பரிசுத்த வேதாகமத்தைப் பயன்படுத்தும் விதம்!

19/03/2022 15:55

Dr. செல்வின்

Family Pages Article Image

காலையில் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிப்பது நல்லது. அங்கும் இங்குமாக திருப்பி ஏதாவது ஒரு பகுதியை மேலோட்டமாக வாசிப்பதினால் எந்த விதத்திலும் பயன்பெற முடியாது. 
 
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு புத்தகத்தை தெரிந்துகொண்டு முதல் அதிகாரத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு அதிகாரத்தைப் படியுங்கள். அல்லது ஒரு சில வசனங்கள் அடங்கிய வேதப் பகுதியை வாசித்து வசனங்களைத் தியானியுங்கள். தினசரி வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்துவது அதிக உதவியாக இருக்கும். குறிப்பிட்ட வேதாகமப் பகுதியை வாசிப்பதற்கு  ஜெபத்தை ஏறெடுங்கள். 
 
நீங்கள் தினதியானப் புத்தகத்தையோ அல்லது கிறிஸ்தவ பத்திரிக்கையில் வரும் அனுதின வேத தியானக் குறிப்புகளையோ பயன்படுத்துவீர்களானால் கொடுக்கப்பட்டிருக்கும் வேதப்பகுதியை முதலாவது வாசித்துவிட்டு, கேள்விக்கான பதில்களை யோசித்துப் பாருங்கள். இதற்குப்பின், குறிப்புகளை வாசிப்பது அதிக பயனைக் கொடுக்கும். 
 
ஒரு முறை வாய்விட்டு கருத்துடன் சத்தமாக வாசியுங்கள். மெதுவாகவும், கவனமாகவும், எதிர்பார்ப்புடனும் வாசித்துக் கொண்டேயிருங்கள். காலைநேர வேத வசன தியானத்துக்காக ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களாவது செலவிடுங்கள். 
 
ஒவ்வொரு நாளும் உங்கள் மனதில் பதிந்த அளவிற்கு தெளிவாகத் தென்படுகிற வசனத்தை அல்லது கருத்தை அந்த நாளுக்குத் தேவன் உங்களோடு பேசிய செய்தியாக எடுத்துக் கொள்ளுங்கள். கற்றறிந்த சத்தியங்களைக் கருத்தாகத் தொகுத்து மறக்க முடியாத அளவிற்கு மனதில் பதித்துக் கொள்ளுங்கள். வேதப் பகுதியின் மூலம் உங்களுடன் ஆண்டவர் பேசி, போதித்தவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். 
 
நாள்முழுவதும் அதையே யோசித்துக் கொண்டிருங்கள். ஒவ்வொரு நாள் மதியத்திலும், இரவிலும் அன்று காலையில் கற்றுக்கொண்ட வசனத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்த வேத வசனத்தை ஒவ்வொருநாளும் எழுதி வைத்துக் கொள்வது நல்லது.  
 
கற்றுக்கொண்ட உண்மைகளை அனுபவத்தில் கொண்டுவருவதும், வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் தான் மிகவும் முக்கியம். அதற்காக கர்த்தர் உங்களுக்குக் கிருபை தரவும் உங்களைப் பெலப்படுத்தவும் ஜெபியுங்கள். 
 
காலை நேர வேதவசன தியானத்தில் நீங்கள் கற்றுக்கொண்டவைகளை மற்ற விசுவாசிகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதற்கு முந்திய ஆறு நாட்களில் கற்றுக் கொண்டவைகளை ஒருமுறை திருப்பிப் பாருங்கள்.