மூன்று விதமான திறக்கப்பட்ட கண்கள்
கண்தெரியாத ஒரு மனிதன், கண் தெரிந்த ஒரு மனிதனிடம் ஐயா கடல் எப்படி இருக்கும் என்றாராம். அவர் கடலைப் பற்றி விவரித்தாராம், அந்த தண்ணீர் உப்பாக இருக்கும் அப்படி இப்படி என்று, கடைசியில் அதின் தண்ணீரின் கலர் நீலக்கலரில் இருக்கும் என்றதும், உடனே கண்தெரியாத மனிதன், அய்யா நீலக் கலர் எப்படி இருக்கும் என்றாராம், அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று பதில் சொன்ன நபருக்கு தெரியவில்லை. ஆம் பிரியமானவர்களே, கண்கள் இருந்தும் குருடர்களாக அதாவது ஆவிக்குரிய குருடர்களாக பல கிருஸ்தவர்கள் இருக்கின்றனர், மற்றும் அநேகரின் மனக்கண்கள் கூட திறக்கமுடியாதபடி மழுங்கிப் போய் இருக்கின்றனர்
அதுமட்டுமல்ல இன்னும் அனேக உலக மக்களுக்கு இயேசு என்ற ஒருவரைப் பற்றி மட்டுமே தெரியும், சிலர் பல நபிகளில் இயேசுவும் ஒருவர் என்றும். சிலர் முப்பத்தி முக்கோடி தேவர்களுள் ஒருவர் என்றும் எண்ணுகின்றனர் அதாவது சரியாக இயேசுவைத் தெரியாது அல்லது சிலருக்கு தெரியவே தெரியாது, மற்றும் சிலர் இயேசுவை நன்கு தெரிந்தும் அவருடைய வழியில் நடப்பது இல்லை, அவர்தான் பாவங்களை மன்னித்து நமக்கு இரட்சிப்பு கொடுக்கிறவர், பரலோகம் செல்லும் வழி அவர்தான், பரிசுத்த வாழ்வு என்றால் என்ன, பரலோகம் என்றால் என்ன, நித்திய ஜீவன், நித்திய வாழ்வு என்றால் என்ன? அந்த பரலோக வாழ்விற்கு செல்ல பரிசுத்தம் தேவை, ஏனெனில் அங்கு பரிசுத்தவான்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும், அந்த நித்திய வாழ்வாகிய பரலோகம்தான் நமது நிரந்தர இருப்பிடம் என்பதையெல்லாம் தெரிந்தும் தெரியாததுமாக இருக்கும் கூட்டம், அவருடைய இரண்டாம் வருகை இன்னும் வர தாமதிக்கும் ஆகவே பின்னர் மனந்திரும்பலாம் என்ற மமதையில் ஒரு கூட்டம். இதோ இயேசு வருகிறார் நாமெல்லாரும் மரித்துப் போவோம் என்று ஒரு கூட்டம். இந்த உலகம் தான் வாழ்வு அதில் பணம் செல்வாக்கு பதவி பட்டம் சொத்து மதிப்பு அதிகாரம் ஜாதி பெருமை இருந்தால் மட்டும் போதுமானது என்று என்னும் மனிதர்களும் இருக்கிறார்கள். .
ஆனால் நாம் பார்க்கப்போவது இரண்டு கண்ணிருந்தும் குருடராக இருக்கும் கிருஸ்தவ மக்களைப் பற்றி. இதை ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார் “ஏசாயா 43-8 கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும் காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள், என்று”. வேதம் கூறும் நேற்றும் இன்றும் என்றும் மாறாத உயிரோடு நம்மோடு இருக்கின்ற ஆண்டவரைப் பார்க்க வேண்டுமா? அவரை எப்படிப் பார்க்க முடியும். இதை இன்றைய கிருஸ்தவ சமுதாயம் சரியாக புரிவதில்லை. அதற்கு ஆழமான சத்தியதிற்குள்ளாக கிருஸ்தவர்கள் வளர வேண்டும். Spiritual Growth இதைத்தான் பவுல் அப்போஸ்தலர் மட்டுமல்ல நமது ஆண்டவராகிய இயேசுவும் விரும்புகிறார். பாவ மன்னிப்பின் மூலம் இரட்சிக்கப்பட்ட நாம், அதாவது குழந்தையாக இருந்த நாம் வாலிபராக, முதிர்ச்சி அடைந்தவராக வளரவேண்டும். வளர்ச்சி இல்லை என்றால் ஆவிக்குறிய மருத்துவம் தேவை. இந்த மருத்துவம் ஒருவேளை ஒரு மாத்திரை மட்டுமாக கொடுத்து சாதாரணமாக இருக்கலாம், அறுவைச் சிகிச்சையாக இருக்கலாம், ICUவில் இருக்கலாம், கோமாவில் இருக்கலாம்......இதில் சுகம் பெற்றவர்கள் ஆவிக்குரிய கனிகளைத் தருவார்கள். ஆமென். சிகிச்சை இல்லாமல் ஆவிக்குரிய கனிகளைப் பெறுவதே ஆண்டவரின் விருப்பம். அதாவது ஆவிக்குரிய கனிகளைத் தருதல் என்றால் நம் வாழ்வில் கிறிஸ்துவைப் பிரதிபலித்தல்.
