உலர்ந்த எலும்புகள் உயிரடைதல்
தலைப்பு: எசேக்கியேல் புத்தகத்தின் ஆசிரியர் பெயரே (1:3; 24:24) இப்புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ளது. இப்பெயர் பரிசுத்த வேதாகமத்தில் வேறு எந்தப் பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை. “எசேக்கியேல்” என்னும் பெயருக்கு “தேவனால் பெலப்படுத்தப்பட்டவர்” என்று அர்த்தம்.
ஆசிரியர் மற்றும் காலம்: வசனம் 1:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள ”முப்பதாம் வருஷம்” என்பது எசேக்கியேலின் வயதைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், அவர் சிறைப்பட்டுப் போனபோது அவருக்கு வயது 25 ஆகவும், ஊழியத்திற்கு அழைப்பைப் பெற்றபோது வயது 30 ஆகவும் இருந்திருக்க வேண்டும். ஆசாரியர்கள் தங்கள் ஊழியப் பொறுப்பை முப்பதாவது வயதில் ஆரம்பிப்பார்கள் என்பதால் (எண் 4:3), எசேக்கியேலின் வாழ்க்கையில் இது ஒரு குறிப்பிடத்தக்க வயதாகும். இவரது ஊழியம் கி.மு. 593/92-ல் ஆரம்பித்து, ஏறக்குறைய 22 வருடங்கள், அதாவது கி.மு. 571/70 வரை (25:17) நீடித்தது.
எரேமியா (எசேக்கியேலை விட ஏறக்குறைய 20 வயது மூத்தவர்) மற்றும் தானியேல் (எசேக்கியேலின் சமவயதுடையவர்) ஆகிய இருவரும் எசேக்கியேலின் சமகாலத் தீர்க்கதரிசிகள் ஆவர். எசேக்கியேல் இவர்களை ஏற்கனவே நன்கு அறியப்பட்ட தீர்க்கதரிசிகளாகக் குறிப்பிடுகிறார் (14:14,20; 28:3). எரேமியா (எரே. 1:1) மற்றும் சகரியாவைப் போன்று, எசேக்கியேலும் ஆசாரியராகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தவர் (சகரியா 1:1; நெகேமியா 12:16 உடன் ஒப்பிடுக). இவரது ஆசாரியத்துவப் பின்னணியினால், தேவாலயம் சார்ந்த காரியங்களில் அதிக நாட்டமும், பரிச்சயமும் உடையவராக இருந்தார். இதனால், தேவாலயம் குறித்து எசேக்கியேல் விரிவாக எழுதும்படி தேவன் அவரைப் பயன்படுத்தினார் (8:1-11:25; 40:1-47:12).
வாழ்க்கை சூழல்: எசேக்கியேலும் அவரது மனைவியும் (24:15-27) கி.மு. 597-ல் பாபிலோனியரால் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்ட 10,000 யூதர்களில் ஒருவராக இருந்தனர். பாபிலோனுக்குத் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருந்த கேபார் நதியண்டையிலுள்ள தெலாபீபில் (Tel-abib) இவர்கள் வாழ்ந்தனர். நாடுகடத்தப்பட்டிருந்த வேளையில், எசேக்கியேலின் மனைவி இறந்துபோனாள் என்று எசேக்கியேல் 24:18-ல் வாசிக்கிறோம். ஆனால், எசேக்கியேலின் மரணத்தைக்குறித்து வேதாகமத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. இருப்பினும், யூத ரபீக்களின் பாரம்பரியம் (Rabbinical Tradition), கி.மு. 560-ல் இஸ்ரவேல் இளவரசன் ஒருவனின் விக்கிரகாராதனையை எசேக்கியேல் எதிர்த்தபோது, அவன் கைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.
