திறக்கப்பட்ட கண்கள்

13/09/2025 16:36

குருடனான பர்திமேயு கண்கள் திறக்கப்பட்டது ஓன்று, இரண்டாவது ஆதாம் ஏவாள் கண்கள் திறக்கப்பட்டது.

மாற்கு 10-52  அவன்(பர்திமேயு) பார்வையடைந்து வழியிலே இயேசுவுக்குப் பின் சென்றான்.

ஆதி  4-7 ; அப்பொழுது அவர்கள்(ஆதாம் & ஏவாள்) இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது, அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்.

ஒரு கண்தெரியாத மனிதன், கண் தெரிந்த மனிதனிடம் ஐயா கடல் எப்படி இருக்கும் என்றாராம். அவர் கடலைப் பற்றி விவரித்தாராம்,  அதின் தண்ணீரின் கலர் எப்படி இருக்கும், அது நீலக்கலரில் இருக்கும், உடனே கண்தெரியாத மனிதன், அய்யா நீலக் கலர் எப்படி இருக்கும் என்றாராம், அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று அவருக்கு தெரியவில்லை. இதைபோலவே ஆவிக்குரிய குருடராகக்கூட பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு இயேசு என்ற ஒருவரைப் பற்றி மட்டுமே தெரியும் அல்லது சரியாக தெரியாது அல்லது சிலருக்கு தெரியவே தெரியாது, மற்றும் சிலர் தெரிந்தும் அவருடைய வழியில் நடப்பது இல்லை, அவர்தான் பாவங்களை மன்னித்து நமக்கு இரட்சிப்பு கொடுக்கிகிறவர், பரலோகம் செல்லும் வழி அவர்தான், பரிசுத்த வாழ்வு என்றால் என்ன, பரலோகம் என்றால் என்ன, நித்திய ஜீவன், நித்திய வாழ்வு என்றால் என்ன? நித்திய வாழ்வாகிய பரலோகம்தான் நமது நிரந்தர இருப்பிடம் என்பதையெல்லாம் தெரிந்தும் தெரியாததுமாக இருக்கும் கூட்டம், இந்த கண்கள் இருந்தும் குருடராய் இருக்கிற ஒரு கூட்டம் பற்றி கூருகிறார் ஏசாயா 43-8 கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும் காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள், ஆவிக்குரிய கண்களானாலும் சரி, மாம்ச கண்கள் ஆனாலும் சரி பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கும் போது மட்டுமே ஆண்டவரைப் பார்க்கமுடியும்.. அதைவிட நம்மையே சரியாக அறிந்து கொள்ள அல்லது நிதானிக்கவும் முடியும். ஆமென்

ஞாயிறு ஆலயத்திற்கு செல்லுகிறோம், ஏதோ போதகர் சொல்லுவதை பாவ அறிக்கை, விசுவாச அறிக்கை என்று நாமும் சொல்லுகிறோம், இரண்டு, மூன்று பாட்டு பாடுகிறோம், கைகளைத் தட்டு என்றால் தட்டுகிறோம், அல்லோலுயா என்று சொல்லுங்கள் என்றால் சொல்லுகிறோம், கைகளைத் தூக்கு என்றால் தூக்குகிறோம், காணிக்கையைப் போட்டு விட்டு, ஏதோ ஒரு பெரிய கடமையைச் செய்தால் போல ஆலயம் முடிந்தால், சில வேளையில் ராப்போஜனமும் பெற்றுவிட்டு எப்பொழுதும் போல வீட்டிற்கு சென்று விடுவது கிறிஸ்தவம் அல்ல. கண்ணிருந்தும் குருட்டுக் கிருஸ்தவர்கள்.

இங்கே இரண்டு விதமான பார்வை அடைதலைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்., முதலாவது பர்திமேயுவின் கண்கள் திறக்கப்பட்டது. மாம்ச கண்கள், ஒருபக்கம் கர்த்தராகிய ஆண்டவர் குருடரின் மாம்ச கண்களை திறந்தார், பர்திமேயு கண்கள் திறக்கப்பட்டதும் இயேசுவைக் காண்கிறான்.  இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்ற விசுவாச அறிக்கையால் இழுக்கப்பட்ட இயேசுவானவர் அவனை அழைக்கிறார், அவன் எழுந்து மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு பின்னர் அவரிடம் வருகிறான். அவர் அவனுக்கு வேண்டியதை கொடுக்கிறார். அவன் கண்கள் திறக்கப்பட்டதும் அவன் இயேசுவைப் பார்க்கிறான். அவனும் ஆண்டவருக்கு பின் செல்கிறான். அவரைத் பின்பற்றுகிறான். ஆமென்

 

ஆனால் இரண்டாவதாக மறுபக்கம் சாத்தான் ஆதாம் ஏவாளின் கண்களை திறப்பதாக சொல்லி ஆவிக்குரிய கண்களை குருடாக்கிக் விட்டான்., ஆனால் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது என்று வேதம் கூறுகிறது, ஆம் சாத்தானின் பார்வையில், பாவத்தின் பிடியில் சிக்கிய பின்னர்  இந்தப் பாவஉலகம் பார்க்கும் விதத்தில் கண்கள் திறக்கப்பட்டது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.  இங்கே ஆதாமும் ஏவாளும் தங்கள் கண்கள் திறக்கப்பட்டு தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதைக் காண்கிறார்கள்.  உங்கள் கண்கள் திறக்கப்பட்டதும் நீங்கள் காண்பது என்ன? அதுதான் கிறிஸ்தவம் நமக்குச் சொல்லிக்கொடுக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு செல்வந்தனின் ஒரே மகனை சிலர் கடத்திச்சென்று அவன் கண்களில் கரப்பான் பூச்சியைக் கட்டி ஒரு இருண்ட அறையில் போட்டுவிட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து பார்த்தபோது அந்த கரப்பான் பூச்சி அவன் கண்களை குருடாக்கிப் போட்டது. அதன்பின்பு அவனை வேறு மாநிலத்திற்கு அனுப்பி அங்கே பிச்சை எடுக்குமாறு செய்வதற்கு அவனை விற்று விட்டனர். எவ்வளவு சீரும் சிறப்பாக இருந்த சிறுவன் இப்பொழுது கண்தெரியாத ஒரு பிச்சைக்காரன். சாத்தானும் இவ்விதமாகவே ஆதாமுக்கும் ஏவாளுக்கும்(இந்த மனித குலத்தின் முதல் மனிதர்கள்) செய்தான். ஆவிக்குரிய கண்களை தேவன் கொடுத்திருந்தும் அதை இழந்து போனார்கள்.

இங்கே சாத்தான் பாவம் செய்ய அவர்களை தூண்டி இச்சை அடையச் செய்து, கீழ்படியாமையால் ஆவிக்குரிய கண்களை இழந்து போவதை நாம் பார்க்கலாம்.  அவர்களின் கண்கள் திறக்கப்பட்டவுடன் அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்பதை அறிந்து தங்களுக்கு வஸ்திரம் வேண்டும் என்று கண்டார்கள். அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட போது, பாவத்தினால் வந்த கொடிய விளைவைக் கண்டார்கள்.  தேவனால் கைவிடப்பட்ட பரிதாபமான நிலையக் கண்டார்கள்.  தேவனுடைய மகிமை தங்களைவிட்டு எடுபட்டுபோனதைக் கண்டார்கள். பாவமும் சாபமும் மரணமும் தங்களைச் சூழ்ந்துகொண்டது என்பதைக் கண்டார்கள். அப்படியாக இந்த உலகில் சாத்தான் பாவத்தை அனுப்பினான், அனுப்புகிறான், அனுப்பிக் கொண்டுதான் இருப்பான்.

கொஞ்சம் யோசித்தால் ஒவ்வொரு மனிதனும் பாவ உணர்வடையும்படி அவரவர்க்கு ஆவிக்குரிய மனக்கண்கள் திறக்கபட்டால் எவ்வளவு நலமாய் இருக்கும் அல்லவா.  அப்பொழுது பாவத்திற்காக மனங்கசந்து அழ முடியும். வேதம் சொல்லுகிறது, பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் .(எசேக்கியேல் 18-20.  அதுமட்டுமல்ல நாமும் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாக இருப்போம்.

ஒரு பாவி மரிக்கும்போது அவன் ஆத்துமா நிர்வாணமாய் வெளியே வருகிறதைக் காண்பான் ஆனால் பரிசுத்தவான் மரிக்கும்போது, தேவன் அவனுக்கு கொடுத்த இரட்சிப்பின் வஸ்திரத்தோடும், நீதியின் சால்வையோடும் துதியின் ஆடையோடும் கடந்துசெல்லுவார்கள்.  ஆமென்.  வேதம் சொல்லுகிறது “மணவாளன் ஆபரணக்களினால் தன்னை அலங்கரித்துக் கொள்ளுகிரதற்கும் மணவாட்டி ஆபரணங்களினால் தங்களை மணவாட்டி நகைகளினால் தன்னை சிங்காரித்துக் கொள்ளுவதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி நீதியின் சால்வையை எனக்குத் தந்தார்.. ...ஏசாயா 61-10.

