1. நா_காக்க….

ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு… 
உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு… 
உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு… இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி…. 
அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது… 
தன் பலம் முழுவதையும் சேர்த்து…..

என்ன ஆச்சு… 
முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது… 
என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு….

இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல், மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து…. 
தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக்கொண்டு….. நம்மையே இழந்து விடுகிறோம்….

படித்ததில்_பிடித்தது….Stories

 
 
2. பேய் வீடு -  என் தகப்பனார் ஓர் அரசாங்க அதிகாரி! பிள்ளைகள் நாங்கள் 4 பேர்! என் தகப்பனார் லஞ்சம் வாங்குவதில் கில்லாடி! வாங்குகின்ற லஞ்சப் பணத்தை அப்படியே குடித்து விரயமாக்குவார்! அவர் குடிபோதையில் இல்லாத நேரங்களில், என் தகப்பனாரின் உடல் நடுங்க ஆரம்பிக்கும். அந்த நேரங்களில், என்னைக் கூப்பிட்டு மதுவை ஊற்றிக் கொடுக்க வைத்திருக்கிறார். பல அதிகாரிகள் வந்து எங்கள் வீட்டில் உட்கார்ந்து, அவரிடம் பேசும்போது விலை உயர்ந்த மதுவை அவர்கள் ஊற்றிக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.   

என் தாயார், வாரத்தில் 5 நாட்கள் படுத்து, தூங்கிக்கொண்டே இருப்பார்கள்: சாப்பிடமாட்டார்கள்: எழுந்து உட்கார முடியாது. என் தகப்பனாருக்கு அதிக கோபம் வரும்போது, ஒரு குடம் தண்ணீர் எடுத்து, என் தாயார் மேல் ஊற்றுவார். உடனே என் தாயார் தூக்கத்திலிருந்து எழுப்புவார்கள்.   
மறுபடியும் இரண்டு நாட்கள் கழித்து தூங்கிவிடுவார்கள். இது 15ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி. ஆகவே, எங்கள் வீட்டை பேய் வீடு என்று எங்கள் பகுதியில் சொல்ல ஆரம்பித்தார்கள்.    
ஒருநாள், என் தகப்பனார் அதிக குடிபோதையில் இருந்தார். என் தாயார் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் நான்கு பிள்ளைகளும் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து எங்கள் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் புதியவர் ஒருவர் என் தகப்பனாரைக் காண வந்தார்.   
"ஐயா உங்களைப் பார்க்கும்படி இயேசு தெய்வம் கூறினார்" என்றார்.  என் தகப்பனார் உடனே, "ஏன்";? என்று கோபத்தோடு கேட்டார்.   
"எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் உங்கள் வீட்டில் அமைதி, சந்தோஷம், மகிழ்ச்சி இல்லை என்பதை, நான் என் ஜெப நேரத்தில், என் மனதில் உணர்ந்தேன். ஆகவே உங்கள் வீட்டை எப்படியோ விசாரித்து வந்தேன்" என்றார்.   
என் தகப்பனரால் அவர் பேசுவதைச் சரியாக கேட்க முடியாத நிலை! போதையில் இருந்தார். நாங்கள் 4 பேரும் அப்பெரியவர் அருகில் உட்கார்ந்தோம்.   "உங்களுக்காக ஜெபிக்கட்டுமா? என்று மறுபடியும் வந்தவர் கேட்டார். என் தகப்பனார் சரி" என்றார். 
 
வந்தவர் முழங்கால் படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார். ஜெபத்தில், எங்கள் வீட்டில் நடந்துவரும் நிகழ்ச்சிகளை, அப்படியே சொல்லி விட்டார்! முழங்கால் படியிட்ட என் தகப்பனார் கீழே விழுந்தார்! எப்படியோ சமாளித்து முழங்காலில் நின்று, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.   
"தங்கள் அம்மா"? என்று அந்த பெரியவர் எங்களிடம் கேட்டார். என் தகப்பனார் ஒரளவு நினைவில்; இருந்ததினால், "என் மனைவி தூங்கிக்கொண்டிருப்பாள்! என்றைக்காவது எழுந்து உட்காருவாள்"! என்றார்.  "அப்படியானால், அவர்கள் படுத்திருக்கும் அறையில் போய் ஜெபிப்போமா"? என்றார்.   
என் தாயார் தூங்கி கொண்டிருந்த அறைக்கு, வந்த பெரியவரை, என் தகப்பனார் அழைத்து சென்றார். என் தாயார் படுத்திருக்கும் கட்டிலின் அருகில் என் தகப்பனார் நின்று கொண்;டிருந்தார். என் தாயார் அருகில் நின்று, வந்த பெரியவர் மறுபடியும் ஜெபிக்க ஆரம்பித்தார். என் தகப்பனாரோ முழங்கால் போட முயற்சித்தும், முடியாமல், கீழே விழுந்து, விழுந்து, சமாளித்தார்.   
வந்திருந்த மனிதர் ஓரு தேவ ஊழியர் என கண்டு கொண்டேன்! அவர் ஜெபித்த போது, ஜெபத்தில் கூறிய வார்த்தைகள் என் உள்ளத்தை அதிகம் தொட்டது. நான் அழுதேன்! எல்லோரும், அழுதார்கள்! என் தகப்பனாரும் தேம்பித் தேம்பித் அழுதுகொண்டேயிருந்தார்! அப்படி என் தகப்பனார் அழுததை, நான் பார்த்ததேயில்லை. அந்த தேவ மனிதர் ஜெபித்துக் கொண்டிருந்த போது, தூங்கிக்கொண்டிருந்த என் தாயார் மெதுவாக, கண்களைத் திறந்து "என்ன, ஜெபமா"? என்றார்கள்.  ஆச்சரியத்துடன் "ஆம்"; என்றோம். என் தாயார் எழுந்தார்கள்! கட்டிலில் உட்கார்ந்தார்கள்.  உடனே, எங்களோடு நெடு முழங்காலில் என் தாயாரும் நின்றார்கள். என் தாயார் கண்விழித்து, முழங்காலிட்டது ஒரு புதுமையாக இருந்தது! 10 நிமிடம் அந்த தேவ மனிதர் ஜெபித்தார்.    
சாதாரண வார்த்தைகள் ! ஆனால் அந்த வார்த்தைகள், என்  என் தந்தையை அழச் செய்தது. என் தாயாரை விழிக்கச் செய்தது. அவர் ஜெபித்து முடித்ததும், என் தகப்பனார் "நன்றி ! நன்றி"!! என்றார்.   "அடிக்கடி வாருங்கள்"! என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்.   
என் தாயார், அன்று தான் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, எழுந்து, குளித்து விட்டு சமைத்தார்கள். 
 