இறையியல் (ஆன்மீக போதனை) மற்றும் வரலாற்றுப் போதனைகள்: ”இதுவே கர்த்தருடைய மகிமை” என்பதே எசேக்கியேல் புத்தகத்தின் மையக் கருத்தாகும் (1:28; 3:12,23; 10:4,18; 11:23; 43:4,5; 44:4). தேவனது அன்பின் வெளிப்பாட்டின் மத்தியிலும் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் கீழ்ப்படியாமையைச் சித்தரித்துக் காட்டுவது இப்புத்தகத்தின் முக்கிய உள்ளடக்கமாகும் (அதிகாரங்கள் 16 மற்றும் 23). கர்த்தர் வெறுக்கும் அருவருப்புக்கள் மற்றும் இஸ்ரவேலரின் விக்கிரகாராதனை மேலும் அதினால் விளைந்த விளைவுகள் குறித்து வேதாகமத்தில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.
இப்புத்தகத்தில் ஆவிக்குரிய சத்தியங்கள் பல அழகிய காட்சிகள் மூலம் சித்தரிக்கப்படுகின்றன:
1.எசேக்கியேல் புஸ்தகச் சுருளை உண்ணுதல் (அதிகாரம் 2).
2.நான்கு ஜீவன்களின் முகங்கள் (1:10).
3.தலைமயிரைக் கத்தரிக்கும் அடையாளம் (5:1-4).
4.சுவரில் தீட்டப்பட்டிருந்த ஊரும் பிராணிகளின் உருவங்கள் (8:10).
5.கெரூபீன்கள் நடுவில் இருக்கும் அக்கினித்தழல் தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சித்தரிக்கிறது (10:2,7).
இறையியல் கருப்பொருள்களில் மிக முக்கியமானது தேவனுடைய பரிசுத்தமும் இறையாண்மையுமே ஆகும். யூதாவின் பாவங்களின் பின்னணியில் (1:26-28), தேவனுடைய பிரகாசமான மகிமையைச் சித்தரித்து, அவரது பரிசுத்தத்தின் மேன்மை வெளிப்படுத்தப்படுகிறது (அதிகாரங்கள் 8-11 மற்றும் 43:1-7). ”நானே கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள்” என்ற சொற்றொடர் இப்புத்தகத்தில் 60 தடவைக்கும் மேலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுவாக நியாயத்தீர்ப்புடன் சேர்த்துச் சொல்லப்பட்டாலும் (6:7; 7:4), சில இடங்களில் மீட்பின் வாக்குத்தத்தத்துடனும் வருகிறது (34:27; 36:11,38). ஒவ்வொரு தனிநபரும் நீதியைப் பின்பற்றி நடக்க வேண்டும், தவறினால் ஒவ்வொருவரும் தங்கள் பாவத்திற்காகத் தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான கருப்பொருளாகும் (18:3-32).
புத்தகத்தின் சுருக்கம் (Outline): இப்புத்தகத்தை "கண்டனம்/நியாயத்தீர்ப்பு" மற்றும் "ஆறுதல்/மீட்டளித்தல்" என இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். விரிவாகப் பார்த்தால், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
I. எருசலேமின் அழிவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் (1:1 - 24:27)
அ. எசேக்கியேலின் அழைப்பும் ஊழியப் பொறுப்பும் (1:1 - 3:27)
ஆ. எருசலேமின் மீதான தண்டனைத் தீர்ப்பு (4:1 - 24:27)
1.நியாயத்தீர்ப்பின் அடையாளங்கள் (4:1 – 5:4)
2.நியாயத்தீர்ப்பு குறித்த செய்திகள் (5:5 - 7:27)
3.தேவாலயத்தில் காணப்படும் அருவருப்புகள் மற்றும் மகிமை விலகுதல் (8:1 - 11:25)
4.நியாயத்தீர்ப்பு குறித்த விளக்கங்கள் (12:1 - 24:27)
II. அந்நிய தேசங்களுக்கு விரோதமான நியாயத்தீர்ப்புகள் (25:1 - 32:32)
- அம்மோன், மோவாப், ஏதோம், பெலிஸ்தியா, தீரு, சீதோன் மற்றும் எகிப்து தேசங்கள்.
