவான் 1:12 2. அவரை விசுவாசித்தல் : அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் - அப்போஸ்தலர் 16:31 3. மனம் திரும்புதல் : உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். - அப்போஸ்தலர் 3:20. நமது இரட்சிப்பு சிலுவை மரணத்தினால் மட்டுமே கிடைத்தது. ஆக, அவருக்காக வாழ நம்மை ஒப்புக் கொடுப்போம்.
இயேசு பிதாவின் மடியில் செல்லப்பிள்ளையாயிருந்தவர். அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர்மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவான்1:2,3). இப்படிப்பட்ட மகத்துவமான தேவகுமாரன் தம்மைத்தாமே வெறுமையாக்கித் தாழ்மையின் ரூபமெடுத்தார். பிசாசானவன் தேவனது மீட்பின் திட்டத்தைக் குலைத்துப் போட எவ்வளவோ முயன்றும் தோற்றுப்போனான் சிலுவையில்.
இயேசு பாதாளத்தின் திறவுகோலை எடுப்பதற்கு முன், உயிரோடு இயேசு எழும்புவதற்கு முன் முடிந்தது என்று கூறுகிறார். எபிரேயர் 9 : 12 ல் கூறப்பட்டது போல வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினால் அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நமக்காக நித்திய மீட்பை உண்டு பண்ணினார். இனி ஒரு இரத்தப் பலி தேவையில்லை. இயேசுவே தகனபலியாக தன்னை ஒப்புக் கொடுத்து முடித்தார். இதை கிரேக்க மொழியில் tetelestai என்பர். கொடுத்த வேலையை செய்து முடித்து விட்டேன் என்று கூறுவதற்கு இந்த வார்த்தையைத்தான் உபயோகப்படுத்துவர். இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தார் (1 தீமோத்தேயு 1 : 15), இழந்து போனதைத் தேட வந்தார் (லூக்கா 19 : 10), கெட்டுப் போனதை இரட்சிக்க வந்தார் (மத்தேயு 18 : 11), தனது ஜீவனையே கொடுத்து அத்தனையையும் நிறைவேற்றினார் (லூக்கா 20 : 28).
1.பிதாவின் பிரதான நோக்கமாகிய மனிதரின் பாவங்களை சுமந்துதீர்த்து, அதை நிறைவேற்றி முடித்தார் (1 யோவான் 3:3).
“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (1தீமோ.1:15) என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; பரிசுத்த வேதாகமத்தின் முக்கிய செய்தியாய் இது உள்ளது.
ஆதாமின் பாவத்தினால் பிசாசானவன் மனுக்குலத்தைப் பாவத்திற்குள்ளும் இச்சைகளுக்குள்ளும், இருளிலும், சமாதானக் கேட்டிலும் அடைத்து வைத்தான். “மனிதனுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே” என்று கர்த்தர் கண்டு அவனைப் படைத்ததற்காய் அவர் மனஸ்தாபப்பட்டார். தன்னைவிட்டு விலகி சென்ற மனுக்குலத்தை முழுவதுமாய் அழித்து அவர் நிர்மூலமாக்கியிருக்கக்கூடும். அவர் இருதயம் விசனத்தினால் நிறைந்திருந்தாலும் மனுக்குலத்தை மீட்க ஒரு அன்பின் திட்டம் அவரிடத்திலிருந்தது. பிதாவின் ஆதீனத்திலிருந்த “மனுக்குலத்தை மீட்பதற்கான அன்பின் திட்டத்தை” குமாரன் நிறைவேற்றத் தன்னை ஒப்புக்கொடுத்தார். தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ, வருகிறேன் என்று சொன்னார் கிறிஸ்து (எபி.10:9).