என் தகப்பனார், பொதுவாக மூன்று மணி நேர இடைவெளியில் குறைந்தது ஒரு பாட்டிலாவது மதுபானம் குடிப்பார்கள். ஆனால், அன்று, அவர் மதுபானம் குடிப்பதற்கு மாறாக  வேதபுத்தகத்தைத் தேடி எடுத்தார்! முழங்காலில் நின்று வாசிக்க ஆரம்பித்தார்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை!   என் தாயார் சமைத்து 15 ஆண்டுகள் ஆகியிருந்தது! பிள்ளைகளாகிய நாங்கள் வைக்கும் ரசமும், அப்பளமும்தான் சாப்பாடு. அந்த இரவு, எங்கள் வீட்டில் ஓர் இனம்புரியாத அமைதி! மகிழ்ச்சி! அத்துடன் தாயார் செய்த இனிய சாப்பாடு! அடுத்த நாள் காலை, என் தகப்பனார் முழங்காலில் நின்று வேத புத்தகத்தை மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருந்தார். அன்றும் அவர் மதுபானம் குடிப்பதற்கு பாட்டிலைத் தொடவேயில்லை! என் தாயார், அதன்பின், அந்த இரவில் கூட தூங்கச் செல்லவேயில்லை!.  
15 ஆண்டுகளாக "பேய் வீடு" என்று சொல்லி அழைக்கப்பட்ட எங்கள் வீடு, அன்று முதல் மகிழ்ச்சி நிரம்பிய வீடாக மாறியது!   இன்று, என் தகப்பனார் ஓர் தேவ ஊழியர்! என் தாயார் ஓர் ஜெப வீராங்கனை! பிள்ளைகளாகிய நாங்கள் நான்கு பேரும் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்கிறோம்.    
உங்கள் வீடு "பேய் வீடா?".  அல்லது தேவன் வாசம் செய்யும் "தேவ வீடா"?   

இயற்கைக்கு விரோதமான காரியங்கள் உங்கள் வீட்டில் காணப்படுகின்றதோ? உங்கள் வீட்டில் சமாதானமே இல்லையோ? குடிப்பழக்கம் உண்டோ?அடிபிடி சண்டையோ? சந்தேகம் அதிகம் உண்டோ? பண நஷ்டம் அடிக்கடி ஏற்படுகின்றதோ? புகைப் பழக்கமும் அதிகமோ? லாட்டரி சீட்டுக்கு அடிமையோ? டிவி யில் அசிங்கங்கள் பார்க்கும் ஆபாசப் பழக்கம் உண்டோ? இவைகளே, உங்கள் வீடு "பேய் வீடு" என்பதற்கு அடையாளம்.  
இயேசு கிறிஸ்து உங்கள் இல்லத்தில் தங்க விரும்புகிறார்! நீங்கள் யாராக இருந்தாலும், இயேசுவை அழைத்துப் பாருங்கள்! அவர் "பேய் வீட்டை"  "சொர்க்க வீடாக" மாற்றுவார்!  
நண்பரே! உங்கள் வீடு எப்படி? ஒரு வேளை, "பேய் வீடாக" இருக்குமென்றால், என்னோடு பிரார்த்தனை செய்வீர்களா?  
"என் வீடு பேய் வீடே"! இதை மாற்ற, எத்தனையோ பிரயாசங்கள் எடுத்துவிட்டேன்! இன்று இயேசுவே உம்மிடம் வருகின்றேன்! நீரே சாபங்களைத் தொலைத்த தெய்வம்! என் சாபங்களை நீக்கும்! பாவங்களை மன்னியும். என் மனதில் வாரும்! எங்கள் வீட்டையும் சுத்தம் பண்ணும்! எங்கள் வீட்டில் தங்கி, எங்களை ஆசீர்வதியும்! இயேசுவின் மூலம் ஆமென்! ஆமென்!"
இனி உங்கள் வீடு பேய் வீடு அல்ல! இயேசு வாசம் செய்யும் இன்ப வீடே! வேத புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்! அருகில் உள்ள தேவனுடைய சபையில் இணைந்து, இந்த இயேசு தெய்வத்தை ஆராதியுங்கள்;;: இயேசு நித்தமும் நடத்துவார்!

"இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்!" (லூக்கா 19:5)

 