III. இஸ்ரவேலின் மனந்திரும்புதலுக்கான அழைப்பு (33:1-33)
1.காவற்காரனின் கடமை மற்றும் இஸ்ரவேலின் நிலை.
2.ஜனங்களை அழிக்க தேவன் விரும்புகிறதில்லை
3.தேவன் இஸ்ரவேலின் காவல்காரனாக எசேக்கியேலைத் தெரிந்தெடுக்கிறார்
IV. இஸ்ரவேலின் எதிர்கால மீட்பு மற்றும் மகிமை (34:1 – 48:35)
அ. இஸ்ரவேல் தேசம் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்படுதல் (34:1 – 37:28)
1. மெய்யான மேய்ப்பன் (கிறிஸ்து) வாக்குத்தத்தம் பண்ணப்படுதல் (34:1-31)
2. உலர்ந்த எலும்புகள் உயிரடைதல் (37:1-28)
ஆ. கோகு மாகோகு யுத்தம் - எதிரிகள் அழிக்கப்படுதல் (38:1 – 39:29)
இ. புதிய தேவாலயம் மற்றும் புதிய ஆராதனை முறைமை (40:1 - 46:24)
ஈ. தேசம் பங்கிடப்படுதல் மற்றும் "யெகோவா ஷம்மா" (கர்த்தர் அங்கே இருக்கிறார்) (47:1 – 48:35)
வாசிப்போம்: எசேக்கியேல் 37- 11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “மனுபுத்திரனே, இவ்வெலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இஸ்ரவேல் ஜனங்கள் சொல்கிறார்கள்: ‘எங்கள் எலும்புகள் காய்ந்துவிட்டன. எங்கள் நம்பிக்கை போய்விட்டது. நாங்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறோம்!’ 12 எனவே, எனக்காக அவர்களிடம் பேசு, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று சொல்: ‘13 என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டு வருவேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 14 நான் உங்களில் எனது ஆவியை வைப்பேன். நீங்கள் மீண்டும் உயிர் பெறுவீர்கள். பின்னர் நான் உங்களை உங்களது சொந்த நாட்டிற்கு வழிநடத்திச்செல்வேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நான் இவற்றைச் சொன்னேன் என்பதையும் இவை நடக்கும்படிச் செய்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.’” கர்த்தர் அவற்றைச் சொன்னார்.
தேவன் தம்முடைய சொந்த ஜனங்களான, நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலரிடம் சொல்ல விரும்பிய செய்தியை அறிவிக்கவும், அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துக் காட்டவும் எசேக்கியேல் மூலம் தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள், உவமைகள், உருவகங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தினார்.