பாவமனுஷனுடைய சாயலில் பிறந்து வாழ்ந்தாலும், அவரிடத்தில் பாவமில்லை. பாவமேயறியாத அவர் நம்முடைய பாவங்கள் யாவற்றையும் சுமந்து தீர்க்கும்படியே பாவமானார். யோவான் ஸ்நானன் இவரைப்பற்றிக் கூறும்போது, இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:28) என்று கூறினார். நம்முடைய பாவத்தை சுமந்து தீர்க்கும்படி வெளிப்பட்ட இயேசுகிறிஸ்து உங்கள் உள்ளத்தில் பிறந்திருக்கிறாரா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத உயிரோடு இருப்பவரான படியால், இன்றும் அவரால் இரட்சிப்பு நடைபெறுகிறது, இன்னும் நடைபெறும். ஆமென்.
2. பிசாசின் கிரியைகளை அழித்து முடித்தார் இயேசுகிறிஸ்து (1யோவா.3:8):
ஆதாமின் மூலம் உலகத்தில் பாவம் தோன்றியபின் பிசாசானவனின் ஆளுகையின் கீழ் இவ்வுலகம் சென்றது. அவனுடைய கிரியை உலகமுழுவதும் பரவி துன்பங்களினாலும், நோய்களினாலும், பல தொல்லையினாலும், தீராத பிரச்சனைகள், மற்றும் பிரிவினைகளினாலும் மனுக்குலத்தை அவன் அலைக்கழித்து வருகிறான். சாத்தானுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் பிறந்தார், பாடு பட்டு மரித்தார், உயிர்த்தார். ஆமென். அவர் பிசாசுகளைத் தம்முடைய வார்த்தையினாலும் அதிகாரத்தினாலும் துரத்தினார். பிசாசுகள் அவரை உன்னதமான தேவனுடைய குமாரனே என்று அறிக்கையிட்டு ஓடின, அவனுடைய கிரியைகளை அழித்து தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். இயேசு என்ற பெயரைக் கேட்டாலே இன்றும் பிசாசுகள் ஓடிவிடுகின்றன. பிசாசின் கிரியைகளை நடப்பித்து வந்த நம்மை, அவர் சிந்தின இரத்தத்தினாலே விடுவித்து தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி அழைத்தார்.
கிறிஸ்து தந்த வெற்றியால் நாம் பாவத்திற்கு அடிமைகளாய் இருக்க வாய்ப்பில்லாமல் போனது. அவர் சாத்தானை ஜெயித்ததால் அவன் நம் மீது அதிகாரம் இனி செலுத்த முடியாது. இயேசுகிறிஸ்து தமது சிலுவை மரணத்தால் பிசாசின் தலையை நசுக்கி அவனது திட்டங்களை சீர்குலைத்தார். அந்த வெற்றியை தமது பிள்ளைகளிடம் ஒப்புக்கொடுத்தார். மரணத்திற்கு பின் இனி என்ன சம்பவிக்கும் என்று நாம் பயப்படத் தேவையில்லை. ஏசாயா 60 : 20 ல் கூறியது போல நம்முடைய துக்க நாட்கள் முடிந்தது. கர்த்தராகிய இயேசு நமது பயங்கள் அனைத்தையும் நீக்கி நித்திய வாழ்வை நமக்குத் தந்தருளுவார். ஆமென். அல்லேலுயா
3. நியாயப்பிரமாணத்தை அழிக்கிறதற்கு அல்ல; நிறைவேற்றி முடித்தார் (மத். 5:17):
ஆதி காலத்தில், நியாயப்பிரமாணத்தினால் பாவமானது அடையாளம் காட்டப்பட்டது. நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் நித்திய மீட்பை ஏற்படுத்தவில்லை. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே (கலா.2:16).
நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டு வந்த பலியையும் காணிக்கையையும் சர்வாங்க தகனபலிகளையும் பாவ நிவாரண பலிகளையும் தேவன் விரும்பவில்லை, அவருக்குப் பிரியமானதாகவும் இருக்கவில்லை. ஆகையால், இயேசுகிறிஸ்து தம்முடைய சரீரத்தை ஒரே தரம் பலியிடுவதற்கு ஒப்புக்கொடுத்தார். அதினால் நியாயப்பிரமாணம் நிறைவேற்றப்பட்டது. “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” (ரோமர் 10:4). பூமியிலுள்ள நாம் அனைவருமே தேவனுடைய பிள்ளைகளாகும்படி இயேசுகிறிஸ்துவினாலே கிருபையின் பிரமாணம் உருவானது. இயேசு நியாயசாஸ்திரியினிடம் கூறும்போது, தேவனிடத்தில் அன்பு கூறுவது முதலாம் பிரதான கற்பனை என்றும் பிறனிடத்தில் அன்பு கூறுவது இரண்டாம் கற்பனை என்றார். இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் (மத்.37:40). இதுவே தெய்வீக அன்பின் பிரமாணமாகும். இதை நிறைவேற்றவே இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வெளிப்பட்டார் அதை செய்து காட்டி முடித்தார். ஆமென் பிதாவே இவர்களுக்கு மன்னியும் - முதலாம் வார்த்தை)
யாராலும் நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளையும் மிகச்சரியாகப் பின்பற்றி பரிசுத்தமாய் வாழ முடியாது. ஏனெனில் யாக்கோபு 2 : 10 கூறுவது என்னவெனில் “ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.” என்பதால் இயேசு பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களையும், தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றி முடித்தார் (மத்தேயு 5 : 17). இயேசுவானவர் நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருந்தார். எனவே பழைய ஏற்பாட்டுப் பிரமாணம் கிறிஸ்துவில் முடிந்து விடுகிறது. புதிய ஏற்பாட்டுப் பிரமாணம் கிறிஸ்துவால் துவங்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இயேசு ஒருவரே பாலமாக இருக்கிறார். கிறிஸ்து வந்த பின்பு நியாயப் பிரமாணத்துக்கும், பழைய உடன்படிக்கைக்கும் யாரும் கட்டுப்படத் தேவையில்லை. பலியிடுவதில் கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைவிட கிறிஸ்துவின் பலியால் கிடைக்கும் ஆவிக்குரிய நித்திய ஆசீர் நமக்கு அதிக பலனைக் கொண்டு வருகின்றது. நாமோ கிறிஸ்துவினால் புதிய ஏற்பாட்டு கிருபைக்குள் வாழ்கிறோம். நியாயப்பிரமாணத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து மனுக்குலத்தின் கிரயத்துக்காகத் தான் முழுக்கிரயத்தையும் கொடுத்து வெற்றியோடு முடிந்தது என்கிறார்.
எபிரேயர் 9- 22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. பிசாசின் கிரியைகளிலிருந்த நம்மை விடுவிக்கும்படியே. உலகத்தில் தான் பட்ட பாடுகள் முடிந்துவிட்டதால் கூறிய வார்த்தை அல்ல. உடம்பில் உள்ள வலிகள் தாங்க முடியாமல் அழுது கூறிய வார்த்தையும் அல்ல. பரத்திலிருந்து மனுஷ உருவெடுத்து வந்து பிதா தன்னை அனுப்பியதன் நோக்கம் நிறைவேறியதால் மகிழ்ச்சியுடன் வந்த சத்தம். “முடிந்தது.” (ஏசாயா 53 : 10).
பாவத்திற்கான கிரயம் செலுத்தப்பட்டாயிற்று (ரோமர் 14 : 7 – 9, 1கொரிந்தியர் 6 : 19, 20). எல்லாப் பாவங்களுக்கும் இரட்சிப்பு இயேசுவின் சிலுவை மரணத்தினால் கிடைத்தது (மத்தேயு 26 : 28, 1 யோவான் 1 : 7). பாடுகளைப் பற்றிய வேதவாக்கியங்கள் அனைத்தையும் நேர்த்தியாய் நிறைவேறி முடித்தாயிற்று (சங்கீதம் 22 ம் அதிகாரம், ஏசாயா 53 ம் அதிகாரம், லூக்கா 24 : 25, 26, 44, 1 பேதுரு 1 : 11, 3 : 18). இனி ஒருபோதும் இயேசுவுக்கு வேதனை இல்லை. இயேசுவின் வாயிலிருந்து ஜெயமாய்ப் புறப்பட்ட வார்த்தை எல்லோருடைய காதுகளிலும் தொனித்தது. யூதர், புறஜாதியாரின் திரை கிழிந்தது. பகையாக இருந்த நடுச்சுவர் தகர்க்கப்பட்டது (1 கொரிந்தியர் 12 : 13, கலாத்தியர் 3 : 28, எபேசியர் 3 : 6, ரோமர் 10 : 12, 13). அதனால் பிதாவிடம் நேரடியாகச் செல்லும் பாக்கியம் கிடைத்தது (எபிரேயர் 10 : 19, 20).
