சிறை இருப்பை மாற்றும் தேவன் - திடன்கொள், எழுந்திரு, அழைக்கிறார்–

10/09/2026 16:33

சிறை இருப்பை மாற்றும் தேவன் -  திடன்கொள், எழுந்திரு, அழைக்கிறார்–

மாற்கு  10- 46 பின்பு அவர்கள்  எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் (இயேசுவும்) அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். 47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான்.   48 அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.  49 இயேசு நின்று, அவனை அழைத்து வரச்சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். 50 உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.     51 இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.  52 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.   மத்தேயு:15-22 கானானிய பெண் “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப் படுகிறாள். ....அங்கும் அற்புதம் நடக்கிறது. 

 

ஆண்டவர் அவரது பிள்ளைகளாகிய நமக்கு எரேமியா தீர்க்கதரிசி மூலம் ஒரு Emergency number கொடுத்திருக்கிறார் : எரேமியா 33-3 கரத்தர் சொல்லுகிறார், என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.  ஆமென்...

இது எரேமியா தீர்க்கதரிசிக்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், அவருடைய பிள்ளைகளுக்கு ஆதியும் அந்தமுமான இயேசு கிறிஸ்துவாகிய யேகோவா தேவன் கொடுத்த இந்த மாற்றம் தரும் வாக்குத்தத்தமான வார்த்தைகள்.

 

சரி இந்த அதிகாரத்தில் மேலும் 6ம் வசனத்தில் இருந்து தொடர்ச்சியாக பாப்போம் என்றால், இதோ நான் அவர்களுக்கு(அவரை நோக்கிக் கூப்பிடும் அவரின் பிள்ளைகளுக்கு) சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி அவர்களை குணமாக்கி அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன், என்றார். 7 நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டவிழ்த்து.......அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன் என்றார்..  ஆமென்

 

ஆக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றல் “சிறையிருப்பை மாற்றுகிற தேவன்” நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.  இதை நாம் வேதத்தில் அனேக இடங்களில் பார்த்தாலும் இன்று......இதை நாம் நமக்குத் தெரிந்த மாற்கு  10- 46 முதல் 52 வரை ஆண்டவராகிய இயேசு, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்ற கண்தெரியாத அந்த மனிதனை சுகமாக்கி அவனுடைய சிறையிருப்பாகிய கண்கள் பார்வை இல்லாதவனாக, யாருக்கும் பயன்படாதவனாக,  சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட, நாற்றம் எடுத்த அவனது வாழ்வை மாற்றி, கனி கொடுக்கும் வாழ்வாக அவனது சிறையிருப்பை மாற்றிய  அன்பின் வாக்கியங்கள்.

இந்த நிகழ்வு மூலம் ஆண்டவர் நமக்குத் தரும் இரண்டு அறிவுரைகளை நாம் தெரிந்து கொள்வோம்.

 

முதலாவதாக, ஒருவேளை நாம் இன்றைக்கு ஏதோ ஒரு சிறையிருப்பில் இருப்போம் என்றால் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் இயேசுவிடம் நமது கவனம் திரும்ப வேண்டுமெனில், ...அதை நாம் இந்த குருடனாய் இருந்த அந்த பர்திமேயுவின் அற்புதம் நடந்த நிகழ்வு மூலம் தெரிந்து கொள்ளலாம்.  பர்திமேயு மனிதர்கள் மத்தியில் தான் வாழ்கின்றான், மனிதர்கள் தரும் பிச்சைக் காசுக்காக, மேலும் தனிமையான நிலை, மனிதர்கள் அவனை எவ்விதம் நடத்தினார்கள் என்று பாப்போம் என்றால் மிகவும் கீழ்த்தரமாக, அதட்டும் மக்களை நாம் பார்க்கலாம், ஆம் அவர்கள் மத்தியில், தெரு ஓரத்தில் அந்த மனிதர்களிடமே பிச்சை எடுக்கும் அவனை ஆண்டவர் மாற்றிய பின்பு அவன் அவரின் பின்னாக செல்லும் ஊழியனாக மாறும் நிலையைப் பார்க்கலாம். 51 இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.  52 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

இங்கே இந்தச் ஜனக்கூட்டத்தின் மத்தியில் அவனது குறிக்கோள் இயேசுவை சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே.  நாமும் கூட அனேக நேரங்களில் ஆண்டவரிடம் விசுவாசம் வைக்காமல், மனிதர்களை நம்பி மோசம் போன நிலையில், அவர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்திருப்போம், ஒரு வனாந்திரமான சூழலில், முட்டுச்சந்தில், வேறு வழியில்லை என்ற  அந்த நிலையில் இருக்கலாம். அன்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் செங்கடல், இரண்டு பக்கமும் சீனாய் மலை, பின்னால் பார்வோன் சேனை பின்தொடர்ந்து வருகிறது என்ற சூழல்,  எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஒரு மாற்றமும் வரவில்லையேநாங்கள் அழிந்துபோகிறோமே, இதற்கு என்னதான் தீர்வு என்ற நிலையிலும் இருக்கலாம். அந்த நிலை மாற வேண்டுமானால் நாம் மனிதனை நம்பியது போதும், இந்த பர்திமேயு போன்று விசுவாசத்தோடு ஆண்டவரை நோக்கி கூப்பிடுவோம். அப்பொழுது நமது நிலை மாறும் என்று ஆண்டவர் இன்று இந்த வேதவசனம் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகிறார், பிரியமானவார்களே. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.  

வேதாகமத்தின் மைய வசனம் :  சங்கீதம் 118-8 “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்”. ………மனிதனை நம்புவதை விட கர்த்தரை நம்புவதே நல்லது.    

 

ஆம் வழியோரமாக அமர்ந்து பிச்சை கேட்கும் அந்த பர்திமேயு என்பவர் பிறவியிலேயே கண்களில் பார்வையில்லாத குருடராக இருக்கிறார். யாசகம் கேட்டும் நிலை, உலகைப் பார்க்கமுடியாத கண்கள், எதுவும் தெரியாத நிலை, வழியருகே அமர்ந்திருக்கும் நிலை, புழுதியில் இருக்கும் நிலை, சொந்த வீட்டாரால் மற்றும் மற்ற மக்களால் அதாவது சமுதாயத்தால் ஓதிக்கிவைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட நிலை, அடுத்தவரை நம்பி வாழும் நிலை, அடுத்த வேளை என்ன கிடைக்கும் என்று தெரியாத நிலை, ஆண்டவரின் படைப்புகளை பார்க்க முடியாத நிலை, எதிர்காலம் என்ன ஆகும் என்று தெரியாத நிலை, உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாத நிலை.  ஆக இந்த நிலைகளில் இருக்கும் ஒரு மனிதன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருகிறார் என்று கேட்டவுடன், “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும்” என்று விசுவாசத்தோடு உள்ளத்தின் ஆழத்திலிருந்து கூப்பிடத் தொடங்கினான்.  தொடந்து சத்தமாக கூப்பிடுகிறவனாய் இருக்கிறான். இக்கட்டான சூழலில் நமது கவனம் இயேசுவின் மேலேயே  இருக்கவேண்டும் என்றால் நமத கூப்பிடுதல் எப்படி இருக்கவேண்டும், இந்த பர்திமேயு கூப்பிட்டது போல இருக்கவேண்டும்.   இங்கே  மக்கள் அதிகமாக இருந்தாலும், இயேசுவின் கவனம் பர்திமேயுவின் மேல் திரும்ப அவன் செய்த செயல் என்ன, “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும், என்று தொடந்து விசுவாசத்தோடு, உள்ளத்தின் ஆழத்தில் இருந்து சத்தமாக கூப்பிடுகிறவனாய் இருக்கிறான்”,.  அவன் கூப்பிடுதலைக் கேட்டு ஆண்டவர் அவனது சிறையிருப்பை மாற்றினார். ஆமென்.