ஆம் பிரியமானவர்களே ஆண்டவர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மைப் பார்த்து என் ஜனங்களே என்று அன்போடு அழைக்கிறார். ஒருவேளை நம்முடைய வாழ்வு இஸ்ரவேல் ஜனங்களைப் போன்று உலர்ந்த எலும்புகளாக, நாற்றமெடுத்த நிலைமையில், மரணம் மட்டுமே அடுத்து என்ற சூழலில், பக்தன் யோபுவைப்போல பரிதாபமான வாழ்க்கை, யாருமே நமக்கு இல்லையே, எல்லோரும் நம்மை விட்டு தூரம் போய்விட்டார்களே, இனி நான் பிழைப்பதற்கு வேறு வழியே இல்லை, மேலும் தனிமை, சோகம், வெறுமை, உதவிக்கு என்று யாரையும் கூப்பிட முடியாத சூழல், கடன் நெருக்கடி, பலவித இன்னல்கள், தொல்லைகள், தோல்வி, வியாதி, இனி தற்கொலை தான் ஒரே தீர்வு என்று வாழ்வில் விரக்தியின் விளிம்பில் இருப்போம் என்றால், ஆண்டவர் என் ஜனங்களே என்று அன்போடு அழைக்கிறார். உலர்ந்த உன் வாழ்வு உயிரடையும், திரும்ப உன்னை நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து (நாற்றத்திலிருந்து) உங்களை வெளியே கொண்டு வருவேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் இவற்றைச் சொன்னேன் என்பதையும் இவை நடக்கும்படிச் செய்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.’” கர்த்தர் அவற்றைச் சொன்னார்,ஆமென். அந்த கல்லறை சூழலில் இருந்து உயிர் பெற்று மீண்டும் ஒரு புது பொலிவுடன் வாழ்க்கையை தொடர ஆண்டவர் விரும்புகின்றார். ஆனால் என் ஜனங்கள் தங்கள் பாவங்களை விட்டு மனம்திரும்ப மட்டும் வேண்டும். ஆமென்
கல்லறை அனுபவம் என்பது என்ன? சீன தேசத்தில் ஒரு சவப்பெட்டி செய்யும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு இறந்தவர் போன்ற மனநிலையில், அவரின் மனதில் என்ன மாற்றம் ஏற்படும், எப்படி சில மணித்துளிகள் சவப்பெட்டிக்குள் இருப்பார் என்பதை தத்ரூபமாக எடுத்துக்கூறும் ஒரு நிகழ்வை இலவசமாக நடத்துகிறது. அதில் சுவாசிக்க காற்று தவிர வேறு எதுவும் இருக்காது, ஒரு இருட்டான சூழலில் யாரும் இல்லை, எதுவும் சத்தம் கேட்காத, ஒரு நிசப்த்தம், அதில் சுமார் 2 to 4 மணி நேரம் இருந்தால் ஏற்படும் சில மாற்றங்கள் எதுவென்றால், ஒரு மனிதன் தனது சக மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்றுக் கொள்வார்களாம். தற்பெருமை நீங்கி தாழ்மையான மனமாற்றம் ஏற்படுமாம். அதுமட்டுமல்ல, விவாகரத்து செய்யும் மனதையுடையவர் கூட மன்னித்து வாழ முற்படுவார்களாம்.
சரி, இந்த உலர்ந்த எலும்புகள் உயிரடைய வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்:- ஆண்டவரின் சொல்லைக் கேளாமல் இஸ்ரவேல் ஜனங்கள் பாவ காரியங்களை செய்ததுபோல நாமும் செய்யக்கூடாது, அப்படியே செய்திருந்தால் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ஆமென். வாசிப்போம்: : எசேக்கியேல் 33-11 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு. சரி, இஸ்ரவேல் ஜனங்கள் செய்த பாவ காரியங்களில் சிலவற்றை நாம் இப்பொழுது காணலாம்:
முதலாவது ...I - 33- 29 இஸ்ரவேல் ஜனங்கள் பல அருவருப்பானக் காரியங்களைச் செய்திருக்கின்றனர்:-
ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: 1)மேட்டிமையான கண், 2)பொய்நாவு, 3)குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, 4)துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், 5)தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், 6)அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, 7)சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
These six things doth the LORD hate: yea, seven are an abomination unto him: 1)A proud look, 2)a lying tongue, and 3)hands that shed innocent blood, 4)a heart that deviseth wicked imaginations, 5)feet that be swift in running to mischief, 6)A false witness that speaketh lies, and 7)he that soweth discord among brethren. Proverbsவாசிப்போம்: நீதி 6: 16 – 19
கர்த்தர் வெறுக்கும் இந்த அருவருப்புகளை அநேக ஆலயங்களில் உபதேசிப்பது கிடையாது. விசுவாசிகளுக்கும், அவிசுவாசிகளுக்கும் வித்தியாசம் இதில்தான் வெளிப்படும். விசுவாசிகள் கவனமாக இருக்கவேண்டும். வேதாமதில் ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் வார்த்தைகளை போதிக்காமல் கிறிஸ்தவம் என்பது Prosperity(செழிப்பு), FREE WORSHIP, ஆட்டம், பாட்டம் மட்டுமே என்கிற தவறான போதனைகள்/ உபதேசம் இன்று போதிக்கப்படுகிறது. அதுதான் வசனம் கிடைக்காத ஒரு பஞ்சம் இன்று ஆரம்பித்து விட்டது. WORKSHIP IS NOT SUPPOSED TO BE ENTERTAINMENT ….BILLY GRAHAM.