இதை நாம் ஆவிக்குரிய கண்களானாலும் சரி, மாம்ச கண்கள் ஆனாலும் சரி, மனக்கண்கள் ஆனாலும் சரி, எப்படி அவரைப் பார்க்க முடியும். முதலாவதாக வேதத்தில் கூறியபடி பரிசுத்தமான ஆவியானவராகிய ஆண்டவரை முழுமையாக விசுவாசிக்கும் போது மட்டுமே அந்த மெய்யான ஆண்டவரைப் பார்க்கமுடியும், தரிசிக்க முடியும் அல்லது புரிந்து கொள்ள முடியும். அதைவிட நம்மை நாமே சரியாக அறிந்து கொள்ளவோ, நிதானிக்கவோ முடியும். ஆமென்.
முதலில் நாம் தெரிய வேண்டியது என்னவென்றால், ஆண்டவர் நமது உள்ளிந்திரியங்களை அறிந்தவர், அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை, ஆக நம்மைப் பற்றி நாம் புரிந்து கொள்ளுவதே முதல் அவசியம். அதாவது ஆண்டவரைப் பிரியப்படுத்துவதுபோல நடிப்பது முடியாதது என்பது இதன் அர்த்தம், அவரைப் பிரியப்படுத்த அவரைப் போல வாழ்ந்து காட்ட வேண்டும்.
ஒன்றை நாம் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். “தேவ உறவில் அல்லது ஐக்கியத்தில் நான் வளர வேண்டும் என்று விரும்பினால் தேவையில்லாத உலக உறவில் இருந்து ஒதுங்க வேண்டும் அல்லது துண்டிக்க வேண்டும்”. Hollo,,.... நான் தேவனுக்கும் நல்லவனாக வேண்டும் இந்த உலக சக மனிதர்களிடத்திலும் நல்லவனாக வேண்டும் என்று நினைப்பது நல்லது தான், ஆனால் அதினால் என்னுடைய ஆவிக்குரிய தேவ உறவில் விரிசல் விழுவதாக இருந்தால், அல்லது நான் சரிக்கி விழுகிரவனாக இருந்தால் அதை துண்டித்தே ஆக வேண்டும். அல்லது ஒதுங்கி இருக்க பழக வேண்டும். இதற்குத்தான் ஆவிக்குரிய கண்கள் வேண்டும். இதை நான் எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்..... மத் 13-25 26...மனுஷர் நித்திரை பண்ணிகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டு போனான், பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.... நித்திரை நல்லதுதான்...கர்த்தர் தமக்கு பிரியமானவர்களுக்கு நித்திரை அளிக்கிறார்...ஆனால் கனநித்திரையில் சாத்தானுக்கு இடம் கொடுத்து களைகளை விதைக்க அனுமதிக்கக் கூடாது. இது எப்படி முடியும்.... தேவபிள்ளைகள் நித்திரையில் இருந்தாலும் அது விழிப்புள்ளதாக இருக்க வேண்டும் ...உன் ..5 – 2 நான் நித்திரை பண்ணினேன் என் இதயமோ விழித்திருக்கிறது என்று சூலமித்தியாள் சொல்லுகிறாள்.... இருதயமும் ஆவியும் விழிப்புள்ளதாய் இருக்கும்போது சாத்தானால் களைகளை நம்மில் விதைக்க முடியாது. அதற்கு நாம் செய்யவேண்டியது, இரவில் படுக்கும் முன்பாக ஜெபசிந்தனையோடு, ஆவியானவருடைய கரத்தில் நம் இருதயத்தை ஒப்புக் கொடுத்து விட்டு தூங்கும்போது ஆவியானவர் விழிப்புள்ளவராக நம்முள் இருப்பார், சத்துரு வெள்ளம்போல வந்தாலும் கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார். அதை விட்டு விட்டு ஒரு சினிமா பாடல், வேறு உலக காரியங்களை பார்த்துக் கொண்டே தூங்கும்போது களை நமது இருதயத்தில் வளரும், அப்பொழுது ஆவிக்குரிய ஒரு முன்னேற்றமும் இருக்காது. நம்முடைய பெலவீனங்களில் ஆவியானவரின் உதவி தேவை. ஆக எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாய் இருப்பது அவசியம்.