---

அரிய பாடம்....? -

நான் ஒரு மருத்துவர். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை, இரு ஆண் பிள்ளைகள், தமிழ் நாட்டிலிருந்து வந்த நாங்கள், லண்டன் பட்டணத்திலிருந்து சுமார் 60 மைல் தொலைதூரத்தில், ஓர் அழகிய கிராமத்தில் வசித்து வருகின்றோம்.  
வேதத்தை அருமையாக விளக்கும் ஓர் ஆராதனையில் ஒழுங்காகப் பங்கு பெற்று வருகிறோம். என் மனைவியும் ஓர் மருத்துவர். எங்களுக்கு நல்ல வருமானம். எங்கள் இரண்டு குடும்பத்தின் பெற்றோர்களும் ஆண்டவரை அதிகம் நேசிக்கிறவர்கள்.   
எனக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒரு நாள் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் நீண்ட வாக்குவாதம் எழுந்தது. எனக்கு வந்த கோபத்தில் நான் என் மனைவியை இரண்டு அடிகள் அடித்து, அப்படியே தள்ளிவிட்டு விட்டேன்.  
கீழே விழுந்த என் மனைவி முகத்தில் காயம். இந்த சத்தத்தைக் கேட்ட அண்டை வீட்டுக்காரர் போலீசுக்கு உடனே போன் பண்ணிவிட்டார். அடுத்த 10 நிமிடத்தில் இரண்டு போலீசும், ஒரு பெண் போலீசும் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். கன்னத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.  
என்னைப் போலீஸ் அழைத்துச் செல்லும்போது கதறிக்கதறி அழுதாள் என் மனைவி. லண்டன் மாநகரத்தில் போலீஸ் கெடுபிடி அதிகம். போலீஸ், தங்கள் காரில் கொண்டு சென்றபோது என் பாக்கெட்டில் இருந்த செல்போன். ஐ.டி.கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் என்னுடைய பர்ஸில் இருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டனர். என் வாழ்க்கையில் முதல் தடவையாக போலீஸ் காரில் பயணம் செய்தேன். ஒரே பயம்! திகில்! அது இரவு சுமார் 10 மணி இருக்கும்! நல்லவேளை, என் பிள்ளைகள் மூன்று பேரும் அவ்வேளையில் தூங்கிவிட்டனர்.  
போலீஸ் ஸ்டேஷனில் என்னிடம் கேட்ட கேள்வி பதில்கள் அத்தனையையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். எனக்கு இன்னும் பயம். என் வாழ்க்கையே தொலைந்தது போல எண்ணினேன். "எப்படி இந்த இடத்திலிருந்து வெளியே வருவது"? என்று எண்ண ஆரம்பித்தேன். பிறகு உணவு கொடுத்தார்கள். சாப்பிட இஷ்டமில்லை. என் அறையில் 5 பேர் இருந்தார்கள். 5 பேரும் முரடர்கள். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள்.   
எளிய படுக்கை. வெளியே நல்ல குளிர். உள்ளே உஷ்ணப்படுத்தியிருந்தார்கள். இரவு 12 மணிக்கு எனக்கு ஜெபிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முழங்கால் போட்டேன். கதறிக் கதறி அழுதேன்.   
அந்த அறையில் இருந்த 5 பேரும் விழித்துக் கொண்டார்கள். ஆங்கிலத்தில் "சத்தம் போடாதே" என்றார்கள்.  இப்போது என்னுடைய சத்தத்தைக் குறைத்து அதிகமான கண்ணீர் விட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். என் தவறுகள் ஒவ்வொன்றாக என் மனதில் வந்தது. தேவனிடம் அறிக்கைவிட ஆரம்பித்தேன். மனைவியை அடித்தது... தசமபாகம் தேவனுக்கு கொடுக்காதது... வேதம் வாசிக்காதது... எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக ஞாபகப்படுத்தினார். சுமார் 3 மணி நேரம் அழுது ஜெபித்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டேன்.  
காலை 7 மணி இருக்கும்! எங்கள் அறைக்கு நல்ல சூடான டீ கொண்டு வந்தார்கள். குடித்த மறுபடியும் ஜெபித்தேன்! காலை 8 மணிக்கு காலை உணவு.. நன்றாகச் சாப்பிட்டேன். அடுத்த நாள் என்னை விசாரணை செய்தார்கள். மூன்று நாள், நான் சிறையில் இருந்தேன். ஆனால், முதல் சில மணி நேரம் தவிர மற்ற நேரத்தில் தேவன் என்னிடத்தில் நெருக்கமாக இருப்பதை உணர முடிந்தது.. என்னை தேவன் புதுப்பிக்க அர்ப்பணித்தேன். இழந்துபோன மகிழ்ச்சி எனக்குத் திரும்பவும் கிடைத்தது. ~யோனா| கதை என் வாழ்வில் நடந்து  கொண்டிருப்பதை உணர்ந்தேன்.  
            இதற்கிடையில், என் மனைவி இரவு பகலாக முயற்சி செய்து, போலீஸை தொடர்பு கொண்டு, மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்களாம். ஆனால், என்னை சந்திக்கவோ, பார்க்கவோ போலீஸ் அனுமதிக்கவில்லை.    3 நாட்களுக்குப் பிறகு என்னை கோர்ட்டிற்கு கொண்டு சென்றார்கள். "தெரிந்த யாராவது உண்டா?" என்று நோட்டமிட ஆரம்பித்தேன். தூரத்தில் என் மனைவி நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அதிக கவலையோடு இருந்தார்கள். ஆனால், என் மனதிலோ மகிழ்ச்சி.. ஜட்ஜ்க்கு முன் நின்ற போது நடந்த எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டேன்.  
அந்நாட்டின் சட்டப்படி, ஓர் சிறிய தொகையை அபராதமாக விதித்தார்கள். உடனே அபராதத்தை என் மனைவி கட்டினார்கள்.    மறுபடியும் 15 நாட்களுக்குப் பிறகு வந்து பார்க்க வேண்டும். ஒரு மாதம் கழித்து இந்த கேஸை முடிப்போம்" என்று சொன்னார்கள்.  
என் பொருட்கள் எல்லாவற்றையும் உடனே தந்து, விடுதலை செய்தார்கள். வெளியே வந்தேன். என் மனைவி, தான் எடுத்த பிரயாசம் அத்தனையையும் கண்ணீரோட சொன்னார்கள். என் மனைவியின் கரத்தைப் பிடித்து தேம்பித் தேம்பி அழுதேன். தேவன் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்களைச் சொன்னேன். என் மனைவி அமைதியாய்க் கண்ணீர் விட்டார்கள்.  வெளி தேசத்தில், பணத்திற்காகவே வாழ்ந்து விட்ட என்னை.. தேவன் ஒரு சிறைக்குள்ளே நிறுத்தி கற்றுக் கொடுத்த பாடம் எத்தனை புதுமையின் பாடங்கள்!  
நண்பரே! தூரசேதத்தில் தேவனை மறந்து விட்டீர்களோ? தாங்களும் நெருக்கத்தில் இருக்கின்றீர்களோ? கடந்த நாட்களில், மறந்துவிட்ட பொருத்தனைகளை மறுபடியும் நினைவு கூறுங்கள். ஒத்துக்கொள்ளுங்கள். புதிய தீர்மானங்களை எடுங்கள். தேவன் தங்களை உயிர்ப்பிப்பார். வழி நடத்துவார். கனப்படுத்துவார். உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்.
 
"ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்". (வெளி 2;:4,5)                        

-டாக்டர். பிரேம் சிங், லண்டன்.


3.  கிருஸ்தவ குறு நாடகம்

கிருஸ்தவ குறு நாடகம்

முன்னுரை : இந்த உலக வாழ்வு முடித்து கிருஸ்தவ நபர்கள் 5 பேர், பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய தேவதூதன் முன்பாக நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுவதாக ஒரு கற்பனை உரையாடல்

ஐந்து நபர்கள் ----வரிசையில் நிற்கின்றனர்......அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்......ஒரு காவலாளி வாசலில் நிற்கிறார் ....கதவு திறக்கப்படுகிறது ....பிறகு தேவ தூதன் வந்த பிறகு....ஒரு மேசையில் அமர்கிறார்....நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது........

ஐந்து நபர்கள் :

1. உலகப் பிரசித்திபெற்ற ஊழியக்காரர்

2. பராம்பரிய கிருஸ்தவன்,  பணக்காரன், படித்தவன்

3. சபையின் அங்கத்தினர்

4. கிருஸ்தவ ஆசிரியர் / வேதபண்டிதர்

5. உண்மையான விசுவாசி

 

இடம் :  பரதீசு

இரண்டு தேவதூதரின் உதவியாளர்கள் உரையாடல்  

உதவி 1 . ண்ணே என்ன இன்று 29ம் தேதி ஞாயிறு காலை இன்னும் யாருமே வரவேயில்லை.