ஆண்டவரிடம் கிட்டிச் சேர சேர, சோதனை வரும், துன்பம் வரும், தொல்லைகள் வரும், வியாதி வரும், கடன் வரும், சொந்த பந்தம் நண்பர்கள் ஓடிவிடுவார்கள். ஆனாலும் சோதனைகளை சகிப்பவனே பாக்கியவான். கர்த்தரின் கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாய் இருக்கிறது. சங்கீதம் 55:22 கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். (1பேதுரு 5:7)- ‘அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.’ வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.ஆமென்.
ஒருவேளை நீங்கள் கடினமான பாதை வழியே சென்றுகொண்டிருக்கலாம். உங்களை தேவன் விசாரிக்கிறாரா என்று வினவுகிறீர்களா? நிச்சயமாக அவர் உங்கள்மேல் கரிசனையுள்ளவராக இருக்கிறார். கலங்காதீர்கள். எதிர்காலத்தில் தேவன் உங்களை சமாதானத்தின் ஏலிமுக்கு அழைத்து வருவார். “உங்களுடைய திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல்…” (1கொரி.10:13) என்ற வேதவசனம் நமக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது. பாடுகளினால் சோர்ந்து களைத்து வருத்தப்பட்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவன் இளைப்பாறுலைத் தருவார். ஆமென்
வாசிப்போம்: எசேக்கியேல் 33:25 “கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும்: ‘நீ இன்னும் இரத்தம் நீக்கப்படாத இறைச்சியைத்தின்கிறாய். உதவிக்காக நீ விக்கிரகங்களை நோக்கிப் பார்க்கிறாய். நீ ஜனங்களைக் கொன்றாய். எனவே, நான் உனக்கு இந்நாட்டை ஏன் கொடுக்கவேண்டும்? 26 நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
இரத்தம் நீக்கப்படாத இறைச்சி என்றால் மனிதன் இந்த உலகில் நல்லதையும் கெட்டதையும் கேட்கிறான், பார்க்கிறான், நடக்கிறான், சில வேளையில் அதை சாப்பிடுகிறான். ஒருவர் கையில் ஒரு மொபைல் இருக்கிறது என்றால் அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது, ஆனால் நாம் இதில் எதில் நமது மனம் நிற்கிறது என்கிறதை பொறுத்தது. நாம் இந்த மாறுபாடான, பாவம் நிறைந்த உலகில்தான் இருக்கிறோம் , அதிலிருந்து நம்மை பரிசுத்தமாக வாழ்வு வாழும்படியாகத்தான் ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவர் விரும்புவது இரத்தம் நீக்கிய இறைச்சி. பாவம் நீங்கிய வாழ்வு.
மனிதன் தான் படைத்த விக்ரகங்களை நோக்கி பார்க்கிறான். அதாவது மனிதனால் படைக்கப்பட்ட பொருள்களின் மீது ஆசை கொள்ளுவது இதன் அர்த்தம். அதை ஆண்டவருக்கு மேலாக அல்லது ஆண்டவராக வணங்குவதும் தவறு. எனக்கு அந்த நடிகரை எனது கணவரை விட, எனது பிள்ளைகளை விட, பெற்றோரை விட பிடிக்கும் என்றோ, அந்த கிரிக்கெட் வீரரைப் பிடிக்கும், அந்த நடிகையைப் பிடிக்கும், இந்த அரசியல்வாதியைப் பிடிக்கும் என்று சக மனிதர்களை சக மனிதனாக பார்ப்பதை விட்டு விட்டு அந்த மனிதனைப் படைத்த ஆண்டவரை விட அதிகமாக நேசிப்பது விக்ரகஆராதனை.