 

இரண்டாவதாக, ஆண்டவர் இன்று நமக்கு கொடுத்திருக்கும் வேலை என்னவென்றால் நாற்றம் எடுத்த நிலையில் இருக்கும் ஆத்துமாவை, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆத்துமாவை ஆண்டவரண்டை கொண்டு செல்லவேண்டும், இங்கே முதலில் பர்திமேயுவை அதட்டிய சமுதாயம், அந்தக் குருடனை ஒதுக்கிய சமுதாயம், பின்னர் இயேசு பர்திமேயுவைக் கண்டு அவனை  அழைத்தபோது, அந்த சமுதாயம் அந்த குருடனிடம் சென்று அவனை அழைத்து, திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்..ஆமென். ...மாற்கு10-49.“Cheer up! On your feet! He’s calling you.”

 

அழிந்துகொண்டிருக்கிற ஆத்துமாக்களிடம் சென்று மகனே, மகளே உன்னை அன்போடு அழைக்கிறார் . திடன்கொள், எழுந்திரு, உன்னை ஆண்டவர் இயேசு அழைக்கிறார் என்று கூற வேண்டும். நாற்றம் எடுத்த நிலையில் இருக்கும் ஆத்துமாவை அவர்களின் சிறையிருப்பில் இருந்து மீட்க நமது ஆண்டவராகிய இயேசுவினிடம் அவர்களை அழைத்துச் செல்லவேண்டும், இயேசுவிடம் விசுவாசத்தோடு கேட்கும் போது அவர் கொடுப்பார் என்பதை கூறுவதோடு ஆண்டவர் உங்களை தனது அன்பான மகனே, மகளே என்று அழைக்கிறார் என்பதை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும். நமது ஆண்டவர் உயிரோடு இருக்கிறவர் என்பதை, யோபு பக்தன் சொன்னது போல “என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்” என்பதை சாட்சியாக கூறவேண்டும்.  நாற்றம் எடுக்கும் வாழ்வில் இருக்கும் ஆத்துமாக்களை நோக்கி அன்பு பிள்ளைகளே, இதுவரை மனிதர்களை நம்பி ஏமாந்தது போதும், கேவலப்பட்டது போதும், உனது சிறையிருப்பு மாறவேண்டுமென்றால் ஆண்டவரிடம் வா என்று அழைத்து வருபவராக நாம் மாற வேண்டும் என்பதே ஆண்டவரின் எதிர்பார்ப்பு. அந்த வேலையாகவே ஆண்டவர் நம்மிடம் புதிய ஏற்பாட்டை இதைப் போன்ற மக்களுக்கு கொடுக்கும்படி அழைத்திருக்கிறார்.  நாம் இதை சரியாக செய்கிறோமா, அல்லது ஒரு கடமறைக்கு ஏனோ தானோ என்று செய்கிறோமா. அல்லது இதற்கென்று ஒரு சிறு கூட்டம் இருக்கிறது அவர்கள் மட்டும் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருக்கிறோமா, பர்திமேயுவின் வாழ்வின் சிறையிருப்பை மாற்றிய தேவன் அழிந்துகொண்டிருக்கிற ஆத்துமாவின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவர வல்லமை உள்ளவராக இருக்கிறார் அல்லவா.  அதற்கு நாம் எந்த விதத்தில் ஆண்டவரின் உடன் வேலைக்காரராக இருக்கிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே நம்மில் யாரும் இந்த நிலையில் இருக்கிறோமா, இல்லை என்பது தானே நமது விடை.  எனக்குத்தான் கண்கள் நன்றாக இருக்கிறதே, என்னை ஆண்டவர் ஆசிர்வதித்து இருக்கிறாரே ஆக நான் குருடன் இல்லை என்று சொல்லலாம்.  ஆம் பிரியமானவார்களே ஆனால் நாம் கண்கள் இருந்தும் குருடராய் சில வேளைகளில் இருக்கிறோம் அல்லவா அல்லது ஆன்மீக குருடராய் பல சூழலில் இருக்கிறோம் அல்லவா?  பர்த்திமேயு குருடனாய் இருந்தான் நாம் கண்கள் இருந்தும் குருடராய் இருக்கிறோம்.  இந்த நிலை மாற ஆண்டவர் அன்போடு கூப்பிடுகிறார். 