உதவி 2. தம்பி ...அந்தாப்பாறு ...ஒருவர் வருகிறார்,..... இந்தா இங்கே ஒருவர் ..... அதெல்லாம் வந்துகொண்டேதான் இருப்பார்கள் .....அந்தோ இன்னும் மூன்று பேர் வருகிறார்கள்.... போதும் இந்த 5 நபர்கள் இப்பொழுது, அப்புறம் பார்க்கலாம்..

...வந்த 5 நபர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர் ...

 உலகப் பிரசித்திப்பெற்ற ஊழியர் : நான் இப்போ எங்கு இருக்கிறேன், நான் சனிக்கிழமை இரவு படுக்கைக்கு சென்றதுதான் தெரியும்... இன்று நமது மதுரையின் பெரிய ஆலய ஆராதனையில் செய்தி கொடுப்பதற்கு செல்லவேண்டுமே ....எங்கே இருக்கிறேன் .

பாரம்பரிய கிறிஸ்தவன் : நேற்று நான் இரவு காரில் வந்து கொண்டு இருந்தேன்....இப்ப எப்படி இங்கே  

 

சபை அங்கத்தினர் : அய்யா நான் நேற்று swiggy ஆர்டர் போட்டு குடும்பமாக சாப்பிட்டு படுத்ததுதான் தெரியும்......

 

கிருஸ்தவ ஆசிரியர் : நான் நேற்று Taj ஹோட்டல் சென்று என்னுடைய பைக்கில் வந்து .......பைக் மெயின் ரோட்டில் வரும்போது எதிரே இரண்டு பைக்கள் வருவது போல எதிரே இரண்டு lights தெரிந்தது, நான் இரண்டிற்கும் இடையில் புகுந்து போய் விடலாம் என்று நுழையும்போது அது பைக் இல்லை ஒரு லாரி என்று புரிந்தது அதுவரை ஞாபகம் இருக்கின்றது  .....வேறு ஒன்றும் தெரியாது...இப்ப இங்கே இருக்கிறேன்.  

 

உண்மை விசுவாசி : நானும் இரவு குடும்பமாக ஜெபித்துவிட்டுப் படுத்தோம்....ஆனால் இங்கே இப்பொழுது ......

 

உதவி 1 : என்ன சத்தம்..... நீங்க இருப்பது “பரதீசின் வாசலில் இருக்கிறீர்கள் .....

உதவி 2 : இந்த தேவதூதன் வந்துவிட்டார், எல்லோரும் அங்கே போய் நில்லுங்கள் ...சொல்லும்போது வரலாம்

தேவதூதன் : என்ன இன்று ஜீவபுஸ்தகத்தில் இருக்கும் விவரம் தெரிய எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்

உதவி 1 : 5 நபர்கள் இருக்கிறார்கள் .....

தேவதூதன் :  ஒவ்வொருவராக வரச்சொல் ......

உதவி 2 : நீங்கள் வாருங்கள்என்று உலகப் பிரசித்திப்பெற்ற ஊழியரைப் பார்த்து ....

.(.கடைசியாக வில்லியம்ஸ் வருகிறார்) 

உதவி 1 : தங்களும் அங்கே நில்லுங்கள

  1. முதலாம் நபர் :  கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதரர் தேவதூதன் அவர்களே. Praise the Lord.  என்னுடைய பெயர் “உலக பிரசித்தி பெற்ற ஊழியர் ஆல்பர்ட்”.  நான் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு ஆலயத்தில் பிரசங்கம் செய்வேன், அதுமட்டுமல்ல அந்த பிரசங்கத்தை youtube மூலமும் உலகம் முழுவதும் அநேகர் கேட்பார்கள். முக்கியமாக லெந்து நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ரொம்ப tight.  இன்னும் இரண்டு வருடங்களுக்கு எனக்கு செய்தி கொடுக்க advance booking செய்திருக்கிறார்கள், என்றால் பாருங்களேன். நான் இங்கு வந்ததும் அந்த சபைகளின் மக்கள் எல்லோரும் மிகவும் வருந்துகிறார்கள், அங்கே பாருங்கள்.   பிரசங்கத்திற்கு ஆலயத்தில் எனக்கு கொடுக்கும் காணிக்கையில் 10/1 பங்கு சரியாக தசமபாகம் அங்கேயே கொடுத்து விடுகிறேன். நான் flightஇல் தான் போவேன் / வருவேன்.. அவ்வளவு busy. எனது கூட்டத்திற்கு லட்சக் கணக்கில் மக்கள் வருவார்கள்,.. ஆக நான் தான் முதலில் பரலோகம் செல்ல வேண்டும்.......
          எனது செய்தி  அனைவருக்கும் மிகவும் ஆசிர்வாதமாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள் .   ஆசிர்வாததின் மழை பொழியும்.  நான் என்றைக்குமே தவறுகளை செய்தியில் கண்டித்து பேசியது கிடையாது. அதுதான் என்னை மறுபடியும் அந்த சபைக்கு செய்தி கொடுக்க கூப்பிடுவார்கள்.   
 

தேவதூதன் : அன்பு சகோதரர் “ஆல்பர்ட்” அவர்களே ஆனால் உங்களது குடும்பத்தை மறந்து விட்டீர்களே, உங்களது குடும்பத்தில் இருக்கும் நபர்களில் எத்தனை பேரை இரட்சிப்பின் அனுபவத்தில் வழி நடத்தி இருக்கிறீர்கள். .....

அதுமட்டுமல்ல, தாங்கள் என்றைக்காவது  "பரிசுத்த ஆவியானவர் பாவத்தை குறித்தும், நீதியைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவான்16:7-8" என்பதுபோல கண்டித்து செய்தி கொடுத்தது உண்டா ?...அது உமக்கே தெரியும் 

.........செல்லாது, செல்லாது ..sorry you are not allowed.  