இரண்டாவதாக இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்தவுடன் அவர் நம்மை மன்னித்தது போல நாமும் பிறரை மன்னிக்க பழகவேண்டும், மூன்றாவதாக இந்த ஆவிக்குரிய வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி மிக முக்கியம் கிருஸ்த வாழ்விற்கு....
ஒருவேளை ஞாயிறு ஆலயத்திற்கு செல்லுகிறோம், ஏதோ போதகர் சொல்லு என்று கூறும் பாவ அறிக்கை, விசுவாச அறிக்கை மற்றும் அனேக ஜெபங்கள் செய்கின்றோம். இரண்டு, மூன்று பாட்டு பாடுகிறோம், கைகளைத் தட்டு என்றால் தட்டுகிறோம், அல்லோலுயா என்று சொல்லுங்கள் என்றால் சொல்லுகிறோம், கைகளைத் தூக்கு என்றால் தூக்குகிறோம், காணிக்கை போடுகிறோம் நல்லதுதான். சில வேளையில் போதகர் சிறப்பு ஆலய காரியங்கள் செய்ய காணிக்கை வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்து முடிப்பதற்கு முன்பாக கொடுக்கிறோம். நல்லது. பல தடவை இராப்போஜனமும் பெற்றுவிட்டு வீட்டிற்குச் செல்லுகிறோம். ஆனால் பிற்பாடு ஏதோ ஒரு பெரிய கடமையைச் செய்தால் போல ஆலயம் முடிந்தால் போதும் என்று உலக வாழ்விற்கு அதாவது நமது அன்றாட வேலைக்கு செல்லுவது போல வீட்டிற்கு சென்று விடுவது மட்டுமல்ல டிவியில் ஒரு படம், சீரியல் பார்த்து விட்டு தூங்குவது கிறிஸ்தவம் அல்ல. இன்று ஊடகத்தில் வரும் களவு, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, மோசடி போன்ற குற்றத்தில் ஈடுபடுவோரில் மூன்றில் ஒரு பெயர் கிறிஸ்தவராக இருப்பது தெரிகிறது. கண்ணிருந்தும் குருட்டுக் கிருஸ்தவர்கள். The church is supposed to be the Counselor to the Lord the king, the church is supposed to correct Error with Truth, unapologetically. திருச்சபை ஆண்டவருக்கு ஆலோசகராக இருக்க வேண்டும், அதுமட்டுமல்ல மனம்கோணாமல் திருச்சபை செய்யும் தவறுகளை உண்மையால் திருத்த வேண்டும். ஆவிக்குரிய கிருஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் அடுத்த வாரம் வரை அன்று ஆலயத்தில் கேட்ட அந்த செய்தி, பாடல்கள், வசனங்கள், ஜெபங்களை அசை போடவேண்டும். அதாவது அதன்படி வாழ முயற்சி செய்யவேண்டும். ஆண்டவரோடு பயணிக்க வேண்டும், அதுதான் கிறிஸ்தவம் அல்லது கிறிஸ்து சொன்ன உபதேசம். அதன் மூலம் கிருஸ்துவை அறிவிக்க வேண்டும் அல்லது உனது செயல்கள் மூலம் இயேசுவைக் காட்ட வேண்டும். ஞாயிறு அன்றாவது ஏதாவது ஒரு ஆத்துமாவுக்காகவாது ஜெபிப்பது, வேதத்தை தியானிப்பது,,கிருஸ்துவை அறிவிப்பது, உதவி செய்வது நடைமுறையில் இருந்தால் நல்லது. முடிந்தவரை இதை செய்யவேண்டும். இந்த சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை எனக்கே செய்கிறீர்கள். இதைத்தான் நாங்கள் ஆண்கள் ஐக்கிய சங்கமாக எங்களால் முடிந்த அளவு செய்து கொண்டு வருகிறோம். ஆமென். ஞாயிற்றுக்கிழமை வீணாக போகக் கூடாது. காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.