 

இன்றைக்கு அனேக மக்கள் பல கிருஸ்தவர்கள்கூட சோம்பேறியாய் ஒரே இடத்தில், மாற்றம் இல்லாமல், நாற்றம் எடுக்கும் சூழல் இருந்தாலும் மாறாமல் இருக்கும் நிலையை நாம் பார்க்கலாம்,  ஆவிக்குரியவர்கள் அல்லது ஊழியர்கள் என்று சொல்லுபவர்கள் ஒவ்வொருநாளும் அடுத்த வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும்.  அதுதான் ஆண்டவர் விரும்புவது.  நாம் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து அவர்களிடம் சென்று ஆண்டவர் உன்னை அழைக்கிறார் என்று கூப்பிட ஆயத்தமா. 

 

அருமை மகனே மகளே, நீ முதலில் திடன்கொள், பிறகு எழுந்திரு, புழுதியில் இருந்து எழுந்திரு, பிச்சைக்காரத்தனத்தில் இருந்து எழுந்திரு, குருட்டுத்தனமான வாழ்வில் இருந்து எழுந்திரு என்று நம்மால் சொல்ல முடியுமா. இன்று அநேகர் யார் உண்மையான கடவுள் என்று கேட்கும் நிலையில் இருக்கிறார்கள்.  இந்த மாதம் 12ம தேதி நடந்த பெரிய விமான விபத்தில் சுமார் 250 ம் அதிகமானோர் மாண்டுபோயினர். அப்பொழுது என்னிடம் ஆண்டவரை சில வருடங்களுக்கும் முன்பதாக ஏற்றுக் கொண்ட ஒரு சகோதரி வந்து சார், இதில் ஒருவர் கூட ஆண்டவர் பிள்ளை இல்லையா? என்று தப்பித்த ஒருவர் கூட யாரோ தெரியவில்லை, என்றார்.

அதேநேரம் ஒரு வெளிநாட்டு ஊழியர் இந்தியாவில் விமான விபத்து நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பாக கூறிய வீடியோ ஒன்றும் வலம்வந்தது.  அதில் அந்த ஊழியர் நான்தான் Lion of Judha என்றாரே பார்க்கலாம். அப்பொழுதே அவர் கள்ளத் தீர்க்கதரிசி என்பது தெளிவாகிறது.  அதை அந்த சகோதரிக்கு நான் விளக்கிய பிறகு அவர் ஒரு தெளிவு பெற்றார். கடைசி நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சரி.

 

இதைப் போல திடீரென்று மரணங்கள் நடப்பதும் ஆண்டவரின் திட்டம் என்று மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும், மரணம் அனைவரும் சந்திக்கும் நியதி.  ஆண்டவருக்கு மறைவானது ஓன்றும் இல்லை என்பதை நாம் புரியவேண்டும்.  கிருஸ்தவராகிய அல்லது விசுவாசியாகிய எனக்கும் அல்லது எனது குடும்பத்திற்கும் இந்த மரணம் வரலாம்.  ஆண்டவர் எதிர்பார்ப்பது நல்ல                   அதுமட்டுமல்ல அமெரிக்க தேசத்தில் twin tower தகர்க்கப்பட்ட பொழுது அங்கு ஒருவர் கூட ஆண்டவரின் பிள்ளை இல்லையா என்றோம்.  ஆம்போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை முடித்தேன், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.  அதை அடைவதே நம்முடைய நோக்கம்.