  1. இரண்டாம் நபர் : அருமை சகோதரர் தேவதூதன் அவர்களே, வணக்கம், என்னுடைய ஆதார் எண் ....,  பெயர் “பால் ஜோசப்.  நான் பாரம்பரியம் மிக்க XZY சபையைச் சேர்ந்தவன்.  நான் ஒவ்வொரு வாரமும் 1000 ரூபாய் காணிக்கை கொடுப்பது மட்டுமல்ல மற்றும் பல ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு ஊழியத்திற்கும் கொடுக்கிறேன்....போனவாரம் கூட கிருஸ்துமஸ் மரவிழாவிற்கு 50000 ரூபாய் கொடுத்தேன். எங்க போதகரிடம் கேட்டுப் பாருங்கள். நான் இப்போ இங்கிருந்து அவரிடம் பேச முடியாது, நீங்களே அவரிடம் கேட்டுப் பாருங்கள்.   அவருடைய மொபைல் எண் தரவா.........அதுமட்டுமல்ல எங்க போதகர் எதுவும் பணம் தேவை என்றால் முதலில் என்னைத் தான் கேட்பார். மேலும் நான்தான் எங்க சபையில் அதிகம் படித்தவன், பணகாரன். எப்படியும் என்னுடைய பெயரை ஒரு மாதத்தில் இரண்டு தடவையாவது போதகர் ஆலயத்தில் வாசிப்பார். ஆக எனக்கு அனைத்து சபையாரும் மதிப்பு கொடுப்பார்கள்......முக்கியமாக எனது பெயர் அநேக ஆலய கல்வெட்டுக்களில் “பால் ஜோசப் ” என்று இருக்கிறது.

தேவதூதன்: நல்லது, அதெல்லாம் சரி,  பால் ஜோசப்  அவர்களே, போன பெரிய வெள்ளி அன்று உங்கள் போதகர் பிரசங்கம் பண்ணும்போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.

பால் : அதுவா சற்று அசதியில் தூங்கி விட்டேன், முந்தைய வியாழக்கிழமை இரவு உலகக்கோப்பை கிரிக்கெட் FINALS பார்த்துவிட்டு லேட் ஆக தூங்கிவிட்டேன், அதுனால ஒரு சின்ன அசதி.

தேவதூதன்: அது சரியா.....

பால் : Sorry, சகோதரரே.. நான் நித்திய பரலோக இராஜ்ஜியம் உள்ளே போகலாமா?...

தேவதூதன் : கொஞ்சம் பொறுங்க, போன வாரம் ஆராதனையில் துதி ஆராதனை வேலையில் என்ன செய்தீர்கள்.

பால் :ஓஒ அதுவா, துதி ஆராதனை வேளையில் அருகில் இருக்கும் நபர்கள் நன்றாக கைகளை உயர்த்தி பாடி, துதித்துக் கொண்டிருந்தார்கள்.  நானும் துதிக்குக் கொண்டு தான் இருந்தேன். திடீரென்று எனது மொபைல் அடித்ததும் “ஹலோ” என்று பேசினேன்........”என்ன நம்ம காளை மாடு கன்று போட்டு விட்டதா” கடவுளுக்கு ஸ்தோத்திரம்....என்று ஆண்டவருக்கு நன்றி தானே செலுத்துனேன்.

தேவதூதன் : ஆராதனையில் அலைபேசி பேசுவது சரியா....

பால் :sorry சகோதரரே.

தேவதூதன் :. எத்தனை sorry..ஆக நீர் பரலோகம் செல்ல வேண்டுமா? அல்லது முடியுமா? ... சகோதரரே,.பணம் சம்பாதிப்பது தவறல்ல, ஆனால் பணக்காரன் என்ற பெருமை கூடாது அல்லவா!!,  டிவி, மொபைலில்  அதிக நேரத்தை வீணடிப்பதும் தவறுதானே, அது உங்கள் ஆத்துமாவை அழிக்கிறதல்லவா. 

ஆண்டவரை ஏற்றுக்கொண்டு ஒரு ஆத்துமாவையாவது சபையில் சேர்த்திருக்கிறீரா?, ஆலய ஆராதனையில் பணக்காரன் என்ற மமதையில் அலட்சிய வாழ்வு வாழ்வது பாவமல்லவா.  sorry you are not allowed.  .... செல்லாது, செல்லாது

  1. மூன்றாம் நபர் : Good Morning Angel சார்.   இந்தாங்க எனது ஆதார் எண்.....பெயர்,.யோசேப்பு

தேவதூதன்: சரி “யோசேப்பு” அவர்களே உங்களின் உலக வாழ்வு பற்றி கூறுங்கள்.

யோசேப்பு : Mr Angel, அவர்களே, நான் தொடர்ந்து எங்கள் சபையில் பல வருடங்கள் மூப்பர் மட்டுமல்ல இரண்டு term செயலராகவும், ஒரு term பொருளாளராகவும் இருந்திருக்கிறேன். எனது தாத்தா, அப்பா இப்படி எங்களது பரம்பரையே இந்த ஆலய பொறுப்பில் இருந்தவர்கள். அநேக ஆலய விரிவாக்கம், அணைத்து ஆலய காரியங்களில் என்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு இருக்கிறேன். .அநேக ஊழிய நிருவனங்களில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறேன். மட்டுமல்ல எனது மனைவி பெண்கள் ஐக்கிய சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.    நாங்கள் குடும்பமாக ஆலய வேளைகளில் ஈடுபடுவோம்.  என் மகன்  இல்லாவிட்டால் எங்களது ஆலய choir கிடையாது என்றால் பாருங்களேன். அதுமட்டுமல்ல எனக்கு போன பேராயர் ஆபிரகாம் அவர்கள் ஒன்னு விட்ட சித்தப்பா, அவ்வளவு நெருங்கிய சொந்தம். இதோ எனது பின்னால் நிற்கிறாரே சகோதரர் வில்லியம் அவரிடம் கேட்டுப் பாருங்கள், அவரே சொல்லுவார்.

வில்லியம்:  ஆமாம் ஆமாம் அய்யா, இவரில்லாமல் எங்களது ஆலயமே கிடையாது.  இவரின் குடும்பம் ஆலய வளர்ச்சிக்கு மிகுந்த பாடுபட்ட குடும்பம்..

யோசேப்பு: அய்யா வில்லியம் சத்தமாக அவருக்கு கேட்கும்படி சொல்லுங்கள், நீங்கள் சொல்லுவது எனக்கே கேட்கவில்லை....     

தேவதூதன்: அதிருக்கட்டும்......அய்யா யோசேப்பு நீங்களே சொல்லுங்கள். போன மாதம் நீர் ஒரு நாள் ஆலயத்தில் சாட்சி கூறினீரே ஞாபகம் இருக்கிறதா,

யோசேப்பு : ஆமா ஆமா நீங்களே அதை ஞாபகப்படுத்தி விட்டீர்கள், அதாவது, ஆண்டவர் எனது வாழ்வில் “பொறுமையாக இருக்க கற்றுக் கொண்டுத்தார்”, நான் ஒரு பூச்சி, புழு, ஒரு குப்பை, ஆண்டவரே என்னை இவ்வளவு உயரத்தில் நிறுத்தி இருக்கிறார் என்று கூறினேன். 