சரி வேதத்திலே அநேகருடைய கண்கள் திறக்கப்பட்டன, அதில் மூன்று விதமாக திறக்கப்பட்ட கண்களை குறித்து நாம் இன்று பார்க்கலாம்.
முதலாவது குருடனான பர்திமேயு என்ற நபரின் கண்கள் திறக்கப்பட்டது, 1.மாற்கு 10-52 அவன்(பர்திமேயு) பார்வையடைந்து வழியிலே இயேசுவுக்குப் பின் சென்றான்.
இரண்டாவது முதல் மனிதர்களான ஆதாம் மற்றும் அவன் மனைவி ஏவாளின் கண்கள் திறக்கப்பட்டது. ஆதி 3 : 7 அப்பொழுது அவர்கள் இவருடைய(ஆதாம் & ஏவாள்) கண்களும் திறக்கப்பட்டது, அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தியிலைகளை தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
மூன்றாவதாக ஆகார் என்ற அடிமைப் பெண்ணின் கண்களும் திறக்கப்பட்டது. ஆதி 21-19இல் பார்க்கலாம் “தேவன் (ஆகாருடைய) அவளுடைய கண்களைத் திறந்தார் அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.”
சரி, இங்கே மூன்று விதமான பார்வை அடைதலைக் குறித்து அல்லது மூன்று திறக்கப்பட்ட கண்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.,
I - முதலாவது பிறவியிலேயே கண்கள் தெரியாத பர்திமேயுவின் கண்கள் திறக்கப்பட்டது. அதாவது மாம்ச கண்கள், ஒருபக்கம் கர்த்தராகிய ஆண்டவர் குருடரின் மாம்ச கண்களை திறந்தார், இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்ற விசுவாச அறிக்கையால் இழுக்கப்பட்ட இயேசுவானவர் அவனை அழைக்கிறார், அவன் எழுந்து அழுக்கான, பழைய மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு பின்னர் அவரிடம் வருகிறான். அவர் அவனுக்கு வேண்டியதை, அதாவது அவனது கண்களை திறந்து கொடுக்கிறார். இப்பொழுது அவன் கண்கள் திறக்கப்பட்டதும் அவன் முதலாவது இயேசுவைப் பார்க்கிறான். இவனுடைய சரீரக் கண்களுடன், ஆவிக்குரிய கண்களும் ஒளிபெற்றதால் இயேசுவை ஆண்டவராகக் கண்டான். அவரின் பின்சென்றான். ஆமென்
II - இரண்டாவதாக ஆதி 3 -7 ; அப்பொழுது அவர்கள்(ஆதாம் & ஏவாள்) இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது, அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்.
இங்கே ஆண்டவர் முதல் மனிதர்களாகிய ஆதாம் ஏவாளுக்கு பிறப்பிலே அவர்களுக்கு ஆண்டவர் கொடுத்த இயற்கையை பார்க்கும்படி அழகான கண்கள் கொடுக்கப்பட்டன,
அத்துடன் அவர்களுக்கு சிருஷ்டிப்பின் தேவனை அறியும் ஆவிக்குரிய கண்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் ஆண்டவர் அவர்களுக்கு கொடுத்த ஆவிக்குரிய கண்களை இப்படியாக சாத்தான் அவர்களின் கண்களை திறப்பதாக சொல்லி அவர்களின் ஆவிக்குரிய கண்களை குருடாக்கிக் விட்டான்., வேதம் சொல்லுகிறது, அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது என்று, ஆம் சாத்தானின் பார்வையில், பாவத்தின் பிடியில் சிக்கிய பின்னர் இந்தப் பாவஉலகம் பார்க்கும் விதத்தில் கண்கள் திறக்கப்பட்டது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இங்கே ஆதாமும் ஏவாளும் தங்கள் கண்கள் திறக்கப்பட்டு தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதைக் காண்கிறார்கள். ஆனால் பர்திமேயு இயேசுவை ஆண்டவராக காண்கிறான், அதுமாத்திரமல்ல அவரைப் பின்பற்றுகிறான். எதுவுமே லேசாக பெற்றுவிட்டால் அதின் அருமை தெரியாது என்பார்கள் அல்லவா. ஆவிக்குரிய கண்கள் கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாத முதல் மனிதர்கள், இந்த ஆதாமும் அவரின் மனைவி ஏவாளும். ஒரு கீழ்ப்படியாமையால் கண்களின் இச்சையால், நல்லது எது தீயது எது என்று அறியும் அறிவை அதாவது ஆவிக்குரிய கண்களை இழந்து போனார்கள் முன் பின் தெரியாத அல்லது தெரிந்த யாரிடமும் நம்மைப் பற்றி சொல்வோம் என்றால் இந்த விளைவுதான் வரும். சர்ப்பமாகிய சாத்தானிடம் ஆண்டவர் கூறிய விவரத்தை கூறியபடியால் வந்த விளைவு இந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எவ்வளவு பரிதாபம். ஆனால் சாத்தான் நல்லது தீயது அறியும் அறிவை தருவேன் என்கிறான். நம்மைப் படைத்தவர் கூறும் அறிவுரை நல்லதா, நம்மை திருட வரும் சாத்தான் கூறும் அறிவுரை நல்லதா. அதை புரிந்து கொள்ளுவதற்குத்தான் ஆவிக்குரிய கண்கள் தேவை.