 

அன்பானவர்களே விபத்து, ஆபத்து, Covid போன்ற உயிர்கொல்லி நோய், போர், மற்றும் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் இந்த நாட்களில் நாம் எவ்வாறு ஆண்டவரை மற்றவர்களுக்கு அறிவிப்பது என்பது இந்த பகுதியில் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.  விமானத்தில் பயணிப்பதால் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம் கிடையாது, அதில் ஆண்டவருக்கு பிரியமானவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆண்டவரின் சித்தம் விபத்து நடந்தது.  ஒருவேளை ஆண்டவர் கூறியது போல அவருடைய பிள்ளைகள் யாரவது அவர்களுக்கும் ஆண்டவர் கூப்பிடுகிறார் என்று கூறி இருந்தால் அவர்களும் புழுதியில், குருடனாய் கிடந்த திமொதேயு போன்றவர்கள் கூட ஆண்டவருக்கு பின் சென்று இருக்க முடியும். 

 

ஆனால் அவருடைய பிள்ளைகளாகிய நமது வேலை என்ன அவருடைய அருகில் அவர்களை கூட்டிச் செல்லவேண்டும். ஆண்டவரின் கடைசி வார்த்தைகளை நாம் பின்பற்றி அவருக்காக வேலை செய்யும்போது ஆண்டவர் பெரிய காரியங்களை அவர்கள் வாழ்விலும் நமது வாழ்விலும் செய்வார்.  அந்த கடைசி வார்த்தைகள் என்ன “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாய்இருப்பீர்கள் என்றார். அப்.1 :8.  அவரின் வேலையை செய்யும் முன்பாக பரிசுத்தாவியானவரின் உதவியோடு பெலன் பெற்று சாட்சிகளாய் முதலில் வாழ வேண்டும்.  இந்த சாட்சியின் ஜீவியம் நம்மிடையே இருக்கிறதா. இந்த நாளில் நம்மையே ஆராய்ந்து பார்த்து பரிசுத்தாவியைப் பெற்று பெலன் பெறுவோம் சாட்சியாய் மாறுவோம். அப்பொழுது நமக்கு நிறைய ஆத்துமாக்கள் கிடைக்கும்.  கேளுங்கள் அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள், உங்கள் சந்தோசமும் முழு நிறைவு பெறும். யோவான் 16-24 – ஆமென்  அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்களை நாம் எப்படி சந்திப்பது அவர்கள் எப்பொழுது ஆண்டவரின் அருகில் வர முடியும்.  இதற்கு நேரம் காலம் சூழல் எல்லாம் கிடையாது. 

 

ஒருவேளை நாமே ஆண்டவரை நோக்கி இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று கூப்பிடும் நிலையில் இருக்கலாம்.

ஆம் பிரியமானவார்களே, அந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு நமது வாழ்விலும், நாம் சந்திக்கும் ஆத்துமாக்கள் வாழ்விலும் சிறையிருப்பை மாற்றுபவராக இருக்கிறார். ஆக நாம் செய்யவேண்டியதெல்லாம் “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு, எங்களுக்கு இறங்கும்” என்று விசுவாசத்துடன் கேட்போம், “விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” என்பதை மனதில் கொண்டு முக்கியமாக “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்”. என்பதை புரிந்தவர்களாக.   கர்த்தர் எரேமியா தீர்கதரிசி மூலம் சொன்ன தீர்கதரிசன வார்த்தையாகிய எரேமியா 33-3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.  என்று நமக்கு இன்றைக்கு கூறுகிறார்.  ஆமென்... ஆண்டவர் தாமே இந்த வசனங்களை நமக்கு ஆசிர்வாதமாக ஆக்கித் தருவாராக.  ஆமென்.