நாம் ஆண்டவரை முழு மனதோடு நேசிக்கிறோமா? அவரைக் கனப்படுத்துகிறோமா? ஒவ்வொரு நாளும் அவருடன் தனித்திருக்கிறோமா? அவருடைய வார்த்தைகளைத் தியானிக்கிறோமா? நாம் யாருக்கு அல்லது எதற்கு அதிக கனத்தைக் கொடுக்கிறோம்? ஆராய்ந்து பார்த்து நமக்கும் தேவனுக்கும் இடையில் இருக்கும் அந்த விக்கிரகத்தை இன்றே அகற்றிவிடுவோம். இரவில் அதிக நேரம் தேவையற்ற காரியங்களில் நேரத்தைச் செலவிட்டுக் கண்விழித்திருந்தால், மறுநாள் காலையில் நேரத்தோடு எழுந்து ஆண்டவரைத் தேடமுடியாது. எனவே இரவு நாம் எதற்காக தேவையற்றுக் கண் விழித்திருக்கிறோமோ அதுவே நம்மைத் தேவனை விட்டு விலக்கும் விக்கிரகமாகிறது. வாசிப்போம்: பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் (1கொரி.10:14). கொலோசெயர் 3:5 ...விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
மேலும் வசனம் சொல்லுகிறது , “அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்”. பாலியல் குற்றம் செய்கிறீர்கள் - இச்சையின் ஆவி உங்களுக்குள் இருக்கிறது என்று அர்த்தம்
பவுல் அறிவுரை கூறுகிறார், 1 கொரிந்தியர் 6 - 9 9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
மூன்றாவது ..... III - பெருமை : வாசிப்போம்: 33- 28 நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க் கிடக்கும். 26 நீ உன் சொந்த வாளை நம்பியிருக்கிறாய். …… பெருமை
வாசிப்போம்: எரேமியா 9:23-24 23 கர்த்தர், “ஞானம் உள்ளவர்கள் தமது ஞானத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம். பலம் உள்ளவர்கள் தமது பலத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம். செல்வம் உடையவர்கள் தமது செல்வத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம். 24 ஆனால் எவராவது பெருமைபேச விரும்பினால், அவன் இதைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளட்டும். என்னைப்பற்றி அவன் அறிந்துக்கொண்டதைக் குறித்து பெருமைப்படட்டும். நானே கர்த்தர் என்றும், நான் தயவும் நியாயமும் கொண்டவர் என்றும், நான் பூமியில் நன்மையைச் செய்கிறவர் என்றும் புரிந்துகொண்டவன் பெருமைப்படட்டும். நான் அவற்றை நேசிக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அரசனாக ஆக்கப்பட முன்பாக சவுல் தாழ்மையானவனாக இருந்தான். கழுதைகளைத் தேடியலைந்து அவற்றைக் கண்டுபிடிக்க உதவும்படி சாமுவேலிடம் சவுல் சென்றபோது, சாமுவேல் அவன்மீது தைலம் பூசி அபிஷேகித்து, மீளவும் சந்திக்கும்படி ஒரு வாரத்துக்குள் அவனது ஊருக்கு வருவதாகக் கூறியிருந்தார் (1சாமு.10:1.8). அவற்றைப்பற்றி சவுல் தன் சிறிய தகப்பனிடம் கூறவேயில்லை. ஒருவாரம் கழித்து சாமுவேல் மக்களை ஒன்றுதிரட்டி கோத்திரங்கள் மீதும் குடும்பங்கள்மீதும் சீட்டுப்போட்டு, அதன்படி உறுதியாகத் தெரிவு செய்யப்பட்ட சவுலைத் தேடியபோது அவனோ அங்கில்லை; தளவாடங்களிடையே ஒளிந்துகொண்டிருந்தான். அவனைக் கொண்டுவந்து மக்களிடையே நிறுத்தி தேவன் தெரிந்தெடுத்த ராஜா என சாமுவேல் அறிமுகம் செய்துவைத்தார். அவன் அழகுள்ளவனும் எல்லாரையும்விட உயரமுள்ளவனுமாக இருந்தான். இருந்தும் பேலியாளின் மக்கள் “இவனா நம்மை இரட்சிக்கப் போகிறவன்” என்று சவுலின் காதுபடக் கூறி அவனை அசட்டைப் பண்ணினர். சவுல் அதைக் கேட்டும் கேளாதவன்போல இருந்தான். இப்படியான தாழ்மையை அணிந்திருந்த அதே சவுல்தான், பின்பு “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என மக்கள் பாடிய பாடலால் விசனப்பட்டு, தாவீதைக் கொன்றுவிட நினைக்கும் அளவுக்குத் தனது பெருமைத் தீயிலே வெந்தான்.
பெருமை அற்றவர்களாய் தோன்றுகிறவர்களும், தம்மைப் பெருமை அற்றவர்களாகக் கருதுகிறவர்களும் பெருமைக்குள்ளாக நேரிடலாம். எவரும் விதிவிலக்கல்ல. நமது இனம், மொழி, மதம், நிறம், குலம், கோத்திரம், கல்வி, அந்தஸ்து, கட்சி இப்படியாக எத்தனையோ பெருமைகள் நம்மை அறியாமலே நம்மைப் பற்றிக்கொண்டிருக்கலாம். அந்தப் பெருமைகள் நமக்குள் தலைதூக்கும்போது அவற்றை நாம் அகற்றிவிட முன்வருவோமா? நம்மைப் பற்றிப்பிடித்துள்ள பெருமைகொள்ளாப் பெருமைகள் எவை? கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் (யாக்கோபு 4:10).
சரி ...ஆண்டவர் விரும்புவது என்ன? - பரிசுத்த வாழ்வு - Sis. Saraal Navaroji – Testimony @ AVM Studio with MSV
வாசிப்போம்: 36 - 23 புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். பரிசுத்தமாக்குதலின் முதல் படி சோதனை. நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே (1பேதுரு 1:16).
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டபின்னர், அவர்கள் வாழவேண்டிய முறைமைகளை மோசேயினூடாக தேவன் வெளிப்படுத்தினார். அப்போது, பரிசுத்தத்தைக் குறித்து தேவன் பலதடவைகள் வலியுறுத்தியதை மோசேயின் ஆகமங்களில் வாசிக்கிறோம்.
“பரிசுத்தம்” என்பது என்ன? நாம் நினைக்கிறபடி தூய்மையாக வாழுவது என்பது அல்ல, பரிசுத்தம். அது நம்மால் முடியுமா? மேலும், பரிசுத்தம் என்ற சொல் தேவனோடு சம்மந்தப்பட்டது. அப்படியானால், தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? ஆம், பரிசுத்தம் என்பதன் அர்த்தம், வேறுபிரிக்கப்பட்ட, தனித்துவமான வாழ்வாகும். தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட நாம் உலகத்தோடு ஒத்து ஓடமுடியாது. தேவனுடைய வார்த்தைக்கேற்ப நாம் வித்தியாசமானவர்களாக, தேவனையே பிரதிபலிக்கிறவர்களாக வாழவேண்டும். அதற்காகவே தேவன் இஸ்ரவேலைப் பிரித்தெடுத்தார்; இன்று நம்மை அழைத்திருக்கிறார். இதைத்தான், 1 தெசலோனிக்கேயர் 4 - 3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, 4 தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், 5 உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 6 இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார். 7 தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 8 ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
இப்படியிருக்க, பரிசுத்தத்தை அசட்டை செய்வது எப்படி? எப்போதும், எல்லாவற்றிலும் “பரிசுத்தராயிருக்க” நாடுவோமாக. தேவன் வெறுக்கின்ற அனைத்தையும் நாம் விட்டுவிடவேண்டும் என்ற வாஞ்சையோடு தேவசமுகத்தை நாடுவோமானால், தவறான சிந்தை, இருதயத்தின் திருக்கான நினைவுகள், தீய வார்த்தை, தூய்மையற்ற நடத்தை, யாவையும் தேவ ஆவியானவர் நமக்கு உணர்த்துவார். அவற்றை விட்டுவிடத் தீர்மானிக்கும்போது தேவாவியானவர் நமக்கு உதவி செய்வார். பரிசுத்தராகிய அவரே நம்மை பரிசுத்தத்தில் வழிநடத்த முடியும்.
எசேக்கியேல் – அதிகாரம் 33 - 33 இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார். எது வருகிறது……….. அதிசயம் அற்புதம் பரிசு வருகிறது பரிசுத்தவான்களுக்கு ….. பட்டயம் வருகிறது அநீதியானவர்களுக்கு ……
மீகா 7:15 - 15நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்….. யோபு 37 - 5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.
33-11 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்…… இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
எச்சரிப்பின் சத்தம் கேட்டு மனந்திரும்புகிறவர்களுக்கு ஆண்டவரின் பரிசு, நியாத்தீர்ப்பு அல்லது அதிசயம் கிடைக்கும். அதை நாம் வசனம் 5இல் பார்க்கலாம், "எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்". இதை நாம் அதிகாரம் 39திலும் பார்க்கலாம். 6.....நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்; அப்பொழுது நான் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள்.
39-7 இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள். 8 இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்னநாள் இதுவே. பரிசுத்த தேவன் விரும்புவது தம்முடைய பிள்ளைகளும் பரிசுத்தமாக வாழவேண்டும் என்பதே. ஆமென். “தேவனுடைய ஆவியினாலே எவர்கள் நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் அனைவரும் தேவனுடைய குமாரர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில், திரும்பவும் பயப்படுவதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற சுவீகார புத்திர ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:14,15).
அவருடைய ஜனங்கள் என்ற ஸ்தானத்திலிருந்து அவருடைய பிள்ளைகள் என்ற அந்தஸ்து பரிசுத்தஆவியானவர் நமக்குத் தருகிறார். ஆமென். பரிசுத்த ஆவிக்கு இன்னொரு பெயர் புத்திர சுவீகார ஆவி! இதுதான் உண்மையான விஷயம். நாம் புத்திர சுவீகார ஆவியைப் பெற்றுக்கொண்டு "அப்பா, பிதாவே" என்று கூப்பிடுகிறோம். பரிசுத்தமாக இருப்பவர்தான் நீதிமான்கள். “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது (சங்.34:15). சங்கீதம் 34 - 17 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். பரிசுத்த ஆவியின் வல்லமை
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். (அப்போஸ்தலர் 1:8). நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சிகளாய் இருக்கிறோமா?
ஜெபம்: மகிமையின் தேவனே, ஆண்டவராகிய நீர் வெறுக்கும் அருவருப்புக்களை நான் செய்யாதவாறு இருக்க எனக்கு உதவி செய்யும். உமக்கும் எனக்கும் இடையில் நின்று, என்னை உம்மை விட்டுப் பிரிக்கின்ற விக்கிரகங்களை அடையாளங்கண்டு இன்றே அவற்றை அகற்ற உதவியருளும். நான் ஓழிந்து போவதற்கு காரணமாக இருக்கும் பெருமையை என்னை விட்டு அகற்றும் ஆண்டவரே. ஆமென்.
வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவ
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே
பெந்தெகொஸ்தே நாளைப் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும்