ஆம் பிரியமானவார்களே, இன்றைய தியானத்தில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஆதி மனிதர்களாகிய ஆதாம் ஏவாள் மூலம் இழந்து போன நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும், அது திறக்கப்பட்டதும் நீங்கள் காண்பது என்ன? அதுதான் கிறிஸ்தவ மார்க்கம் அல்லது கிறிஸ்து நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். அதற்கு முன்பதாக நமது மனக் கண்கள் திறக்கப்பட வேண்டும். அதாவது மனசாட்சி என்பார்கள் அல்லவா, அதுபோலத்தான் இது. ......ஒரு நிமிட ஜெபம்......
சில வருடங்களுக்கு முன்பாக ஒரு செல்வந்தனின் ஒரே மகனை சிலர் கடத்திச்சென்று அவன் கண்களில் கரப்பான் பூச்சியைக் கட்டி ஒரு இருண்ட அறையில் போட்டுவிட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து பார்த்தபோது அந்த கரப்பான் பூச்சி அவன் கண்களை குருடாக்கிப் போட்டது. அதன்பின்பு அவனை வேறு மாநிலத்திற்கு அனுப்பி அங்கே பிச்சை எடுக்குமாறு செய்வதற்கு அவனை விற்று விட்டனர். எவ்வளவு சீரும் சிறப்பாக இருந்த சிறுவன் இப்பொழுது கண்தெரியாத ஒரு பிச்சைக்காரன். சாத்தானும் இவ்விதமாகவே ஆதாமுக்கும் ஏவாளுக்கும்(இந்த மனித குலத்தின் முதல் மனிதர்கள்) செய்தான். ஆவிக்குரிய கண்களை தேவன் கொடுத்திருந்தும் அதை இழந்து போனார்கள்.
இங்கே சாத்தான் மாமிச கண்களால் பாவம் செய்ய அவர்களை தூண்டி இச்சை அடையச் செய்து, கீழ்படியாமையால் ஆவிக்குரிய கண்களை இழந்து போவதை நாம் பார்க்கலாம். அவர்களின் கண்கள் திறக்கப்பட்டவுடன் அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்பதை அறிந்து தங்களுக்கு வஸ்திரம் வேண்டும் என்று கண்டார்கள். வேதம் சொல்லுகிறது, அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட போது, பாவத்தினால் வந்த கொடிய விளைவைக் கண்டார்கள். தேவனால் கைவிடப்பட்ட பரிதாபமான நிலையைக் கண்டார்கள். தேவனுடைய மகிமை தங்களைவிட்டு எடுபட்டுப்போனதைக் கண்டார்கள். பாவமும் சாபமும் மரணமும் தங்களைச் சூழ்ந்துகொண்டது என்பதைக் கண்டார்கள். அப்படியாக இந்த உலகில் சாத்தான் பாவத்தை அனுப்பினான், அனுப்புகிறான், அனுப்பிக் கொண்டுதான் இருப்பான். ஆமென்.