தேவதூதன்: சரி அன்று ஆலயம் முடிந்ததும் என்ன நடந்தது.

யோசேப்பு : ஓ அதுவா, ஒரு வாலிப தம்பி செருப்பு போடும் இடத்தில் என்னுடைய காலில் மிதித்து விட்டார், அவனை “அறிவு இருக்கிறதா, பார்த்து நடக்கக் கூடாதா” என்றேன்.

தேவதூதன்: சரி அது ஏன் அந்தநபரின் மீது அவ்வளவு கோபம், பாம்பைப் போல சீறிநீர் அல்லவா, புழு பூச்சி என்று ஆலயத்தில் சாட்சி கூறினீர். கிருஸ்தவனுக்கு பொறுமை, தாழ்மை அவசியம் என்பதும் முக்கியமாக தனிநபர் அடக்கம் இருக்கவேண்டும் என்பதும் ஆண்டவர் எதிர்பார்ப்பது என்பது உமக்குத் தெரியாதா?  அதை எல்லாம் வேதத்தில் படித்துமா இப்படி, 

 

மேலும் நீர் எத்தனை ஏழை எளியவர்கள், விதவைகள், அனாதைகள், நோய்வாய்ப்பட்டு இருப்போருக்கு உதவி செய்தீர்கள் சொல்ல முடியுமா ?...

41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42
பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; 43அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். 44 அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். 45 அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

 

யோசேப்பு : தெரியவில்லையே .........

தேவதூதன்: அதுமட்டுமல்ல, நீங்கள் 1௦ வருடங்களுக்கு முன்பதாக உங்கள் தகப்பனாரை பசுமலை இன்ப இல்லத்தில் விட்டு விட்டு வந்தீர்கள், அங்கே அவர் இரண்டு வருடங்கள்கழித்து இறந்துவிட்டார்.  அதன்பிறகு நிறைய செலவில் பெரிய கல்லறை மட்டும் அவருக்கு கட்டினீர், ஆனால் அவர் உயிரோடு இருக்கும்போது உங்களோடுகூட வாழாமல் அனாதையாக இறந்துவிட்டார் அல்லவா. 

பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்கிற இந்த விஷயத்தைக் குறித்து திருமறை இவ்வாறாகக் கூறுகிறது. ‘உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (யாத்2௦). இதுதான் நீர் பெற்றோரை கனம் பண்ணுவதா?  


யோசேப்பு :  எனது தகப்பனார் யாருக்கும் இடைஞ்சல் வேண்டாம் என்றதால் அங்கு விட்டோம்.   ஆனாலும் தவறுதான் ....

தேவதூதன்: sorry you are not allowed.  செல்லாது, செல்லாது

 

  1. நான்காம் நபர் : வணக்கம் அய்யா. எனது ஆதார் எண் சொல்லவா?....எனது பெயர் “ராபின்சன் வேதமாணிக்கம்”..

தேவதூதன்: என்ன அய்யா ஆதார் எண்ணை என்னிடம் கொடுக்கிறீர்களே. அது இங்கே செல்லுமா?

ராபின்சன்:  எனக்கு மனப்பாடமாக தெரியும், கீழே பூமியில் எங்கும் இது இல்லாவிட்டால் எந்த வேலையும் நடக்காது ஆகவேதான்.......நானும் .....

தேவதூதன்: இங்கு இது தேவை இல்லை.   சரி உங்களைப் பற்றி கூறுங்கள்.....

ராபின்சன்: அய்யா நான் ஒரு கிருஸ்தவ பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து போன வருடம் தான் ஒய்வு பெற்றவன்.  எனக்கு கடவுள் கொடுத்த ஆசிரியர் பணியில் நான் சரியாக இருந்தவன். 

எனக்கு விவரம் தெரிந்து, நான் யாருக்கும் தீங்குகோ, துரோகமோ செய்ததில்லை, என்னுடைய வேலை உண்டு நான் உண்டு என்று இருந்து விடுவேன்.  எதற்கு பிரச்சனை என்று எதிலும் தலையிடவும் மாட்டேன்.   ஆனால் ஒரு முக்கியமான காரியத்தைக் கூறவா.......நான் வருடா வருடம் எங்களது அனைத்து சபைகள் அளவில் நடைபெறும் வேதாகமத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று அநேக பரிசுகள் வாங்கி இருக்கேன் என்றால் பாருங்கள். எனது சபை குருவானவர் பரிசாக கொடுத்த வேதாகமமே சுமார் 15 எனது அலமாரியில் பத்திரமாக இருக்கும்.  என்னுடைய Face Book, insta, WA வலைத்தளப் பக்கத்தைப் பாருங்கள், வருடா வருடம் எனது புகைப்படங்கள் இருக்கும்.  எனக்கு வேத வசனங்கள் அனைத்தும் அத்துப்படி, மனப்பாடமாக சொல்லவா.....

அதுமட்டுமல்ல ஒரு பிரசங்கியார் ஒரு வசனம் வாசிக்கச் சொன்னால் உடனே எடுத்து வாசிப்பேன். இன்னும் பல.....  நாங்கள் ஒரு சிலர் குழுவாக சேர்ந்து ZOOM மூலம் தினமும் காலை 6 மணிக்கு ஜெபம் செய்வது வழக்கம், நாட்டிற்காக, எங்கள் சபைக்காக, ஜெபிப்போம், எங்கள் குருவானவருக்கும் அவரின் ஊழியத்திற்கு ஜெபிப்போம்..  அதுமட்டுமல்ல, எங்களது சபையின் எல்லா நிகழ்வுகளிலும் நாங்கள் குடும்பமாக தவறாமல் கலந்து கொள்ளுவோம். 

முக்கியமான ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள்....நான் இரண்டு வருடங்களுக்கு முன்பதாக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவன். ஆக நான் பரலோகம் செல்ல அனுமதிப்பீரா?

தேவதூதன்: நல்லது ராபின்சன் அவர்களே, நல்லாசிரியர் எல்லாம் இங்கே செல்லாது சரி மாதம் ஒருமுறை அதுவும் சனிக்கிழமை இரவு எங்கே செல்லுகிறீர்....