அருமையானவர்களே, இந்த உலகில் கண்கள் தெரியாமல் வாழ்வது  எத்தனை பரிதாபமான காரியம் அல்லவா. கர்த்தர் நமக்கு கிருபையாக இரண்டு கண்களைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நாம் எவ்வளவு நன்றி உள்ளவர்களாய் இருக்கவேண்டும்.

ஆண்டவருடைய காருண்யம் என்னவென்றால், சங்கீதம் 146-8,9 – குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார், மடங்கடிக்கப்பட்டவர்களை கர்த்தர் தூக்கிவிடுகிறார், நீதிமான்களை கர்த்தர் சிநேகிக்கிறார், பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் சரீரப்பிரகாரமான கண்களை மாத்திரம் அல்ல, ஆவிக்குரிய கண்களையும் திறந்து அவைகளைப் பிரகாசிக்கச் செய்ய வல்லமை உள்ளவர்.  ஆமென்.  பவுல் எபேசியர் 1-19 இல் கூறுகிறார், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு அவர் உங்களுக்கு பிரகாசமான மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.  ஆண்டவருடைய வல்லமையை சரியாக புரிந்துகொள்ளுவதே ஆவிக்குரிய கண்களால் மாத்திரமே முடியும்.

ஒரு பக்கம் ஆண்டவர் ஆவிக்குரிய குருடரின் கண்களை திறக்கிறார், மறுபக்கம் சாத்தான் திறந்திருக்கிற கண்களை குருடாக்கிக் கொண்டிருக்கிறான். ஆண்டவரின் குணாதிசயங்களில் ஓன்று என்று இயேசு சொன்னது “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேன்றோன்றுக்கும் வரான். நானோ அவர்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன் என்கிறார்.

சிம்சோன் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டவன் ஆனால் சாத்தானோ வேசிமயக்கத்தை கொண்டுவந்து சிம்சொனின் கண்களை குருடாக்கி அவன் வாழ்வை கெடுத்து விட்டான் அல்லவா. பெலிஸ்திய குரங்காட்டி குரங்கை வைத்து வித்தை காட்டுவது போல இஸ்ரவேலின் நியாயாதிபதி ஆகிவிட்டான். என்ன பரிதாபம். ஆம் பிரியமானவார்களே, கண்களில் இச்சையும், விபச்சார மயக்கமும் நம்முள் நுழையாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். ஆக நம்முடைய ஜெபம் எப்படி இருக்கவேண்டும், ஆண்டவரே ஆன்மீக தரிசனத்தைக் கொடுக்கும் கண்களை நான் இழந்து போகாமல் இருக்க கிருபை தரவேண்டும் என்று அனுதினமும் ஜெபிக்க வேண்டும். அழிந்து  அழிந்துகொண்டிருக்கிற அனேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய ஆண்டவரின் ஆன்மீக தரிசனம் தேவை. அதற்கு ஆண்டவரின் ஆன்மீக கண்கள் தேவை.  ஆமென். இன்றைக்கு அநேகர் என் மகன், மகள் சரியாக படிப்பதில்லை அல்லது வேறு வேலைக்கு செல்லமுடியவில்லை என்பதால் போதகர் அல்லது ஊழியர்கள் ஆவதை நாம் பார்த்திருக்கலாம்.  அதுதான் அநேகரின் உண்மை நிலையும்கூட. 

மேலும் வேதத்தில் நாம் பார்க்கலாம், இஸ்ரவேலின் ராஜா சிதேக்கியாவுக்கு ஒரு பரிதாப நிலை ஏற்ப்பட்டது. அவன் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்காமல், அவன் மரணமடையும் மட்டும் விலங்கு போட்டு கண் தெரியாமல் காவலில் அடைத்து வைக்கப்பட்டான். என்ன பரிதாபம். ஆண்டவர் சொல்லுவதைக் கேட்க வேண்டுமானால் நமக்கு ஆன்மீக கண்கள் தேவை.  

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய எச்சரிப்புகளுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுங்கள், எப்போதும் தூய்மையாய் நடந்து கர்த்தருடைய கிருபைக்குள்ளே நம்மைக் காத்துக் கொள்வோம்.  கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் தெளிவாயிருக்கும். மத் 6 -22.