கொஞ்சம் யோசித்தால் ஒவ்வொரு மனிதனும் பாவ உணர்வடையும்படி அவரவர்க்கு ஆவிக்குரிய மனக்கண்கள் திறக்கப்பட்டால் எவ்வளவு நலமாய் இருக்கும் அல்லவா. அப்பொழுது பாவத்திற்காக மனங்கசந்து அழ முடியும். வேதம் சொல்லுகிறது, பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் .(எசேக்கியேல் 18-20) அதுமட்டுமல்ல பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொண்டால் நாமும் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாக இருப்போம்.
அருமையானவர்களே, இந்த உலகில் மாம்ச கண்கள் தெரியாமல் வாழ்வது எத்தனை பரிதாபமான காரியம் அல்லவா. கர்த்தர் நமக்கு கிருபையாக இரண்டு கண்களைக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இரண்டு கண்களும் தெரியாதவர்கள் போல ஆவிக்குரிய கண்கள் தெரியாதவர்களும் ஆண்டவரை தரிசிக்க வேண்டுமே. ஒருவேளை இங்கே அமர்ந்திருக்கும் நமக்குக் கூட ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும் அல்லவா. இந்த மாமிச கண்களை விட ஆவிக்குரிய கண்கள் விலை மதிப்புள்ளதல்லவா. நாம் ஆண்கள் சங்கம், பெண்கள் சங்கம், உபவாச ஜெபம், முழு இரவு ஜெபம், குடும்ப ஆராதனை போன்ற காரியங்களுக்கு செல்லலாம். ஆனால் நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும்.
ஆம் பிரியமானவர்களே ஆண்டவருக்கு நாம் எவ்வளவு நன்றி உள்ளவர்களாய் இருக்கவேண்டும். இந்தக் கண்களால் நாம் உலகை எவ்விதமாக பார்க்கிறோம். ஏதோ ஒரு முறை அலைபேசியில் அல்லது வேறு ஊடகம் மூலம் தேவையில்லாத அருவருப்பான காரியங்களைப் பார்ப்பது தவறு என்று தெரிந்தும் அதில் மறுபடியும் மறுபடியும் பார்ப்பதுதான் ஆபத்து. ஆவிக்குரிய கண்கள் பறிபோகும் நிலை அதுதான். நாம் ஒரு பொருளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதில் அது தெரியும். இச்சை அடைவது பாவத்தின் ஆரம்பம். இன்றைய AI (ATRIFICIAL INTLLEGENCE) நாம் ஒருமுறை ஒன்றை அலைபேசியில் பார்க்கும்போது, அதை சில SECONDS பார்த்தால் போதும் அதைப்போல காரியங்களே திரும்ப திரும்ப வரும். ஆக நம்முடைய மனிதஅறிவால், உலகஞானத்தால் நாம் பாவத்திற்குத் தப்ப முயலுவது கடினம். சுய பெலத்தால் பாவத்தை மேற்கொள்ளவோ அல்லது சாத்தனை மேற்கொள்ளவோ முடியாது. ஆண்டவரின் ஆன்மீக கண்கள் இருந்தால்தான் அதிலிருந்து தப்ப முடியும். ஆமென். இதைத்தான் ஆண்டவர் இயேசு நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)
நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னை
தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க
என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல — நடக்க
சொந்த பந்தம் ஜாதி ஜனங்கள் அரசியல் நண்பர்கள் யாரும் ஆவிக்குரிய கண்களை திறக்க முடியாது. நாம் ஒருவேளை அந்த பலத்தை நம்பி மோசம் போகவேண்டாம்.
ஆம் பிரியமானவர்களே, ஆண்டவருடைய காருண்யம் என்னவென்றால், சங்கீதம் 146-8,9 – குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார், மடங்கடிக்கப்பட்டவர்களை கர்த்தர் தூக்கிவிடுகிறார், நீதிமான்களை கர்த்தர் சிநேகிக்கிறார், பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் சரீரப்பிரகாரமான கண்களை மாத்திரம் அல்ல, மனக் கண்களையும், அதன்பிறகு ஆவிக்குரிய கண்களையும் திறந்து அவைகளைப் பிரகாசிக்கச் செய்ய வல்லமை உள்ளவர். ஆமென். பவுல் எபேசியர் 1-19 இல் கூறுகிறார், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு அவர் உங்களுக்கு பிரகாசமான மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். ஆண்டவருடைய வல்லமையை சரியாக புரிந்துகொள்வேண்டும் என்றால் அது ஆவிக்குரிய கண்களால் மாத்திரமே முடியும்.
ஒரு பக்கம் ஆண்டவர் ஆவிக்குரிய குருடரின் கண்களை திறக்கிறார், மறுபக்கம் சாத்தான் திறந்திருக்கிற கண்களை குருடாக்கிக் கொண்டிருக்கிறான். ஆண்டவரின் குணாதிசயங்களில் ஓன்று என்று இயேசு சொன்னது “திருடன் (அதாவது சாத்தான்) திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேன்றோன்றுக்கும் வரான். நானோ அவர்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன் என்கிறார்.
சிம்சோன் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டவன் ஆனால் சாத்தானோ வேசிமயக்கத்தை கொண்டுவந்து சிம்சோனின் கண்களை குருடாக்கி அவன் வாழ்வை கெடுத்து விட்டான் அல்லவா. பெலிஸ்திய குரங்காட்டி குரங்கை வைத்து வித்தை காட்டுவது போல இஸ்ரவேலின் நியாயாதிபதி ஆகிவிட்டான். என்ன பரிதாபம். ஆம் பிரியமானவார்களே, கண்களில் இச்சையும், விபச்சார மயக்கமும் நம்முள் நுழையாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். ஆக நம்முடைய ஜெபம் எப்படி இருக்கவேண்டும், ஆண்டவரே ஆன்மீக தரிசனத்தைக் கொடுக்கும் கண்களை நான் இழந்து போகாமல் இருக்க கிருபை தரவேண்டும் என்று அனுதினமும் ஜெபிக்க வேண்டும். அழிந்துகொண்டிருக்கிற அனேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய ஆண்டவரின் ஆன்மீக தரிசனம் தேவை. அதற்கு ஆண்டவரின் ஆன்மீக கண்கள் தேவை. ஆமென்.
ஆண்டவரின் பார்வையில் ஒரு ஊழியரின் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு செய்யும் ஊழியத்தில் அறுவடை நடக்கும், அவன் குருட்டாட்ட மக்களின் ஆவிக்குரிய மற்றும் மாம்ச கண்களை திறக்க முடியும்.. ஆமென்.
மேலும் வேதத்தில் நாம் பார்க்கலாம், இஸ்ரவேலின் ராஜா சிதேக்கியாவுக்கு ஒரு பரிதாப நிலை ஏற்ப்பட்டது. அவன் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்காமல், அவன் மரணமடையும் மட்டும் விலங்கு போட்டு கண் தெரியாமல் காவலில் அடைத்து வைக்கப்பட்டான். என்ன பரிதாபம். ஆண்டவர் சொல்லுவதைக் கேட்க வேண்டுமானால் அல்லது சரியாக புரிந்து கொள்ளவேண்டுமென்றால் நமக்கு ஆன்மீக கண்கள் தேவை. இல்லாவிட்டால் கண்கள் இருந்தும் குருடர்கள்.
எல்லோருக்கும் யோனாவின் வாழ்வு போன்று அவரின் சித்தம் செய்ய மீனின் வயிற்றில் இருந்தாலும் வாந்தி பண்ணவைக்க மாட்டார். யோனா பயபக்தி உள்ளவன் மட்டுமல்ல, உண்மையைப் பேசுகிறவன். நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டான். தேவன் அவனுக்கு பதில் கொடுத்தார். சில வேளையில் மீனின் வயிற்றில் அல்லது பாதாளத்தில் சென்று விட்டாலும் அவரின் வேலை செய்ய வேண்டும் என்றால் நம்மைப் பயன்படுத்துவார். ஆனால் அதற்கு நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு நம்மை தேவனுடைய ஊழியத்தில் ஒப்புக்கொடுக்கும் போது மட்டுமே அது நடைபெறும். யோனாவுக்கு ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு சொல்லுகிறார், யோனா 2: 8 பொய்யான மாயையைப் பற்றிக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். மேலும் அவர் தெளிவாக சொல்லுகிறார், இரட்சிப்பு கர்த்தருடையது. அவரால் மட்டுமே மீட்பு உண்டு என்று ஆணித்தரமாக உணர்ந்து துதி செலுத்தி அறிக்கை செய்கிறார். மீட்பும் பெருகிறார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய எச்சரிப்புக்களுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுங்கள், எப்போதும் தூய்மையாய் நடந்து கர்த்தருடைய கிருபைக்குள்ளே நம்மைக் காத்துக் கொள்வோம். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் தெளிவாயிருக்கும். மத் 6 -22.