பழைய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றிக் கூறிய அனைத்து தீர்க்கதரிசனமும் நிறைவேறியதால், அவரை கிறிஸ்தவ மேசியாவாக நிலைநிறுத்தின. அவர் கூறிய 'முடிந்தது' என்பது அவரது பணி நிறைவேற்றப்பட்டதையும் மற்றும் கடவுள் மற்றும் மனிதகுலத்தின் இடையிலான புதிய ஒப்பந்தம் நிறுவப்பட்டதையும் குறிக்கிறது.
1. பிதாவின் பிரதான நோக்கமாகிய மனிதரின் பாவங்களை சுமந்துதீர்த்து, அதை நிறைவேற்றி முடித்தார் (யோவான் 3:3).
2. இயேசுகிறிஸ்து, பிசாசின் கிரியைகளை அழித்து முடித்தார் (1யோவா.3:8).
3. நியாயப்பிரமாணத்தை அழிக்கிறதற்கு அல்ல; நிறைவேற்றி முடித்தார் (மத். 5:17).
2 தீமோத்தேயு 4:7–8ல் பவுல் சொல்வது போல, நாமும் ஓட்டத்தை முடிக்க வேண்டும். ஆரம்பிப்பது மட்டும் போதாது; முடிக்க வேண்டும்.
நாம் இதுவரை தியானித்தபடி, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, மரித்த, உயிர்த்த நோக்கத்தை அறிந்துகொண்டவர்களாய் இந்த புனித வெள்ளியை ஆசரிப்போம்! இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கும் எடுத்துசெல்வோம். நமக்கு நித்தியமீட்பு ஏற்படும்படியாக தம் இரத்தத்தைச் சிந்தி நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும்படி வந்த இயேசு இந்த உலகிற்கு உண்மையிலேயே மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் செய்தியே! ஆக நமக்கு மீட்பு கிடைக்க அவர் பாடுபட்டு மரித்தார், இயேசு மரித்தது உயிர்பெறவே, ஆமென். Prayer……….
வாழ்வில் தோற்றுவிட்டேன் என்று கலங்கி நிற்கும் தேவபிள்ளையே, தோல்வியை வெற்றியாக மாற்றும் சிலுவையண்டைக்கு வா. உன் தோல்வியை ஆண்டவரிடம் அறிக்கைசெய். எந்தச் சூறாவளியிலும் விசுவாசத்தில் உறுதியாய் நில். இது உனக்கு மனம்மாறும் இரட்சண்ய நாள். தோல்வி மாறி வெற்றியைக் காண்பாய். ஓர் உறுதியான விசுவாசிக்கு வாழ்வில் எந்த நிலையிலும் தோல்வியே இல்லை என்பதே சிலுவை தரும் இனிய செய்தி! நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக (கலா.6:14).
கிறிஸ்தவ மார்க்கத்தின் சிறப்பம்சமாய் இருப்பது இயேசுகிறிஸ்துவின் மரணம் மட்டுமல்ல உயிர்த்தெழுதலும் ஆகும். இயேசுகிறிஸ்துவோ மரித்தும் உயிரோடெழுந்து இன்றும் ஜீவிக்கிறவராக இருக்கிறார். ஆமென்.
சிலுவை சுமந்த உருவம், சிந்தின இரத்தம் புரண்டோடியே, நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா
1. பொல்லா உலக சிற்றின்பங்கள், எல்லாம் அழியும் மாயை, காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா
2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல், ஆத்துமம் நஷ்டமடைந்தால், லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே
