மனஅழுத்தம்
மனஅழுத்தம்:
கூட்டுக் குடும்பம் சிதைந்து இன்றைய சிறிய குடும்ப அமைப்பினால், மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. மேலும், கணவன், மனைவி வேலைக்குச் செல்வதும் மனஅழுத்தத்திற்கு மற்றொரு காரணமும் ஆகும். இன்றைய வாழ்க்கை முறையும் குடும்பத்தில் மனஅழுத்தத்தை அதிகரித்துள்ளது. உலகமயமாக்குதலினாலும், புதிய பொருளாதாரக் கொள்கையினாலும், பரபரப்பான வாழ்க்கை முறையாகிவிட்டது இன்றைய வாழ்க்கை. இதனால், வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பேசிக் கொள்ள முடியாத நிலையில் பிஸியாக எல்லோரும் உள்ளனர். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பிஸியாக உள்ளனர். காரணம், இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள வீட்டிலுள்ள அனைவரும் பிஸியாக உள்ளனர். இதனால் மனஅழுத்தம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.
இப்பொழுது அநேக ஆண்களும் பெண்களும் நாகரீகமென நினைத்து "குடிகார குடும்பம்" ஆகின்றனர். பல வேளைகளில் நண்பர்களுடனும், உடன் வேலை செய்பவர்களுடனும் மது விருந்து கொடுப்பது சகஜமாகிவிட்டது. இதுவே நாளடைவில் அவர்களின் மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணமாகிறது.
முக்கியமாக பெண்களிடம் பொறுமை இல்லாமையும், பெற்றோரின் அதிக செல்லமும் ஒரு முக்கிய காரணமாகிறது. அநேக குடும்பங்களில் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு அதிக பணம் கொடுப்பதும் ஒரு பெரிய காரணம்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் கவலை
பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற கவலை வீட்டின் ஆண்களுக்கு; குறைவான பொருளாதாரத்தில் சமாளிக்க வேண்டும் என்ற கவலை வீட்டின் பெண்களுக்கு; படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக படி படி என்ற அழுத்தம் சிறுவர் சிறுமியர் முதல் வாலிபர்களுக்கு; படித்த வாலிபர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற கவலை; தங்களை கவனிப்பதில்லை என்ற கவலை பெரியவர்களுக்கு. இந்த கவலைகளினால் இன்றைய குடும்பங்களில் அனைவருக்குள்ளும் மனஅழுத்தம் காணப்படுகின்றன.
மனஅழுத்தம் அதிகரிப்பதனால் ஏற்படும் விளைவுகள்
மனஅழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு விடியல் தேட தொலைக்காட்சி முன் அமர்ந்தால் எப்போதாவது நல்ல நிகழ்ச்சிகள் காட்டப்படுவதுண்டு. ஆனால், பெரும்பாலும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் வன்முறையைத் தூண்டும் காட்சிகளைக் காட்டி நம் மனஅழுத்தத்தை மேலும் அதிகரித்து விடுகிறது. அக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைகள், கோபங்கள் மறைமுகமாக நம் மனதில் பதிந்து நம் குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் ஏற்பட வழி வகுக்கிறது. விடியல் இங்கு அஸ்தமனமாகிவிடுகிறது. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சீரியல்களில் பெரும்பாலும், குடும்பத்தில் சண்டைகள், தகாத உறவுகள், மூர்க்க தனமான எண்ணங்களையுடைய சூழ்ச்சி சதிகள், நாணயமற்றதன்மை, பொய்யான பணக்காரத்தனம் என்று பல பலக் காட்டப்படுகிறது. இதுதான் உண்மையென்று எண்ணும் அளவிற்கு ஜோடித்துக் காட்டப்படுகின்றன. இதனால், நம் வீட்டிலும் பல போலித்தனத்திற்கு அடிகோலுகிறது. மனஅழுத்தமும் அதிகரிக்கின்றது.
பணமும் மூலகாரம்
பணம் பணம் என்று இந்த உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. நாமும் எவ்வகையிலாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் உள்ள வருவாயிட்டுவோர் மனதில் இருப்பதினால், இன்றைய வியாபாரத்திலும், சம்பாதிப்பதிலும் உண்மையிருப்பதில்லை. கலப்படம், அளவு குறைத்தல், லஞ்சம், சீக்கிரத்தில் சம்பாதிக்கும் முறைகள் என்று வேறு வழிகளில் செல்ல வேண்டிய நிர்பந்தம். இதனால் மனஅழுத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இதை வாசிக்கும் நண்பர்களே! இதே சூழ்நிலையில் நீங்களும் இருக்கின்றீர்களா? மனஅழுத்தினால் சோர்ந்து போயிருக்கிறீர்களா? மனஅழுத்தத்தினால் விரக்தி ஏற்பட்டு கவலை, கோபம் என்று எரிச்சலுடன் வாழ்க்கை நடத்தும் பலர், என்ன வாழ்க்கை இது! பேசாமல் செத்துச் தொலைக்கலாம் என்று நினைப்பதுண்டு. மனஅழுத்த மிகுதியினால் பலர் தற்கொலை செய்து கொள்வதுண்டு. சமீபகாலமாக வியாபார நஷ்டத்தினால், அநேக கடனிமித்தம் பலர் தற்கொலை செய்ததை நாம் தினசரி நாளிதழ்களில் படித்ததுண்டு. மனஅழுத்தம் குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கும். நல்லுறவினைப் பாதிக்கும்.
லஞ்சம் மற்றும் வேறு தவறான வழிகளில் சம்பாதிக்கும் பணம் அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கையை கண்டிப்பாக பாழாக்கும் என்பதில் ஐயமே இல்லை.
இதோ வழி
ஆதலால், மனஅழுத்தத்தினின்று நாம் கண்டிப்பாக விடுபடவேண்டும். அதற்கு நல்ல வழியுண்டு.
வேதம் காட்டும் வழியில் நாம் நடந்தால், அதிலிருந்து நாம் விடுபட முடியும். இயேசு இந்த உலகத்திலிருந்து பரத்திற்கு போகும் முன்பு நமக்கு சமாதானத்தை வைத்து போவதாக (யோவான் 14:27) கூறினார். அப்படியானால் நாம் அந்த சமாதானத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. ஒரு வேளை நாம் மனஅழுத்தத்தில் இருந்தால் நாம் மனஅழுத்தத்தை தெரிந்தெடுத்தோம் என்று அர்த்தம். இயேசு வைத்துப் போன சமாதானத்தை நாம் தேர்தெடுக்க வில்லை என்று அர்த்தம். “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள் (ஏரேமியா 2 : 13). இந்த சூழ்நிலை நம்முடைய இன்றைய நிலைமையை சரியாக காட்டுகிறது அல்லவா! நாம் கர்த்தரைத் தெரிந்து கொள்ளாமல் வெடிப்புள்ள உலகப்பிரகாரமான வெடிப்பு தொட்டிகளை நாடி ஓடி மனஅழுத்தத்தினால் நிறைந்திருக்கிறோம்.
இன்று கர்த்தர் நம்மை ஜீவத்தண்ணீராம் அவரண்டை அழைக்கிறார். நாம் அவரிடத்தில் வந்தால் அவர் நம்முடைய பாரங்களை சுமப்பார். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! என்னிடத்தில் வாருங்கள் என்று நம்மை இயேசு அழைக்கிறார். மேலும், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றும் வாக்களித்திருக்கிறார் (மத்தேயு 11 : 28). நாம் அவரை தேர்ந்தெடுப்போமா? அவர் வைத்துப் போன சமாதானத்தை நாம் எடுத்துக் கொள்வோமா?
மனஅழுத்தத்திலிருந்து விடுபட பரிசுத்த வேதாகமம் காட்டும் வழிகள்
- முதலாவது நாம் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியை நாம் தேட வேண்டும். அப்பொழுது நம்முடைய தேவைகளை தேவன் சந்திப்பார்.
- நம் கண் முன் நிறுத்தியிருக்க வேண்டியவைகள் தேவனுடைய வசனத்தையே. உலகப்பிரகாரமான மாயையான டிவி பணம் போன்றவற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்.
- பண ஆசையை கொண்டு சம்பாதிக்காமல் கர்த்தர் வழியில் பணமும் உலகத்திலுள்ள அனைத்தும் கர்த்தருடையதென்று உணர்ந்து போதுமென்கிற மனதுடன் நாம் சம்பாதித்தால் தேவன் நம் வருவாயை ஆசீர்வதிப்பார். காரணம், பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. ஆனால் பணம் நம் வாழ்க்கைக்கு தேவை. அது நமக்கு தேவையை சந்திக்க போதுமென்கிறவகையில் (மனதுடன்) சம்பாதிக்க வேண்டும்.
- நம் கவலைகளெல்லாம் கர்த்தரிடத்தில் ஒப்படைத்து நாம் கர்த்தருக்குள் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
எல்லா சூழலிலும் மனரம்மியமாக இருக்கவேண்டும் அதில் நமது பிள்ளைகளும் பழக வேண்டும். அப்பொழுதுதான் மனஅழுத்தம் நமது குடும்பத்தை விட்டு நீங்கும்.