ராபின்சன்: அதுவா, எனது நண்பர்கள் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை இரவு ஒரு சிறு Cocktail பார்ட்டி மட்டும் நடத்துவோம்-social drink, அவ்வளவுதான், அதனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இருக்காது. நாங்கள் எங்கள் சந்தோசத்திற்கு நடத்துவோம்.  இது எனது மனைவிக்கு மட்டுமே எனது குடும்பத்தில் தெரியும், எனது பிள்ளைகளுக்கு கூடத் தெரியாது என்றால் பாருங்களேன் .....

அப்படிப்பார்த்தால் இங்கே யார்தான் நல்லவர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.... 

தேவதூதன்: ராபின்சன் அவர்களே ஒவ்வொருவரும் அவரவருக்குக் கணக்கு கொடுக்கட்டும். இங்கே உன்னுடைய தனிப்பட்ட கணக்கு மட்டுமே பார்க்கப்படும். நீர் வேதத்தை அதிகம் படித்தவர் என்று கூறுகிறீரே... மது குடிப்பது பற்றி வேதம் கூறுவது என்ன?.

சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை. நீதிமொழிகள் 31:47

ஓசியா4:11 வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.  சிந்திக்கும் திறனையும், சரியாக முடிவெடுக்கும் திறனையும் அது மழுங்கடிக்கிறது. (நீதிமொழிகள் 23:29-35)  இன்னும் அநேகம் .......

 

ராபின்சன்: sorry தேவதூதன் அவர்களே நான் என்னுடைய சுயநலமாக  என்னுடைய சந்தோசத்தை  மட்டுமே பார்த்துவிட்டேன்.  கிறிஸ்தவனாக இருந்தாலும், சந்தோஷம் என்றால் அது புசிப்பும் குடிப்புமாய் எனக்கு ஆகிவிட்டது. சந்தோஷம் என்பது களியாட்டுகளிலும், வெறிகளிலும்தான், சினிமாக்களிலும், சீரியல்களிலும், நாடகங்களிலும் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து மது(போதை), மாது, சூது என்று இருந்தது. அவைகளெல்லாம் போலியான, ஒன்றுக்கும் உதவாத நிலையற்ற சந்தோஷங்கள் என்று இங்கு வந்தபிறகுதான் சரியாக புரிகிறது.

தேவதூதன்:  தங்களைப் போலத்தான் அனேக கிருஸ்தவர்கள் தங்கள் வாழ்வை வீணாக ஆக்கிக்கொண்டிருகிரார்கள்.  வேதத்தை நன்கு படித்த நீங்களே இப்படி வாழ்த்து இருந்தீர்கள் என்றால் மற்றவர்களை என்ன சொல்லுவது. இப்பொழுது நீங்கள் இங்கே வந்துவிட்டீர்கள் உங்களது மகன் என்ன செய்கிறான் என்று தெரியுமா,  அவன் போதைக்கு அடிமையாகி பல மாதங்கள் ஆகிவிட்டது விட்டான். 

ராபின்சன் : என்ன என்னுடைய மகன் போதைக்கு அடிமையா.  ஐயோ ....நான் பார்ட்டி செல்லுவது எனது மனைவிக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்தேனே ......

தேவதூதன்:  நீங்கள் செய்த தவறு உங்கள் குடும்பத்தை பாதித்துவிட்டது அல்லவா.  பெற்றோர் தான் நமது பிள்ளைகளுக்கு ஒரு role model – முன்தாரணம், அவர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.  நீங்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம் பிள்ளைகள் என்னைப் பார்க்கவில்லை என்று.  ஒரு தாய் மற்றும் தகப்பன் செய்யும் தவறு அவரது குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிடும். 

சரி முக்கியமான ஒன்றை நான் இங்கே ஜீவபுஸ்தகத்தில் காண்கிறேன், நீங்கள் சனிக்கிழமை இரவு மது அருந்துவதோடு, புகைபிடிக்கவும் செய்வீர்கள் அல்லவா, ஆனால் அடுத்தநாள் எப்படி நிர்விசாரமாக ஆலயத்தில் வேதபாடம் முன்னே சென்று வாசிக்கிறீர்கள்.

ராபின்சன்: ஆமாம், நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை,...யாராவது இங்கிருந்து என் பிள்ளைகளுக்கு நான் செய்த தவறை அவர்களும் செய்யாமல் தடுக்கமுடியுமா...

தேவதூதன்: இங்கே உலக வாழ்வு முடிந்து வந்தவர்கள் திரும்ப பூமிக்கு செல்ல முடியாது என்று வேதத்தில் நீர் படித்ததில்லையா. அங்கே இருக்கும் குருவானவர்கள், ஊழியர்கள் சொல்லுவதைக் கேட்டு மனம்திரும்பலாம், அல்லது வேதத்தை கருத்துடன் படித்து அதன்படி வாழ்ந்தால் கண்டிப்பாக அவர்கள் பரலோக ராஜ்ஜியம் வரலாம்.. அன்பு சகோதரரே,  உம்முடைய வாழ்வு, உம்முடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் சமுதாயத்திற்கும் சாட்சியாக இருக்க வில்லையே. ... உம்மை பரதீசு செல்ல அனுமதிக்க முடியாது .... செல்லாது செல்லாது ..

  1. ஐந்தாம் நபர் :  ஐயா ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக.  நான் இந்த ஆலயத்தில் ஒரு மூலையில்தான் எப்பொழுதும் அமர்ந்திருப்பேன். எனது பெயர் “டேனியல் சுப்பிரமணி”,  ஆராதனையின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஆண்டவர் ஆரம்பம் முதல் முடிவு வரை என்னுடன் வசனங்கள் மூலம், பிரசங்கம் மூலம், பாடல்கள் மூலம் பேசுவது வழக்கம், அதை நான் எனது வாரத்தின் மற்ற நாட்களிலும் செயல் படுத்தி தினசரி காலையில் தனி மற்றும் குடும்ப ஜெபம், வேத வாசிப்பு, வேத தியானம், இரவில் அனைவரும் குடும்பமாக பாட்டுப்பாடி ஆண்டவரைத் துதித்து, ஸ்தோத்தரித்து வேதம் வாசித்து அதை தியானித்து, ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஜெபித்து விட்டுத்தான் தூங்குவோம்.  நான் வேலை செய்யும் இடத்திலும் நான் ஒரு முன் உதாரண கிருஸ்தவ நபராக இருந்திருக்கிறேன். நான் புறமதத்தில் இருந்து ஒரு மனமாற்றம் அடைந்த கிறிஸ்தவர் அய்யா.  நான் பரலோகத்தில் நுழைய ஆண்டவராகிய இயேசுவின் கிருபை இருந்தால் மட்டும் போதும்......

தேவதூதன் : இந்த உலக வாழ்வில் நீர் லஞ்சம் வாங்குவதோ, ஆலயத்தில் சரவெடி போடவோ, தாரை தப்பட்டைகள் அடிப்பதையோ, யாரையும் வீண் புகழ்ச்சி செய்யவோ, கெட்ட வார்த்தை பேசவோ, கெட்ட பழக்கங்களோ கிடையாது, யாருடனும் சண்டை போடவே மாட்டீர்கள். முக்கியமாக ஜாதி பார்த்து மக்களிடம்  பழகமாட்டீர்கள். சக மனிதர்கள் உங்களை ஒரு தேவ மனிதராகவே பார்க்கின்றனர்.  மொத்தத்தில் ஒவ்வொருநாளும் இயேசு சுவாமி வேதத்தில் சொன்னபடி வாழப் பழகிக் கொண்டிருக்கிறீர்கள். 

ஆம்அய்யா, “டேனியல் சுப்பிரமணி” அவர்களே, பரலோகத்திற்கு போக ஒரே வழி இயேசு மட்டுமே என்பதை சரியாக புரிந்து கொண்டீர்கள்.  யோவான் 14:6ல் இயேசுவே இதை கூறுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”.  ஒருவேளை நல்லபெயர், சாதனை, சிறந்த அறிவு மற்றும் தனிப்பட்ட பரிசுத்ததன்மை ஆகியவற்றால் எந்த ஒரு நபரும் தேவனிடத்திற்கு வர முடியாது, இயேசு ஒருவர் மட்டும்தான் வழி. ஆம் இயேசுவைத் தவிர வேறு எந்த வழியாகவும் எவரும் பிதாவினிடம் வர இயலாது.   பரலோகத்தில் நித்திய காலமாக வாழ்கிற நித்திய ஜீவன் அருளப்படுவது கிறிஸ்து மூலமாக மட்டுமே ஆகும். இயேசு இப்படியாக ஜெபம் செய்தார்: "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3). 

நான் பார்த்த இன்னொரு முக்கிய நிகழ்வு, உங்கள் வலது கை செய்யும் உதவியை உங்கள் இடது கைக்குத் தெரியாமல் அநேகருக்கு நீங்கள் உதவி செய்துள்ளீர்கள்.   உங்கள் வாழ்வின் மூலம் அநேக புறஜாதியார், பெயர் கிறிஸ்தவர் தங்கள் பாவங்களில் இருந்து மனம்திருந்தி ஆண்டவரை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டது எமக்குத் தெரியும்.  முக்கியமாக உங்கள் நேர்மையின் நிமித்தம் கிறிஸ்துவுக்காக அநேக பாடுகளையும் அனுபவித்துள்ளீர்கள்.

சரி நீங்கள் எப்படி கிறிஸ்துவுக்குள் சரியாக இருக்கிறீர்கள், என்று நான் தெரிந்து கொள்ளவேண்டுமே...

டேனியல் சுப்பிரமணி: அய்யா, நான் ஆண்டவரை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாளில் நமது CSI பசுமலை தேவாலயத்திற்கு ஒரு ஞாயிறு ஆராதனைக்கு வந்தேன். அன்று ஆலயத்தில் போதகர் அவர்கள் இன்று மாலை 5 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்கம் நடைபெறும் என்றார்கள்.  இப்பொழுது நான் ஒரு கிருஸ்தவ ஆண் என்பதால் அந்தக் ஐக்கியக் கூடுகைக்கு சும்மா சென்று பார்ப்போம் என்று தான் முதலில் சென்றேன்.   ஆனால் அங்கு தான் நான் ஆண்டவரை உண்மையாக முழுவதுமாக புரிந்து கொண்டேன். அங்கு இருக்கும் ஆண்கள் என்னிடம்  ஏழை, பணக்காரன், ஜாதி, மதப் பாகுபாடு எதுவும் காட்டாமல் அருமையாக என்னிடம் பழகினார்கள்.  முக்கியமாக ஜெபிக்கக் கற்றுக் கொண்டேன்.  வேதத்திலுள்ள அதிசயங்களை புரிந்து கொண்டேன்.   நான் ஒருமுறை முகுந்த சுகவீனம் ஆனபோது, அவர்கள் அனைவரும் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சுகவீனம் அடைந்தது போல வந்து ஜெபித்து, உதவி செய்தது என்னை மிகவும் ஆறுதல் படுத்தியது.  உண்மையாகவே அங்குள்ளவர்கள் என்னை நடத்திய விதம் என்னை ஒரு கிருஸ்தவ ஐக்கியம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள உதவியது.  

நான் ஒரு முக்கியமான காரியத்தை கூறுகிறேன், இன்றைய கிறிஸ்தவத்தில் ஆண்டவரை தங்கள் சொந்த இரட்சகராக முதலாவதாக இரட்சிப்பின் அனுபவத்துக்குள் வரும் புறமத நபர்களை சரியாக followup பண்ணி அவர்கள் கிறிஸ்துவில் வளருவதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை.  ஆனால் இங்கே நமது பசுமலை CSI ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கம் அதை செய்தது எனக்கு ஒரு ஊன்றுகோல் போல இருந்தது.

நான் நமது கிருஸ்தவ ஆண்களுக்கு சொல்லுவது என்னவென்றால், ஒரு முறை அந்த ஐக்கியத்துக்கு சென்று பாருங்கள். நானும் எத்தனையோ ஆண் சகோதரர்களுக்கு வாருங்கள் வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இருக்கிறேன்.  அய்யா தேவதூதன் அவர்களே நீங்களாவது அவர்களிடம் கூறி ஆண்கள் பசுமலை CSI ஆலய ஆண்கள் ஐக்கிய சங்க கூடுகைக்கு செல்லுமாறு அறிவுறுத்துங்கள்.  அப்படியாவது அவர்கள் ஆத்துமா காப்பாற்றப்பட்டு இங்கே நித்தியத்திற்கு வர முடியும்.  

Atleast குற்றம் கண்டுபிடிக்கவாவது செல்லுங்கள், அங்கு ஆண்டவர் உங்களைச் தொடுவார்.

தேவதூதன் : அன்பு சகோதரன் “டேனியல் சுப்பிரமணி” அவர்களே வாருங்கள் உத்தமமும் உண்மையும் உள்ள ஊழியக்காரனே கடவுளுடைய பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசியுங்கள்  என்றார்..