III. மூன்றாவதாக கர்த்தர் ஆகாருடைய கண்களைத் திறந்தார் என்று ஆதி 21-19இல் பார்க்கலாம் “தேவன் (ஆகாருடைய) அவளுடைய கண்களைத் திறந்தார் அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.” இங்கே ஆகார் வனாந்தரத்திலே அவள் அருகிலே ஒரு துரவைக் கண்டாள், நீருற்றின் தண்ணீறால் பிள்ளையின் தாகத்தைத் தீர்ததாள். ஆமென். மகனின் சத்தம் தேவ சமூகத்தில் எட்டியது, அவர் “ஆகாரே” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டார். இன்றைக்கும் ஆகரைப் போல என் பிள்ளை அல்லது எனது குடும்பம் அழியப்போகிறது, நானும் இருந்து பயன் இல்லை, எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை, கடன், வியாதி, பிரச்சனை என்னை மூழ்கடித்து விட்டது என்று என்று ஒருவேளை நினைத்து ஆண்டவரிடம் அழுது கொண்டிருக்கும் சகோதரனே, சகோதரியே, இன்று ஆண்டவர் உன்னுடைய பெயரை கூப்பிடுகிறார். அருமை மகனே மகளே பயப்படாதே உன்னுடைய குடும்பத்தை பெரிய ஜாதி ஆக்குகிறேன் என்கிறார். ஆகாரின் மனக்கண்களை திறந்த தேவன் இன்று உன்னுடைய மனக்கண்களையும் திறக்க வல்லவர். நீ அவரிடம் கேள், இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று, கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுவான். ஆமென்.
அதுபோல இன்று உங்களுடைய ஆன்மீக மற்றும் மாமிச கண்கள் மட்டுமல்ல மனக்கண்களும் திறக்கப்பட்டால் கர்த்தர் உங்களுக்காக ஆயத்தம் பண்ணியிருக்கின்ற நன்மையான ஆசிர்வாதங்களையும், அறியாத நீருற்றுகளையும் நமது கண்கள் காணும். ஆமென். பல வேளைகளில் கர்த்தருடைய பிரசன்னமும், ஒத்தாசையும், அற்புதமும், உங்கள் அருகில்தான் இருக்கும். ஆனால் உங்கள் பாரங்களும், கவலைகளும், நெஞ்சை அடைப்பதால் அந்த ஆசிர்வாதங்களைக் காண முடியாமல் போகிறது. ஆம் ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன், அந்த மகளின் கதறலைக் கண்ட தேவன் உங்கள் கண்ணீரைக் காண்கின்ற தேவன் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கரிசனையும் உள்ளவர். இதை நாம் விசுவாசிக்க வேண்டும், அப்பொழுது அனுபவிப்போம்.
ஜெபம் : யோவான் 9:5 "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார் இயேசு" பின்னணி: இயேசு பிறவிக்குருடனாக இருந்த ஒரு மனிதனைப் குணப்படுத்திய பின்னர்.
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
கண்ணில் ஒரு சிறு உறுத்தல் என்றாலே உடனே மருத்துவரிடம் ஓடுகிறோம். சரீரக் கண்களின் அவசியத்தை உணருகிற நாம், நமது ஆவிக்குரிய கண்களைக் குறித்து கரிசனையற்றிருப்பது ஏன்? சரீரக் கண்கள் குருடாயிருநதால் இந்த உலகத்தைத்தான் பார்க்கமுடியாது. ஆனால், நமது ஆவிக்குரிய கண்கள் குருடாய்ப்போனால் நித்தியத்தையே பார்க்கமுடியாது.
லூக்கா – அதிகாரம் 24 - 13 அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.14 போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.15 இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். 16 ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
எம்மாவூர் சீடர்களின் கண்களும் திறக்கப்பட்டன. ஆதாமின் மூலம் மூடப்பட்ட ஆவிக்குரிய கண்கள் இப்போது திறக்கப்படுகிறது. ஆமென் .
ஆண்டவர் நமது மாம்சீக கண்களையும், ஆவிக்குரிய கண்களையும் மனக் கண்களையும் திறக்கப்பட நாம் செய்யவேண்டியது என்னவென்றால், விசுவாசத்தோடு ஆண்டவரே தாவீதின் குமாரனாகிய இயேசுவே எனக்கு இரங்கும் என்று ஜெபித்துப் பெற்றுக் கொள்ளவோமா.