ஆண்டவர் நமது மாம்சீக கண்களையும், ஆவிக்குரிய கண்களையும் திறக்கப்பட நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஆண்டவரே தாவீதின் குமாரனாகிய இயேசுவே எனக்கு இரங்கும் என்று ஜெபித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

சகரியா 4:10- அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

நீதிமொழிகள் 15:3 - கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

எரேமியா 16:17 - என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

நீதிமொழிகள் 5:21 - மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

1 பேதுரு 3:12 - கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

சங்கீதம் 34:15 - கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

2 நாளாகமம் 6:20 - உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.

யோபு 34:21 - அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

சங்கீதம் 113:6 - அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

எரேமியா 32:19 - யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.

எபிரெயர் 4:13 - அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

  

“நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்…” (யோவான் 9:5)

கண்ணில் ஒரு சிறு உறுத்தல் என்றாலே உடனே மருத்துவரிடம் ஓடுகிறோம். சரீரக் கண்களின் அவசியத்தை உணருகிற நாம், நமது ஆவிக்குரிய கண்களைக் குறித்து கரிசனையற்றிருப்பது ஏன்? சரீரக் கண்கள் குருடாயிருநதால் இந்த உலகத்தைத்தான் பார்க்கமுடியாது. ஆனால், நமது ஆவிக்குரிய கண்கள் குருடாய்ப்போனால் நித்தியத்தையே பார்க்கமுடியாது.

அன்றைய பரிசேயருக்கு கண்கள் இருந்தும் குருடரைப்போலவே காணப்பட்டனர். இயேசு, ஒரு பிறவிக் குருடனைக் கண்டு, தரையிலே துப்பி, சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களில் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அவன் அப்படியே செய்து பார்வையடைந்தான். நடந்தது இதுதான். பரிசேயருக்கோ, அவனுடைய கண்கள் திறக்கப்பட்டது ஒரு பொருட்டல்ல; அது ஒரு ஓய்வுநாள் என்பதே பெரிய பிரச்சனையாயிருந்தது. அதனால், இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவரல்ல என்றனர். அந்த மனிதனோ அவரே குணப்படுத்தினார், ஆகவே “அவர் தீர்க்கதரிசி” என்று உறுதியாகச் சொன்னான். அவன் தான் பெற்றுக்கொண்ட புதிய வாழ்வை அனுபவிக்க அனுபவிக்க, தன்னைக் குணப்படுத்தியவரிடம் அவன் உறுதியான நம்பிக்கை கொள்ளத்தொடங்கியிருந்தான். அந்த நம்பிக்கை உறுதிப்பட உறுதிப்பட அவனுடைய சரீரக் கண்கள் மாத்திரமல்ல, “அவர் தீர்க்கதரிசி” (யோவா.9:17) என்று சொன்னபோதே அவனுடைய ஆவிக்குரிய கண்களும் திறவுண்டன. இதனால் அவன் பரிசேயருக்குப் பயப்படவுமில்லை. தாய் தகப்பன்மார் பின் வாங்கியதைக் குறித்தோ, ஜெப ஆலயத்திலிருந்து தள்ளப்பட்டதைக் குறித்தோ கவலைப்படவுமில்லை. அவனை இயேசு கண்டார். அவன் “ஆண்டவரே” என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

இவனுடைய சரீரக் கண்களுடன், ஆவிக்குரிய கண்களும் ஒளிபெற்றதால் இயேசுவை ஆண்டவராகக் கண்டான். ஆனால், சரீரக் கண்களில் குருடில்லாத பரிசேயரோ இயேசு செய்தவற்றைக் கண்டும், மத  வைராக்கியத்தாலும், பெருமையாலும் அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் குருடாக்கப்பட்டிருந்ததால், இயேசுவை ஆண்டவராக அவர்களால் பார்க்கமுடியவில்லை. அந்த மனிதன் பெற்றுக்கொண்ட உண்மையான ஒளியைத் தர வல்லவர் இயேசு ஒருவரே. இன்று நாமும் பரிசேயரைப்போல கண்களிருந்தும் குருடராயிருக்கிறோமா? அல்லது, நமது ஆவிக்குரிய கண்கள் ஒளி பெற்றிருக்கின்றதா? “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி”யாகிய… (யோவா.1:9) இயேசு தாமே நமது ஆத்துமாவையும் ஒளியடையச் செய்யும்படி நம்மை ஒப்புவிப்போமாக.

ஜெபம்: “தேவனே! இருளடைந்திருக்கும் என் ஆவிக்குரிய கண்களை ஒளியாகிய இயேசுவின் வார்த்தைகளுக்கூடாக ஒளியடையச் செய்யும். ஆமென்.”